Crime: அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை.. தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்!
Thanjavur: 26 வயதான ஆசிரியை ரமணி இன்று வழக்கம்போல பள்ளிக்கு வருகை தந்துள்ளார். வகுப்பறையில் அவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த மதன்குமார் என்ற 28 வயது இளைஞர் கண்ணிமைக்கும் நேரத்தில் ரமணியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ரமணி உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 26 வயதான ஆசிரியை ரமணி இன்று வழக்கம்போல பள்ளிக்கு வருகை தந்துள்ளார். காலை 10 மணியளவில் பாடவேளை கிடையாது என்பதால் அவர் ஓய்வறையில் உட்கார்ந்திருந்தார். அப்போது அவரைக் காண சின்னமனை கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார் என்ற 28 வயது இளைஞர் வந்துள்ளார். இருவரும் வளாகத்தில் நின்று பேசிக்கொண்டிருக்கும் நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் ரமணியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ரமணி உயிரிழந்தார்.
Also Read: Telangana: லாக்கரை உடைத்து வங்கியில் ரூ.10 கோடி நகை கொள்ளை.. நடந்தது என்ன?
மதன்குமார் கத்தியால் குத்துவதை ரமணி தடுக்க முயன்ற நிலையில் அவரின் கைகளில் வெட்டுக்கள் விழுந்தது. கழுத்தில் குத்தியதால் அவர் உடனடியாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மதன்குமாரை அந்த பள்ளி ஆசிரியர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். உடனடியாக போலீசார் மதன்குமாரை கைது செய்தனர்.
இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்த நிலையில் ஆசிரியர் ரமணியை மதன் குமார் காதலித்தந்ததாக சொல்லப்படுகிறது. சில மாதங்களுக்கு மதன்குமார் திருமணம் செய்யக்கொள்ள வேண்டி ரமணி வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். அப்போது அவரது பெற்றோர் மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ரமணியும் காதலை கைவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் தன்னைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்துள்ளார். இன்றும் அவர்களுக்குள் திருமணம் தொடர்பான பேச்சு எழுந்தது.
அப்போது ரமணி மறுத்ததால் ஆத்திரமடைந்த மதன்குமார் ஆசிரியர் ரமணியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களாக பள்ளி இருக்கும் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பணி செய்யும் ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Also Read: Crime: கொள்ளை பணத்தில் நூற்பாலை வாங்கி சொகுசு வாழ்க்கை.. குடும்பத்துடன் சிக்கிய கும்பல்!
அரசியல் தலைவர்கள் கண்டனம்
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆசிரியர் ரமணி…
— Anbil Mahesh (@Anbil_Mahesh) November 20, 2024
இந்நிலையில் ஆசிரியர் ரமணி மீதான தாக்குதலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கடுமையாக கண்டித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் ரமணி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், “தஞ்சாவூர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விடியா திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு நிர்வாகத் திறனற்ற திமுக அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் அரசுக்கு சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ளது. இதற்கு காரணமான விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம் என தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டர் எக்ஸ் வலைத்தளப்பதிவில், “மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை குத்திக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது.அரசுப் பள்ளி வளாகத்திற்குள் நடந்திருக்கும் இந்த கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த ஆசிரியர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறி ஆக்கியுள்ளது.தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகளை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.இனியாவது அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பாதுகாப்பான சூழலில் பணியாற்றுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.