Kovai Selvaraj: மகன் திருமணத்தில் சோகம்.. முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் மரணம்!
திருப்பதியில் தனது மகன் திருமண நிகழ்வில் பங்கேற்ற அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல் நாளை கோவை மாவட்டம் கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ.வாக இருந்த கோவை செல்வராஜ் அதிமுக மற்றும் திமுக கட்சியில் பணியாற்றியுள்ளார்.
கோவை செல்வராஜ்: திமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோவை செல்வராஜ் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியில் தனது மகன் திருமண நிகழ்வில் பங்கேற்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல் நாளை கோவை மாவட்டம் கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ.வாக இருந்த கோவை செல்வராஜ் அதிமுக மற்றும் திமுக கட்சியில் பணியாற்றியுள்ளார். அதிமுக பிரிந்தபோது ஓபிஎஸ் அணியில் இருந்த அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திமுகவின் இணைந்தார். அக்கட்சியில் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வந்த அவரின் மறைவு செய்தி திமுக தலைமை மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை செல்வராஜ் அரசியல் வரலாறு
66 வயதான கோவை செல்வராஜ் 1972 ஆம் ஆண்டு அதிமுக தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து இளம் வயதிலேயே தன்னை இணைத்து கட்சிக்காக கடுமையாக உழைத்தார். கோவையில் அரங்கநாதன் என்பவர் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக நின்ற போது அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நிலையில் எதிர்க்கட்சிகள் நடத்திய தாக்குதலில் கோவை செல்வராஜ் மண்டை உடைக்கப்பட்டது. இதனை அடுத்து தனக்காக அடி வாங்கிய அவரை எம்ஜிஆரை சந்திக்க அரங்கநாதன் அழைத்து சென்றுள்ளார்.
16 வயதில் முதல்முறையாக எம்ஜிஆரை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்த கோவை செல்வராஜ் 1984 ஆம் ஆண்டு அதிமுகவில் போட்டியிட எம்எல்ஏ சீட் கேட்டார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து எம்எல்ஏவான அவரை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் அழைத்து பேசிய நிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்து கட்சி பணியாற்றி வந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் இரு அணியாக பிரிந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் பக்கம் ஆதரவாக இருந்த கோவை செல்வராஜ் ஆறுமுகசாமி ஆணையம் அளித்த ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இதன் பின்னர் திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ் அதிமுகவில் தான் விலக காரணமாக இருந்தது என்ன என்பது பற்றி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் என அனைவரும் நினைத்திருந்தால் ஜெயலலிதாவை காப்பாற்றி இருக்க முடியும். ஆனால் அனைவருக்கும் ஜெயலலிதா உயிரை விட தங்கள் பதவியே முக்கியம் என நினைத்து செயல்பட்டிருந்ததால் இப்படி நடந்து விட்டது. இப்படிப்பட்டவர்களுடன் நான் இனியும் எப்படி பணியாற்ற முடியும்?. அதன் காரணமாகவே ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து மட்டுமல்ல. ஒட்டுமொத்தமாக அதிமுகவில் இருந்து விலகுகிறேன் என திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.