”2026 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை” எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ”தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதெல்லாம் பின்னடைவாக எடுத்துக் கொள்ள முடியாது. சட்டமன்ற தேர்தல் வேறு நாடாளுமன்ற தேர்தல் வேறு. 2026ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும். பாஜகவுடன் கூட்டணி இல்லை. ஆட்சி, அதிகாரம்தான் தேவையென்றால் தேசிய கட்சியுடன் சென்றிருப்போம். எங்களுக்கு மாநில கொள்கையே முக்கியம். 2026 சட்டமன்ற தேர்தலில் மட்டுமல்ல எப்போதும் பாஜக உடன் கூட்டணி இல்லை” என்றார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
பிரசாரத்தை பொறுத்த வரை பாஜக வேட்பாளர்களுக்காக பிரதமர் 8 முறை தமிழகம் வந்திருக்கிறார். தேசிய தலைவர் நட்டா, அமித்ஷா உள்ளிட்டோர் சுற்றுப்பயணம் செய்து பாஜகவுக்கு ஆதரவாக பிராச்சாரம் செய்தார்கள்.
பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் பரப்புரை செய்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களும் 90 சதவிகிதம் பகுதிகளுக்கு சென்று பரப்புரை செய்தார்.
ராகுல்காந்தி நடைபயணம் செய்தார். திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் திருமாவளவன், வைகோ, முத்தரசன் உள்ளிட்டோர் வேட்பாளர்களை அதரித்து பரப்புரை செய்தனர். இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையில் அதிமுக தேர்தலை சந்தித்து கூடுதல் வாக்கு சதவிகிதம் பெற்றுள்ளது. மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள், மாநிலத்தில் ஆட்சியில் இருப்பவர்கள், அமைச்சர்கள் ஆங்காங்கே முகாமிட்டு பணபலத்தை பயன்படுத்தி வாக்காளர்களை சந்தித்தனர். அதிமுகவில் நான் ஒருவன் மற்றும் தேமுதிக சார்பில் பிரேமலதா ஆகியோர் மட்டுமே பரப்புரை செய்தோம். பாஜக 2019 தேர்தலில் பல கட்சி கூட்டணிகளோடு பெற்ற வாக்கு சதவிகித்த்தை விட குறைவாகவே பெற்றுள்ளது.
Also Read: தமிழ்நாட்டில் வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்கு சதவிகிதம் பெற்றது மகிழ்ச்சி. 2019 தேர்தலில் திமுக வேட்பாளர்கள் 33.52 சதவிதம் வாக்குகள் பெற்றனர் தற்போது 26.93 சதவிதமாக குறைந்துள்ளது. திமுக கூட்டணியின் வாக்குகளும் 6.32 சதவீத குறைந்துள்ளது. இவற்றையெல்லாம் ஒப்பிட்டு பார்க்கும் போது அதிமுகதான் கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த 2019 தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 1 சதவீதம் கூடுதலாக பெற்றிருக்கிறோம். இது அதிமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதெல்லாம் பின்னடைவாக எடுத்துக் கொள்ள முடியாது. சட்டமன்ற தேர்தல் வேறு நாடாளுமன்ற தேர்தல் வேறு.
2026ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும். பாஜகவுடன் கூட்டணி இல்லை. ஆட்சி, அதிகாரம்தான் தேவையென்றால் தேசிய கட்சியுடன் சென்றிருப்போம். எங்களுக்கு மாநில கொள்கையே முக்கியம். 2026 சட்டமன்ற தேர்தலில் மட்டுமல்ல எப்போதும் பாஜக உடன் கூட்டணி இல்லை. கோவையில் அண்ணாமலை கடந்த தேர்தலைவிட குறைந்த வாக்குகளையே பெற்றார். எங்கள் கூட்டணியில் பாஜக இருந்தபோது அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான். அண்ணாமலை போன்றவர்கள் பாஜகவில் இருந்தால் அக்கட்சி தோற்கத்தான் செய்யும். தமிழ்நாட்டில் இருப்பது போன்ற பாஜக மாநில நிர்வாகிகள் போல பல மாநிலங்களில் இருப்பார்கள் என நினைக்கிறேன். அதனால்தான் பாஜகவுக்கு இந்த தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது” என்றார்.
Also Read: ஜூன் 24ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. என்ன காரணம்?