டிரைவருடன் வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம்.. புது ரூல்ஸ் கொண்டு வந்த கோவை போலீஸ்!
பார்களில் ஓட்டுநருடன் வருவோருக்கு மட்டுமே மது கொடுக்க வேண்டும் என்றும், ஓட்டுநர் இல்லாவிட்டால் பார் நிர்வாகமே உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோவை காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து மதுபான கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டிருக்க வேண்டும் என்றும், அது நல்ல முறையில் இயங்குவதை தினம்தோறும் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை காவல்துறை: பார்களில் ஓட்டுநருடன் வருவோருக்கு மட்டுமே மது கொடுக்க வேண்டும் என்றும், ஓட்டுநர் இல்லாவிட்டால் பார் நிர்வாகமே உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோவை காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோவை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவது என்பது சட்ட விரோதமானது மற்றும் ஒரு பொறுப்பற்ற செயலாகும். இது குறித்து ஏற்கனவே கோவை மாநகர காவல்துறையால் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரஙகளும், பத்திரிக்கை செய்திகளும் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுப்பது தொடர்பாக ஏற்கனவே கோவை மாநகரில் உள்ள அனைத்து வகை மதுபானக்கூட உரிமையாளர்களுக்கும் கலந்தாலோசனை கூட்டங்கள் நடத்தி அதன் வாயிலாக அவர்களது மதுபானக் கூடஙகளுக்கு சொந்த வாகனங்களில் வருபவர்கள் திரும்ப செல்லும்போது மது அருந்திய சூழ்நிலையில் அவர்கள் வாகனத்தை இயக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read: மீண்டும் சிக்கல்.. சென்னையில் கார் பந்தயம் நடக்குமா? நீதிமன்றம் முக்கிய முடிவு!
இருப்பினும், மதுபானக்கூட உரிமையாளர் நிர்வாகிகள் தங்களது மதுபானக்கூடத்திற்கு மது அருந்த வருவோர், சொந்த வாகனத்தில் வந்தால் அவர் சொந்த டிரைவருடன் வர வேண்டும் உறுதிசெய்ய வேண்டும் என என்பதை கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், மது அருந்தியுள்ள ஒருவர், சொந்த டிரைவர் இல்லாத சூழ்நிலையில், அவர் பாதுகாப்பாக அவரது வீட்டிற்கு செல்வதற்கு தேவையான ஓட்டுநருடன் கூடிய மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும்.
அல்லது நம்பகத்தன்மை உள்ள வாகன ஓட்டுநர் ஒருவர் சம்மந்தப்பட்ட மதுபானக்கூடம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, மது அருந்திய நபரின் சொந்த வாகனத்திலேயே அவரை அழைத்துச் சென்று அவரது வீட்டில் விட்டு வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், மது அருந்த தங்களது மதுபானக்கூடங்களுக்கு வருபவர்கள் வேறு ஏதேனும் போதைப்பொருட்களை உபயோகிக்கிறார்களா என்பது குறித்தும், மது அருந்த வருபவர் உரிய வயது உடையவர்தானா என்பது குறித்தும் எச்சரிக்கையாக கண்காணிக்க வேண்டும்.
புதிய கட்டுப்பாடு:
மது அருந்த வருபவர் நடவடிக்கை சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்தால் உடனடியாக சம்மந்தப்பட்ட காவல் நிலைய காவல்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து மதுபானக்கூடங்களின் உட்புறமாகவும், வெளிப்புறமாகவும், வாகனஙகள் நிறுத்தும் இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டிருக்க வேண்டும். அது நல்ல முறையில் இயங்குவதை தினம்தோறும் கண்காணித்து, பராமரிக்க வேண்டும்.
சிசிடிவி பதிவுகள் குறைந்த பட்சம் ஒரு மாதமாவது இருப்பில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும். காவல்துறையினர் கோரும் பொழுது அது அவர்கள் வசம் ஒப்புவிக்கப்பட வேண்டும். மேலே கூறியுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட மதுபானக்கூட நிர்வாகம் தவறி அதன் மூலமாக ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட மதுபானக்கூட நிர்வாகத்தின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுபானக்கூட உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது” என இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.