Crime: சென்னை வந்து ரூம் போட்டு நகைகள் திருட்டு.. திருச்சியில் சிக்கிய இளைஞர்
Chennai: டிப் டாப்பாக உடையணிந்த இருவர் மணப்பெண் அறைக்குள் சென்று வருவது தெரிய வந்தது. அவர்களைப் பற்றி ஆனந்த முரளி குடும்பத்தினரிடம் கேட்டபோது அப்படி யாரும் எங்களுக்கு தெரியாது என சொல்லியுள்ளனர். அவர்கள் இருவர்தான் நகைகளை திருடி இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
திருட்டு சம்பவம்: சென்னையில் நடைபெற்ற ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி இல்ல திருமண விழாவில் நிகழ்ந்த திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அடையார் பகுதியில் உள்ள இந்திரா நகரில் சண்முகம் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான இவரின் மகன் ஆனந்த முரளியின் மகளுக்கு திருமணம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெகுவிமரிசையாக நடைபெற்றது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை அருகே வெட்டுவாங்கனியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணமானது நடைபெற்றது. முன்னதாக 4ஆம் தேதி காலையில் மணமேடைக்கு செல்வதற்கு முன் தங்க, வைர ஆபரணங்களை அணிவதற்காக மண்டபத்தில் இருந்த அறைக்கு மணமகள் சென்றுள்ளார். அப்போது அங்கு தாங்கள் கொண்டு வந்த நகைகள் அடங்கிய பை திறந்து இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே முழுவதுமாக சோதனை செய்தார்.
Also Read: School Leave: கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை.. எங்கெல்லாம் தெரியுமா?
ரூ.30 லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டு
இதில் இரண்டு வைர நெக்லஸ்கள், தோடுகள், தங்க நகைகள் உள்ளிட்டவை காணாமல் போய்விட்டது என்பதை அறிந்த அவர் குடும்பத்தினரை அழைத்து விவரத்தை சொல்லி உள்ளார். காணாமல் போன நகைகளின் மதிப்பு ரூ.30 லட்சமாகும். இதனால் திருமண மண்டபம் முழுக்க பரபரப்பானது. இரு குடும்பத்தார் சம்பந்தப்பட்ட ஆட்கள் திருமண நிகழ்வுக்காக மண்டபத்திற்கு வந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் எப்படி இந்த திருட்டு நடந்தது என்பது பலருக்கும் குழப்பமாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து காவல்துறை உதவியை நாட ஆனந்த முரளி முடிவு செய்தார். அதன்படி இந்த நகைகள் திருட்டு சம்பவம் தொடர்பாக நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திருமண மண்டபத்திற்கு வந்து அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடமும், ஆனந்த முரளி குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து மண்டபப் பகுதியில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
Also Read: Hyderabad: ரூம் முழுக்க காலணிகள்.. ஷூக்களை திருடி விற்பனை செய்த தம்பதி!
ரூம் போட்டு திருட்டு
அப்போது டிப் டாப்பாக உடையணிந்த இருவர் மணப்பெண் அறைக்குள் சென்று வருவது தெரிய வந்தது. அவர்களைப் பற்றி ஆனந்த முரளி குடும்பத்தினரிடம் கேட்டபோது அப்படி யாரும் எங்களுக்கு தெரியாது என சொல்லியுள்ளனர். இதன்மூலம் அவர்கள் இருவர்தான் நகைகளை திருடி இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. மேலும் மண்டப வாசலில் உள்ள சிசிடிவி கேமராவில் சம்பந்தப்பட்ட இரண்டு பேரும் பைக்கில் செல்லும் காட்சிகள் இருந்தது.
அதிலிருந்த வாகன பதிவு மற்றும் செல்போன் சிக்னல் ஆகியவை கொண்டு ஆய்வு செய்ததில் போலீசாருக்கு திருட்டில் ஈடுபட்டது யார் என தெரிய வந்தது. திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரை சேர்ந்த நபர்கள் தான் அவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக ராம்ஜி நகருக்கு நீலாங்கரை தனிப்படை போலீசார் விரைந்தனர். அங்கு ஒரு வீட்டில் பதுங்கி இருந்த சுதர்சன் என்ற நபரை கைது செய்தனர். கார்த்திக் என்ற மற்றொரு நபர் போலீசாரை கண்டதும் தப்பியோடினார். அவரை பிடிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Also Read: BPSC Paper Leak: பிபிஎஸ்சி வினாத்தாள் கசிந்ததாக புகார்.. போராட்டம் நடத்திய தேர்வரை அறைந்த அதிகாரி!
கைது செய்யப்பட்ட சுதர்சனிடம் நடைபெற்ற விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அவர் ஒரு எம்பிஏ பட்டதாரி என்பது தெரிய வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருட்டு தொழிலில் ஈடுபட்டு வரும் அவர் பெரும்பாலும் போலீசில் சிக்கியது கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் தங்கி அங்கு இருக்கும் ரிசார்டுகள், திருமண மண்டபங்களை நோட்டமிட்டு கைவரிசை காட்டுவது வழக்கம் எனவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சுதர்சனிடம் இருந்து 10.5 சவரன் தங்க நகைகள் போலீசார் மீட்டனர். இந்த சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு திருடிய நபர்களை கைது செய்த போலீசாரை உயரதிகாரிகள் பாராட்டினர்.