Crime: மனைவி தூக்கிட்டு தற்கொலை.. சோகத்தில் கணவன் எடுத்த விபரீத முடிவு!
உதய பிரகாஷூக்கும், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள நீடூர் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகள் ஹேமாவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த தம்பதியினர் 2 மாதங்களில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆட்டூர் பகுதியில் சமரச பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் உதய பிரகாஷ் பெண்களுக்கு குழுக்கள் மூலம் கடன் வழங்கும் நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் பணி செய்து வந்தார். சமரச பாண்டி வீடு ஆட்டூரில் உள்ள தோப்பு தெருவில் அமைந்துள்ளது. இதனிடையே உதய பிரகாஷூக்கும், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள நீடூர் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகள் ஹேமாவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
Also Read: Thirumavalavan Vijay: விஜய்யுடன் மேடையேற மறுக்கும் திருமாவளவன்.. வெளியான பரபரப்பு தகவல்!
இவர்களது திருமணத்திற்கு ஹேமாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் உதய பிரகாஷ் ஹேமாவுடன் ஆட்டூரில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். இதற்கிடையில் நேற்று முன்தினம் உதய பிரகாஷ் மற்றும் ஹேமா இருவரும் வழக்கம்போல தூங்கச் சென்றுள்ளனர். அதிகாலை எழுந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் ஹேமா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உதய பிரகாஷ் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு சென்ற அக்கம்பக்கத்தினர் தூக்கில் தொங்கி நிலையில் இருந்த ஹேமாவை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மீட்டு அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதனைத் தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் சோகத்தின் உச்சியில் இருந்த உதய பிரகாஷ் விபரீத முடிவை தேடிக் கொண்டார். அவர் ஹேமா தூக்கில் தொங்கிய கயிறை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள புளிய மரத்துக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் உதய பிரகாஷ் மற்றும் ஹேமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமான 2 மாதங்களில் காதல் தம்பதியினர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருத்துறைப்பூண்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினர். அதில் திருமணமான சில நாட்களிலேயே உதய பிரகாஷ் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஹேமாவுக்கும் அவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவும் தகராறு ஏற்படவே மனமடைந்த ஹேமா தற்கொலை முடிவு எடுத்ததாக சொல்லப்படுகிறது. எனினும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடைபெற உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: Crime: ஜீன்ஸ் பேண்டை தைத்த வீடியோ வைரல்.. தற்கொலைக்கு முயன்ற இளைஞர்!
பெற்றோர் சண்டையால் மகன் தற்கொலை
இதனிடையே புதுச்சேரியில் பெற்றோர்கள் சண்டையிட்டு கொண்டதால் மகன் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. புதுச்சேரியில் உள்ள ஜான்பால் முதல் தெருவை சேர்ந்தவர் வினோத். இவர் தனது மனைவி செரினா மற்றும் 3 மகன்கள், ஒரு மகளுடன் வசித்து வந்தார். இதனிடைய வினோத்திற்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில் அவருக்கும் மனைவி செரினாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை மூத்த மகன் சஞ்சய் கண்டித்துள்ளார். ஆனால் தொடர்ச்சியாக சண்டை ஏற்பட்டதால் வினோத் மற்றும் செரினா ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் மனமடைந்த சஞ்சய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக முதலியார் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.