முத்தமிழறிஞருக்கு நாணயம்.. பாஜக அரசுக்கு கண்டனம்.. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. - Tamil News | dmk district secreataries meeting important decisions to be taken today 16 august 2024 | TV9 Tamil

முத்தமிழறிஞருக்கு நாணயம்.. பாஜக அரசுக்கு கண்டனம்.. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..

பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாளை முப்பெரும் விழாவாக கொண்டாடும் திமுக, செப்டம்பர் மாதம் முப்பெரும் விழாவை எங்கு நடத்துவது என்பது குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை திமுக தொடங்கிவிட்ட நிலையில் தேர்தல் பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

முத்தமிழறிஞருக்கு நாணயம்.. பாஜக அரசுக்கு கண்டனம்.. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..

கோப்பு புகைப்படம்

Updated On: 

16 Aug 2024 11:13 AM

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. திமுகவின் 72 மாவட்ட செயலாளர்கள், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கியமான மாநில நிர்வாகிகள் இதில் பங்கேற்றுள்ளனர். பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாளை முப்பெரும் விழாவாக கொண்டாடும் திமுக,
செப்டம்பர் மாதம் முப்பெரும் விழாவை எங்கு நடத்துவது என்பது குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை திமுக தொடங்கிவிட்ட நிலையில் தேர்தல் பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் படிக்க: குரங்கு அம்மை பரவல்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தல்..

முக்கியமாக 3 தீர்மனங்கள் நிறைவேற்றப்பட்டது. முதலில் கடந்த 10 தேர்தல்களில் வெற்றியைத் தேடித்தந்த திமுக தலைவருக்கு வாழ்த்துகள்- கழக நிர்வாகிகள், வாக்காளர்களுக்கு நன்றி. இரண்டாவதாக, செப்டெம்பர் 17 அன்று திமுக தொடங்கப்பட்ட சென்னையில் முப்பெரும் விழா கூட்டம் – தமிழ்நாடு முழுவதும் சுவர் விளம்பரங்கள், தெருமுனைக் கூட்டங்கள், கொடிக்கம்பங்கள் புதுப்பிப்பு. மூன்றாவது முத்தமிழறிஞருக்கு நாணயம் – ஒன்றிய அரசுக்கு நன்றி. அதே சமயம் நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டுக்கு வஞ்சனை காட்டும் ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “ 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், அண்மையில் நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல் களங்களிலும் வாகை சூடி, தொடர் வெற்றி நாயகராகத் திகழும் கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தனது உளம்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், கழகத் தலைவரின் கட்டளைக்கேற்ப அயராது தேர்தல் பணியாற்றி நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியைக் குவித்திட பாடுபட்ட, கழகத்தின் அனைத்து அமைப்புகளிலும் உள்ள நிர்வாகிகள், கழகமே உயிர்மூச்சென உழைக்கும் உடன்பிறப்புகள், திராவிட இயக்கக் கொள்கையாளர்கள், தன்னார்வலர்கள், தோழமை இயக்கத்தினர், அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற வாக்களித்த பொதுமக்கள் என அனைவருக்கும் இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறது.

தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கித் தந்த இலட்சிய விழாவான முப்பெரும் விழா, இந்தப் பவள விழா ஆண்டில், தி.மு.கழகம் தொடங்கப்பட்ட சென்னையில் கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் எழுச்சி மிகுந்த விழாவாகக் கொண்டாடப்படும் என இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

தனது நீண்ட நெடிய அரசியல் அனுபவத்தினால், இந்திய ஜனநாயகத்தைக் காக்கின்ற தூணாகத் திகழ்ந்த நூற்றாண்டு நாயகராம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழினைப் போற்றுகிற வகையில் இந்திய ஒன்றிய அரசு 100 ரூபாய் மதிப்பிலான தலைவர் கலைஞர் அவர்களின் உருவம் பொறித்த நாணயம் வெளியிட முன்வந்தமைக்கு இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

அதேவேளையில், மாநில உரிமைக்கான குரலைத் தொடர்ந்து முழங்கிடும் கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு வருகின்ற நிலையிலும், தமிழ்நாட்டுக்கு என்று எந்தச் சிறப்பு திட்டத்தையும் வழங்காமல், முறையான நிதி ஒதுக்கீடு செய்யாமல், இரயில்வே துறையின் திட்டங்களில்கூட பாராமுகமாக நடந்துக் கொள்வதையும் பாரபட்சம் காட்டுவதையும் வழக்கமாக வைத்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!