Crime: பல்லடம் அருகே பகீர் சம்பவம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை
பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. தாய், தந்தை மற்றும் மகன் ஆகிய 3 பேர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அவிநாசிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள செம்மலை கவுண்டம்பாளையம் கிராமத்தில் தெய்வசிகாமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமாத்தாள் என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். பிள்ளைகள் இருவருக்கும் திருமணமான நிலையில் மகன் செந்தில் குமார் கோவை மாவட்டத்திலும், மகள் சென்னிமலையிலும் தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இதற்கிடையில் தெய்வசிகாமணி மற்றும் அலமேலு ஆகியோர் தங்களுடைய கிராமத்தில் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.
இப்படியான நிலையில் இன்று நிச்சயதார்த்த விழா ஒன்று இருந்ததால் அதில் பங்கேற்பதற்காக செந்தில்குமார் கோவை மாவட்டத்தில் இருந்து செம்மலை கவுண்டம்பாளையத்திற்கு வந்துள்ளார். நேற்றிரவு தாய், தந்தையுடன் வீட்டுக்குள் அமர்ந்து செந்தில் குமார் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு திடீரென மர்ம கும்பல் ஒன்று புகுந்துள்ளது. அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தெய்வசிகாமணியை கத்தியால் குத்தியதோடு மட்டுமல்லாமல் இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்தனர்.
Also Read: Crime: யூட்யூப் பார்த்து செயின் பறிப்பு.. சென்னையில் 3 பேர் கைது!
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து தெய்வசிகாமணியை காப்பாற்றச் சென்ற அவரது மனைவி அலமாத்தாலுக்கும், மகன் செந்தில்குமார் மீதும் கொடூரமான தாக்குதல் நடைபெற்றது. 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இன்று காலை நிச்சயதார்த்த விழா செல்வதற்காக தெய்வசிகாமணி அதே ஊரை சேர்ந்த சவரத் தொழிலாளி சக்கரகட்டி என்பவரை அதிகாலை நேரம் வீட்டிற்கு வருமாறு அழைத்திருந்தார்.
அவர் வீட்டு வாசலில் தெய்வசிகாமணியை அழைக்க வீட்டில் எந்தவித சத்தம் இல்லாமல் இருந்துள்ளது. கதவு திறந்து கிடந்த நிலையில் உள்ளே சென்று அந்த சவரத் தொழிலாளி பார்த்தபோதுதான் 3 பேரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து உடனடியாக அவிநாசி பாளையம் போலீசாருக்கு சக்கரக்கட்டி தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு பல்லடம் டிஎஸ்பி சுரேஷ் தலைமையிலான அவிநாசி பாளையம் போலீசார் விரைந்து வந்தனர்.
அவர்கள் அக்கம் பக்கத்தினரிடமும், செந்தில்குமார் குடும்பத்தினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே வீட்டில் சோதனை செய்தலில் 8 பவுன் நகை மாயமாக இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட 3 பேரின் உடல்களும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது மேலும் இந்த கொலைக்கு வேறு ஏதோ காரணம் உள்ளதா என்பது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: Annapoorani: குடும்ப பஞ்சாயத்து டூ கடவுள் வேஷம்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்!
இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பல்லடத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டதாக தெரிவித்தார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தும் வகையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இது ஒரு நபர் செய்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்
செம்மலை கவுண்டம்பாளையத்தில் தெய்விகசிகாமணி, அலமாத்தாள் ஆகிய இருவரும் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். சுற்றிலும் மரங்கள் நிறைந்து இருப்பதால் உள்ளிருக்கும் நபர்கள் வெளியே வரவே சில அடி தூரம் நடந்து வர வேண்டும். இதனைப் பயன்படுத்தி தான் 3 பேரையும் மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகிய 3 பேர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது.
இந்த சம்பவம் 3 பேரின் கொலைக்கு ஏதேனும் முன்பகை காரணமாக இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. செந்தில் குமார், தெய்விகசிகாமணி, அலமாத்தாள் ஆகிய 3 பேரின் உடலைப் பார்த்தும் உறவினர்கள் கதறி அழுதனர். இது சுற்றியிருப்பவர்களை கண்கலங்க வைத்தது.