தமிழ் எங்கள் மூச்சு.. ஆனால் உங்க வரலாறு?.. ஆளுநரை விளாசிய முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ் எங்கள் இனம்! அது எங்கள் உயிர்மூச்சு! தமிழ்மொழியைக் காக்க உயிர்களை நெருப்புக்குக் கொடுத்தவர்கள் தமிழர்கள். முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திற்கு அடிகோலியதோடு, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறுகளைத் தாங்கி நிற்கும் மண் இது. இந்த மண்ணின் தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
டிடி தமிழ் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பங்கேற்றிருந்த நிலையில், அந்நிகழ்வில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. மத்திய அரசின் தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷனின் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்கள் மற்றும் மத்திய அரசு சார்பில் கொண்டாடப்படும் ‘இந்தி மாதம்’ நிறைவு நாள் விழா நேற்றுன் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி தவிர்க்கப்பட்டது சர்ச்சையாக வெடித்தது.
இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் காட்டமான முறையில் பதிவு ஒன்றை வெளியிட்டு கண்டனம் தெரிவித்தார். ஆனால் கவனச்சிதறல் காரணமாக அந்த தவறு நடந்து விட்டதாக டிடி தமிழ் நிறுவனம் ஆளுநரிடம் மன்னிப்பு கேட்கும் வகையில் விளக்கம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலளித்திருந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “முதலமைச்சர் ஸ்டாலின் எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாகவும், துல்லியமாகவும் பாடுவேன் என தெரிவித்திருந்தார்.
மேலும் ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது” எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்கள், இணையவாசிகள் தமிழ்த்தாய் வாழ்த்து அவமரியாதை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
Also Read: Tirupati: திருப்பதி போக நினைக்கும் பக்தர்களே… இன்று முதல் ரெடியா இருங்க!
முதலமைச்சர் ஸ்டாலின் சரமாரி கேள்வி
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த பதிலுக்கு சரமாரியாக பதிலடி கொடுக்கும் வண்ணம் நீண்ட நெடிய பதிவு ஒன்றை வெளியிட்டு அதில் பல கேள்விகளை முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பியுள்ளார். அதாவது, ‘தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பக்திச்சிரத்தையோடு பாடுவேன்’ எனச் சொல்லும் நீங்கள், முழுமையாகப் பாடப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உடனே மேடையிலேயே கண்டித்திருக்க வேண்டாமா? அதனை ஏன் செய்யவில்லை? என கேட்டுள்ளார். மேலும் உரிமையோடு அந்த இடத்திலேயே தவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கலாமே! சரியாகப் பாடும்படி பணித்திருக்கலாமே? துல்லியமாக அந்தச் செயலை நீங்கள் செய்திருந்தால் எதிர்வினை ஏற்பட்டிருக்குமா? என கேட்டுள்ளார்.
தமிழ் எங்கள் இனம்! அது எங்கள் உயிர்மூச்சு! தமிழ்மொழியைக் காக்க உயிர்களை நெருப்புக்குக் கொடுத்தவர்கள் தமிழர்கள். முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திற்கு அடிகோலியதோடு, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறுகளைத் தாங்கி நிற்கும் மண் இது. இந்த மண்ணின் தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Also Read: Horoscope Today: இன்றைய நாள் யாருக்கு சாதகம்? – 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
அதேசமயம் தமிழைத் தலையில் தூக்கிப் போற்றுவதாக நீங்கள் கூறும் மோடி அரசு தமிழ்மொழிக்கு என்ன செய்தது? 2013-2014 முதல் 2022 -2023-ஆம் ஆண்டு வரை சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக டெல்லியில் உள்ள மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.2029 கோடி, திருப்பதியில் உள்ள தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.406 கோடி என மொத்தம் ரூ.2435 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு செலவிடப்பட்டதைவிட இரண்டரை மடங்கு அதிகம். இதே காலகட்டத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக வெறும் ரூ.167 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. அதாவது சமஸ்கிருதத்திற்குச் செலவிடப்பட்டதில் வெறும் 7 விழுக்காடு மட்டுமே தமிழுக்கு ஒதுக்கப்பட்டது’ எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
- “தமிழ்நாடு என்ற பெயரைப் புறக்கணித்து, தமிழகம் என்று அழைக்க வேண்டும்” என்றும்; “திராவிடம் என்ற கோட்பாடே பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தியதுதான்” என்றும் கூறியதை மறக்க முடியுமா?
- ‘திராவிட மாடல் காலாவதியான கொள்கை’ என ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி அளித்த வெறுப்புதானே, இன்றைக்குத் தமிழ்த்தாய் வாழ்த்து வரை வந்து நிற்கிறது?
- தமிழை நேசிப்பதாக இப்போது சொல்லும் நீங்கள் முன்பு, திருவள்ளுவர் படத்தைக் காவி நிறத்தில் ஏன் வெளியிட்டீர்கள்? எனச் சொல்ல முடியுமா?
- தமிழ்மீது ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குப் பற்றிருப்பது உண்மையானால், உலகப் பொதுமறையான திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்காமல் உங்களைத் தடுப்பது எது?
- பிரதமர் மோடி அவர்கள் அறிமுகப்படுத்தும் திட்டங்கள், தொடர்வண்டிகள், முன்வைக்கும் முழக்கங்கள் என ‘எங்கும் இந்தி – எதிலும் இந்தி’ என்ற கொள்கையுடன் இந்தியைத் திணிப்பது நீங்கள்தான்.
- ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்து அரசியல்சட்ட நெறிமுறைகளை மறந்து நாள்தோறும் அரசியல் பேசுவதும், ஆளுநர் மாளிகையை அரசியல் அலுவலகமாக மாற்றியதும் – திராவிட இனத்தையே கொச்சைப்படுத்திப் பேசி வருவதும் எந்த வகை அரசியல் நாகரிகம்? எந்த வகை கண்ணியம்?
- சட்டப்பேரவையில் நீங்கள் படிக்க வேண்டிய ஆளுநர் உரையில் கூட திராவிட மாடல், தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற பெயர்களைத் தவிர்த்தவர்தானே நீங்கள்?
- உங்கள் வரலாறு இப்படி இருக்கும்போது, #திராவிடநல்திருநாடு தவிர்க்கப்பட்டதைத் தற்செயலானது எனத் தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?
- அரசியலமைப்புச் சட்டப் பதவியில் சட்டப்புத்தகத்தின்படி பொறுப்பேற்றவர், வகுப்புவாதக் கும்பலின் கைப்பாவையாக மாறி, பிளவுவாத அழிவு விஷக் கருத்துகளைத் தமிழ்மண்ணில் விதைக்க நினைத்தால் அதன் வேரில் வெந்நீர் ஊற்றுவார்கள் தமிழ்நாட்டு மக்கள்
என முதலமைச்சர் ஸ்டாலின் தனது பதிலடி கேள்விகளை தொடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.