எடப்பாடியின் முத்தான 3 துரோகங்கள் – பட்டியல் போடும் ஓபிஎஸ்
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக சுயேட்சையாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவர், முதுகுளத்தூர் சட்டபேரவை தொகுதிக்கு உட்பட்ட கடலாடி, புனவாசல், ஆப்பனூர், கிடாத்திருக்கை, இளஞ்செம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஜெயலலிதா 2 முறையும், சசிகலா ஒருமுறையும் என்னை முதலமைச்சர் ஆக்கினர். அதுபோன்று அவர்கள் கேட்டதும் மிகப்பெரிய பதவியான முதலமைச்சர் பதவியை, விசுவாசத்துடன் தயக்கமின்றி திருப்பி வழங்கினேன். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரே ஒரு முறை சசிகலா பதவியை வழங்கினார். அதனை பெற்றுக்கொண்டு, நம்பிக்கை துரோகம் செய்தது மட்டுமில்லாது, அவரை சூரியனை பார்த்து குறைப்பது என ஒரு மிருகத்தோடு கீழ்த்தரமாக ஒப்பிட்டு பேசினார். நன்றி மறந்தவர் எடப்பாடி பழனிசாமி. முதலில் சசிகலா, 2வது டிடிவி.தினகரன், 3வதாக எனக்கு துரோகம் செய்தவர். எனக்கு எதிராக 5 பன்னீர்செல்வத்தையும் இறக்குமதி செய்துள்ளார்.
இவ்வாறு பேசினார்.
முன்னதாக ராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்புல்லாணி பகுதியில் உள்ள ஆதிஜெகநாதபெருமாள் கோயிலில் சாமி கடந்த 4ம் தேதி ஓ.பன்னீர் செல்வம், தரிசனம் செய்துவிட்டு, பசு வைத்து கோ பூஜை நடத்தினர். அப்போது அங்கு வந்த தொண்டர் ஒருவர், ஆளுயுர மாலையை அணிவித்து ‘‘வருங்கால மத்திய மந்திரி ஓபிஎஸ்’’ என கூவினார். இதனை பார்த்த ஓபிஎஸ் அந்த தொண்டர், வயிற்றில் இரண்டு முறை குத்தினார். பின்னர், ‘ஏம்பா… நீ வேற’ என சைகை காட்டி விட்டு ஓபிஎஸ் நைசாக நழுவினார்.
இருந்தாலும் சுதாரித்துக் கொண்ட தொண்டர் நமது சின்னம் என மீண்டும் கூவினார்.
இதனால் எரிச்சலடைந்த மற்ற நிர்வாகிகள், ‘‘தம்பி… இது கோயில் இங்கு சத்தம் போடக் கூடாது. குறிப்பாக வாக்கு சேகரிக்கக் கூடாது’’ என அறிவுரை வழங்கினர். இதனையடுத்தே தொண்டர் அமைதியானார்.