5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: திருச்சியை உலுக்கிய கொலை.. சினிமா பாணியில் சிக்கிய குடும்பம்.. என்ன நடந்தது?

Tiruchirappalli: குணசேகரன் தினமும் குடித்து விட்டு வந்து தனது மனைவி சுலோச்சனா மற்றும் தாய் காமாட்சி ஆகிய இருவரிடமும் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டு இருந்துள்ளார். அப்படியான நேற்று முன்தினம் வழக்கம் போல் குணசேகரன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மேலும்  மனைவி மற்றும் தாயிடம் தகராறும் செய்துள்ளார்.

Crime: திருச்சியை உலுக்கிய கொலை.. சினிமா பாணியில் சிக்கிய குடும்பம்.. என்ன நடந்தது?
கொலை செய்யப்பட்ட குணசேகரன் (நடுவில்)
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 22 Nov 2024 14:38 PM

திருச்சியில் தற்கொலை செய்துக் கொண்டதாக சொல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மரணத்தில் திடுக்கிட வைக்கும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில் இது தற்கொலை அல்ல, கொலை என தெரிய வந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவத்தில் குடும்ப உறுப்பினர்களே திட்டம் போட்டு ஈடுபட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சியை உலுக்கிய இந்த கொலை சம்பவத்தில் என்ன நடந்தது என்பது பற்றி காணலாம். திருச்சி சஞ்சீவி நகரில் உள்ள வாடாமல்லி தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகனான குணசேகரன் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக பணி செய்து வந்தார். 34 வயதான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் போதை பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார்.

தற்கொலை என போலீசில் புகார்

அதுமட்டுமல்லாமல் குணசேகரன் தினமும் குடித்து விட்டு வந்து தனது மனைவி சுலோச்சனா மற்றும் தாய் காமாட்சி ஆகிய இருவரிடமும் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டு இருந்துள்ளார். அப்படியான நேற்று முன்தினம் வழக்கம் போல் குணசேகரன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மேலும்  மனைவி மற்றும் தாயிடம் தகராறும் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டிற்குள் தூங்க சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை தாய் காமாட்சி தனது மகன் குணசேகரன் தற்கொலை செய்து கொண்டதாக திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Also Read: “பாஜகவுக்கு ஆதரவா?” தலித் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. கால்வாயில் உடல் வீச்சு!

குணசேகரன் திடீரென தற்கொலை செய்துக் கொண்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காமாட்சி அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த குணசேகரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதேசமயம் குணசேகரன் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

காட்டிக்கொடுத்த பிரதேச பரிசோதனை அறிக்கை

இதற்கிடையில் மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதனைப் படித்துப் பார்த்த காவல்துறையினருக்கு ஒரு கணம் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் குணசேகரன் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என அதில் இடம்பெற்று இருந்தது. அவரது கழுத்து நெறிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதன் ஒரு பகுதியாக குணசேகரன் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது குணசேகரன் தூங்க சென்ற பிறகு அவரது வீட்டுக்கு காமாட்சியின் உறவினர்களான திருநங்கை விக்கி என்கிற லித்தின்யா ஸ்ரீ, திருநங்கை குபேந்திரன் என்கிற நிபுயா, மற்றும் விஜயகுமார் ஆகிய 3 பேர் வந்து செல்வது தெரியவந்தது. மேலும் இந்த 3 பேரும் வீட்டிற்குள் சென்று நேரம், காமாட்சி மற்றும் சுலோச்சனா ஆகிய இருவர் வாசலில் அவர்கள் வெளியே வரும் வரை அமர்ந்திருப்பது தெரிய வந்தது.

Also Read: Seeman Rajinikanth: திடீரென ரஜினியை நேரில் சந்தித்த சீமான்.. பின்னணி என்ன?

சினிமா பாணியில் சிக்கிய 5 பேர் 

இதனைத் தொடர்ந்து குணசேகரன் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.  சம்பந்தப்பட்ட 5 பேரையும் பிடித்து கோட்டை காவல் நிலையத்திற்கு கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் குணசேகரன் தினமும் குடித்து விட்டு வந்து பிரச்னை செய்வது குறித்து காமாட்சி மற்றும் சுலோச்சனா உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். நாளுக்கு நாள் தொல்லை அதிகமாகவே அவரை கொலை செய்யும் முடிவுக்கு வந்தனர்.

இதனையடுத்து விஜயகாந்த் நடித்த ராஜ்ஜியம் படத்தில் வருவதுபோல உடலில் காலி ஊசியை குத்தி கொலை செய்துள்ளனர். பின்னர் துப்பட்டாவால் குணசேகரின் கழுத்தை  நெறித்து 3 பேரும் கொலை செய்து உடலை தூக்கில் தொங்கவிட்டு நாடகம் ஆடியது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து காமாட்சி, சுலோச்சனா, குபேந்திரன் என்கிற நிபுயா, விஜயகுமார், விக்கி என்கிற லித்தின்யாஸ்ரீ  ஆகிய 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். திருச்சியை அதிர வைத்த இந்த கொலை சம்பவத்தில் விரைந்து குற்றவாளியை கண்டுபிடித்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Latest News