5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vanathi Srinivasan: “ஜிலேபியும் சாப்பிடல.. சண்டையும் போடல” வானதி சீனிவாசன் விளக்கம்!

அன்னபூர்ணா சீனிவாசன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக வீடியோ வெளியான நிலையில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் நான் ஜிலேபியும் சாப்பிட்டது இல்லை.. சண்டையும் போட்டது இல்லை என்று கூறியுள்ளார். 

Vanathi Srinivasan: “ஜிலேபியும் சாப்பிடல.. சண்டையும் போடல” வானதி சீனிவாசன் விளக்கம்!
வானதி சீனிவாசன்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 13 Sep 2024 16:42 PM

வானதி சீனிவாசன் விளக்கம்: அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம் தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.  நான் ஜிலேபியும் சாப்பிட்டது இல்லை.. சண்டையும் போட்டது இல்லை என்று கூறியுள்ளார்.  அன்னபூர்ணா சீனிவாசன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக வீடியோ வெளியான நிலையில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில்,  ”GST பிரச்சனை குறித்து குறைகளை கேட்பதற்காக டெல்லி இருந்து மத்திய அரசு அதிகாரிகள் வந்துள்ளனர். மத்திய அமைச்சரிடம் அவர் குறைகளை கூறினார். அப்போது நான் ஜிலேபி சாப்பிட்டதாகவும் சண்டை போட்டதாகவும் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் சொன்னார். நான் இதுவரை அந்த ஜிலேபியை அன்னபூர்ணா ஹோட்டலில் சாப்பிடதும் இல்லை. சண்டை போட்டதும் இல்லை. அடுத்த நாள் காலையில் எனக்கு தொடர்பு கொண்டு மன்னிப்பு தெரிவித்தார். மேலும் மத்திய நிதி அமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மதிய நேரத்தில் ஹோட்டலுக்கு வந்த அவர் மத்திய அமைச்சரை சந்தித்து மன்னிப்பு கேட்டார். தனது தவறுகளை ஒப்புக்கொண்டார். நான் ஆர்எஸ்எஸ் சார்ந்தவன் என்று பல்வேறு விஷயங்களை மத்திய நிதி அமைச்சரிடம் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் பேசினார்.  உங்கள் ஹோட்டலில் ஒரு பெண் எம்.எல்.ஏ என்ன சாப்பிட்டார் என்பதை எல்லாம் பொது வெளியில் பகிர்வது சரியா? என்று நிதியமைச்சர் சீனிவாசனிடம் கேள்வி எழுப்பினார்.   உடனே அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார்.  நாங்கள் யாரையும் மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கவில்லை. வேண்டும் என்றால் நேரடியாக அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசனிடம் போய் கேளுங்கள்” என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

என்ன நடந்தது?

கோவையில் சிறு, குறு தொழில் முனைவோர்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் சந்தித்துப் பேசினார். அப்போது அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரான சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டதோடு, தன்னுடைய ஆதங்கத்தைப் புலம்பித் தீர்த்து விட்டார். அதாவது, “ஒவ்வொரு பொருட்களுக்கும் வித விதமாக ஜி.எஸ்.டி போட்டு தருவது பிரச்சனையாக உள்ளது. உங்கள் அருகில் இருக்கும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் எங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர்.

எங்கள் கடைக்கு வரும்போதெல்லாம் சண்டை போடுகிறார். ஏனென்றால் எங்களுக்கு இனிப்புகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கிறீர்கள். உணவுக்கு 5 சதவிகிதம், காரத்துக்கு 12 சதவிகிதம், அடுத்ததாக பேக்கரி வகையில் பார்த்தால் பிரட் மற்றும் பன் தவிர மற்ற அனைத்திற்கும் 28% ஜிஎஸ்டி வரி விதிக்கிறீர்கள்.  வானதி சீனிவாசன் கடைக்கு வந்து முதலில் ஜிலேபி சாப்பிடுகிறார். அடுத்ததாக காபி குடிக்கும்போது காரம் தேவைப்படுகிறது. அந்த காரத்துக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி என சொன்னால் சண்டைக்கு வருகிறார்.

ஒரே பில்லில் ஒரு குடும்பத்திற்கு வெவ்வேறு விதமான ஜிஎஸ்டி போட்டு கொடுப்பது கஷ்டமாக இருக்கிறது. ஒரு பன்னுக்கு ஜிஎஸ்டி கிடையாது. ஆனால் பன்னுக்குள் வைக்கப்படும் கிரீமுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும்” எனக் கூறினார். இதை தொடர்ந்து அன்னபூர்ணா சீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நேரில் மன்னிப்பு கோரினார்.

மன்னிப்பு கேட்ட அண்ணாமலை:

இதுதொடர்பாக வெளியான வீடியோவில், ‘’நான் எந்தக் கட்சியிலும் இல்லை, தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். பொதுவாகத் தான் கேள்வியை முன் வைத்தேன்.  அது சர்ச்சையாகும் என்று எதிர்பார்க்கவில்லை’’ என்று கூறி இருந்தார். இது தொடர்பான வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த சூழலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சீனிவாசன் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியானதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் அவர் பதிவிட்டிருப்பதாவது, “அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசனிடம் நான் பேசினேன். மத்திய நிதி அமைச்சருக்கும், அன்னாபூர்ணா சீனிவாசனுக்கு இடையே நடந்த தனிப்பட்ட சந்திப்பின் உரையாடல் தொடர்பான வீடியோ பகிர்ந்து கொண்டதற்கு எங்கள் கட்சியினர் சார்பில் நான் மன்னிப்பு கேட்டேன். இந்த எதிர்பாராத சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். இந்த விவகாரத்தை மரியாதையுடன் இத்துடன் முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார்.

 

Latest News