Crime: சென்னை தி.நகரில் துணிகர சம்பவம்.. நகைகளை திருடிய பெண்!
Chennai: பண்டிகை காலம் என்பதால் விற்பனை அதிகமாக இருக்கும் என எண்ணி கடையின் உரிமையாளர் சுரேஷ் ஜெயின் வேலைக்கு சேர்த்துள்ளார். அதில் ரேவதி என்ற பெண்ணும் ஒருவர். கடந்த அக்டோபர் 22ஆம் தேதி முதல் வேலைக்கு வந்த அவர் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி முதல் திடீரென்று வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இதனால் நகைக்கடையின் உரிமையாளரான சுரேஷ் ஜெயின் சந்தேகமடைந்துள்ளார்.
நகைக்கடையில் கொள்ளை: சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடையில் வேலைக்கு சேர்ந்த 10 நாட்களில் பெண் ஒருவர் நகைகளை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இந்த நகைக்கடையில் எப்படி இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றது என்பதை பற்றி காணலாம். சென்னை தியாகராய நகரில் உள்ள டாக்டர் நாயர் சாலையில் பிரபல நகைக்கடை ஒன்று இயங்கி வருகிறது. பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த நகைக்கடைக்கு என பிரத்யேகமாக வாடிக்கையாளர்களும் உள்ளனர். இதனிடையே கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த நகை கடையில் புதிதாக சில நபர்கள் ஊழியர்களாக சேர்ந்துள்ளனர்.
பண்டிகை காலம் என்பதால் விற்பனை அதிகமாக இருக்கும் என எண்ணி கடையின் உரிமையாளர் சுரேஷ் ஜெயின் வேலைக்கு சேர்த்துள்ளார். அதில் ரேவதி என்ற பெண்ணும் ஒருவர். கடந்த அக்டோபர் 22ஆம் தேதி முதல் வேலைக்கு வந்த அவர் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி முதல் திடீரென்று வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த நகைக்கடையின் உரிமையாளரான சுரேஷ் ஜெயின் கடையில் ரேவதிக்கு என ஒதுக்கப்பட்ட பகுதியில் உள்ள நகைகள் அனைத்தையும் சோதனை செய்து பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
Also Read: பள்ளி மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டப்பட்ட விவகாரம்.. பள்ளிக்கல்வித்துறை விசாரணை..
அதன்படி கடையில் இருந்த ரூ. 12 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகள் வைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு சுரேஷ் ஜெயின் திடுக்கிட்டார். இதனைத் தொடர்ந்து கடையில் உள்ள சிசிடிவி கேமராக்கள் அனைத்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பெண் ஊழியரான ரேவதி உண்மையான நகைகளை திருடி விட்டு கவரிங் நகைகளை வைக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனால் பண்டிகை நேரம் என்பதால் சிசிடிவி காட்சிகளை ஆராயாமல் உரிமையாளர் இருந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக ரேவதி பயன்படுத்திக் கொண்டு இந்த திருட்டு சம்பவத்தில் துணிகரமாக ஈடுபட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த நகை திருட்டு சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளின் ஆதாரத்துடன் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் கடையின் உரிமையாளர் சுரேஷ் ஜெயின் புகாரளித்தார். அதன் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுரேஷ் ஜெயின் மற்றும் கடையின் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட ரேவதி அளித்த தகவலை சோதனை செய்த போது அதில் இருந்தது போலி முகவரி என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள ரேவதியை பாண்டி பஜார் போலீசார் தேடி வருகின்றனர். பிரபலமான நகைக்கடையில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
Also Read: யூடியூப் மூலம் ரூ.76.5 லட்சம் பணத்தை இழந்த நபர் – எப்படி தெரியுமா
சினிமா பிரபலத்தின் நகைக்கடையில் கொள்ளை
இதனிடையே பிரபல தமிழ் திரைப்பட பைனான்சியர் சந்திர பிரகாஷ் ஜெயினின் மகன் தினேஷ் சென்னை ஆழ்வார்பேட்டையில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடையில் பெங்களூருவை சேர்ந்த பாபுலால் என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே கடையில் இருந்த ரூ.5 லட்சம் பணம், 10 கிலோ வெள்ளி நகைகளை திருடி கொண்டு பாபு லால் ஓடிவிட்டதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தினேஷ் புகார் அளித்தார். இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே தங்கம் மற்றும் வெள்ளி விலை உச்சத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் நடுத்தர மக்கள் அதனை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தினமும் ஏறி இறங்கும் தங்கம் விலை தற்போதுள்ள சூழலில் இறங்காது என்ற நிலையில் அதில் பெருமளவு முதலீடு செய்ய வேண்டியுள்ளது. அதேபோல் தான் நகை விற்பனை செய்பவர்களும் ஆபரணங்கள் மீது அதிகமான முதலீடு செய்து விற்பனைக்கு இறக்குமதி செய்கிறார்கள். அதனை கண்ணின் மணி போல பாதுகாக்க வேண்டிய சூழலும் உள்ளது. இப்படியான நிலையில் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களே இத்தகைய திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.