Evening Digest 12 November 2024: SETC பயணிகளுக்கு ஜாக்பாட்.. விடைபெற்ற விஸ்தாரா.. இன்றைய டாப் 10 செய்திகள்!

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி நாள்தோறும் உள்ளூர் முதல் உலகம் வரை பல்வேறு நிகழ்வுகள் நடந்திருக்கலாம். அந்த சம்பவங்களை எல்லாம் ஒரே இடத்தில் செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு என அனைத்து துறைச் சார்ந்த செய்திகள் இடம் பெற்றுள்ளது.

Evening Digest 12 November 2024: SETC பயணிகளுக்கு ஜாக்பாட்.. விடைபெற்ற விஸ்தாரா.. இன்றைய டாப் 10 செய்திகள்!

கோப்பு புகைப்படம்

Published: 

12 Nov 2024 20:28 PM

இன்றைய முக்கிய நிகழ்வுகள்: நவம்பர் 12 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று காலை முதல் தற்போது வரை பல்வேறு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம். சென்னையில் விடிய விடிய மழைக்கு வாய்ப்பு, விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்,வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் பெட்டிகள், அரசு பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு ஜாக்பாட் என பல தகவல்கள் இடம் பெற்றுள்ளது.

தமிழ்நாடு

  • எஸ்சிடிசி எனப்படும் தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய இணையதளம் அல்லது மொபைல் செயலி வழியாக முன்பதிவு செய்பவர்களுக்கு பம்பர் பரிசு காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. முதல் பரிசாக இரு சக்கர வாகனம், இரண்டாம் பரிசாக எல்இடி டிவி, மூன்றாம் பரிசாக பிரிட்ஜ் ஆகியவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 21ம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த ஆஃபர் குழுக்கள் முறையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் பெட்டி இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுவரை 8 பெட்டிகளுடன் இயங்கி வந்த வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் சேர்க்கப்பட்டு விரைவில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
  • கொடைக்கானலில் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 12 அடி நீளம் உள்ள வாகனங்கள் அனைத்தும் கொடைக்கானல் உள்ளே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது நவம்பர் 18ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
  • தன்னுடைய கட்சியின் தொண்டர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதாக வெளியான தகவலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் மறுத்துள்ளார். மேலும் கருணாநிதி, ஜெயலலிதாவை விட விஜய் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்றும், அவர்களுக்கு கூடாத கூட்டம் விஜய்க்கு கூடவில்லை என்றும் அவர் சரமரியாக விமர்சித்துள்ளார்.
  • தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவி வருவதால் இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று இரவும் விட்டு விட்டு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

  • ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜார்கண்டில் பாஜக ஆட்சி அமைந்ததும் ஊழல் செய்த தலைவர்கள் ஒருவரையும் தப்பிக்க விடமாட்டோம் என்றும், அவர்கள் தலைகீழாக தொங்க விடப்படுவார்கள் என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
  • மணிப்பூரில் 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் இடையே நடைபெற்ற தாக்குதலில் பயங்கரவாதிகள் 11 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது.
  • ஏர் இந்தியாவுடன் விஸ்தாரா நிறுவனம் இணைந்தது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா வாங்கிய நிலையில் அதன் கைவசம் இருந்த விஸ்தாரா நிறுவனம் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்படியான நிலையில் அது நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
  • கேரளாவில் இந்து மத அதிகாரிகளுக்கான தனியாக வாட்ஸ்அப் குரூப் நடத்திய 2 ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த நிலையில் மாநில அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

உலகம்

  • சீனாவில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 35 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்து மற்றும் சொத்து பங்கிட்டு அதிருப்தியில் இருந்த பென் என்பவர் தனது காரை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
  • எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 11 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது நான்கு பேர்  விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

  • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் பிசிசிஐ தெரிவித்துள்ள நிலையில் இந்த தொடருக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தியா பாகிஸ்தான் வராவிட்டால் தொடரில் இருந்து நாங்கள் வெளியேறி விடுவோம் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பிரச்சனையை சமாளிக்க சாம்பியன்ஸ் டிராபி தொடரை தென் ஆப்பிரிக்காவில் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
சைத்ரா ரெட்டி வீட்டில் விசேஷம்... வைரலாகும் போட்டோ
காலாவின் காதலி ஹூமாவின் நியூ ஆல்பம்
இந்திய குழந்தைகள் தினம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய சில டிப்ஸ்!