Evening Digest 23 October 2024: விஜய்யின் அரசியல் ஆட்டம்.. சிக்கலில் இர்ஃபான்.. இன்றைய டாப் 10 செய்திகள்!
இந்தத் தொகுப்பு, உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக தொகுத்து வழங்கிவருகிறது. அந்த வகையில், ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய முக்கிய நிகழ்வுகள்: அக்டோபர் 23 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய செய்திகளை நாம் இந்த தொகுப்பில் காணலாம். பிரபல யூட்யூபர் இர்பான் விவகாரத்தில்மாநில சுகாதாரத்துறை கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டு பணிகள் தொடர்பான அப்டேட், டாஸ்மாக் கடைகள் விடுமுறை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு
- தனது குழந்தை தொப்புள் கொடியை வெட்டுவது போன்ற வீடியோவை பிரபல யூட்யூபர் இர்பான் வெளியிட்ட நிலையில் இந்த விவகாரத்தில் மாநில சுகாதாரத்துறை கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு ரூபாய் 50 ஆயிரம் அபராதமும், பத்து நாட்கள் மருத்துவமனை செயல்பட தடை விதித்துள்ளது. ஏற்கனவே இருக்கும் உள்நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை பணிகள் எட்டியுள்ள நிலையில் மாநாட்டு திடலில் ஒரே இடத்தில் விஜய்யின் இடது பக்கம் அம்பேத்கர் மற்றும் வலது பக்கம் காமராஜர், பெரியார் ஆகியோரின் கட் அவுட்டுகள் இடம் பெற்றுள்ளது.
- தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது.. அந்த வகையில் நெல்லை – தாம்பரம் இடையே நவம்பர் 3 மற்றும் நவம்பர் 4 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- மதுரை,தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தேவர் ஜெயந்தி மற்றும் மருதுபாண்டியர்கள் நினைவு தினம் உள்ளிட்ட நிகழ்வுகளை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் அக்டோபர் 27ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. தீபாவளிக்கு முதல் நாள் கடை மூடப்படுவதால் வசூல் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
- பெங்களூருவில் பெய்து வரும் கனமழையில் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனுடைய கிழக்கு பெங்களூருவில் புதிதாக கட்டப்பட்டு வந்த ஆறு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். இதில் 2 தமிழர்களும் உயிரிழந்ததால் சோகம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கட்டிட உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரான பிரியங்கா காந்தி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அவருடன் தாயார் சோனியா காந்தி, கணவர் ராபர்ட் வதோரா, சகோதரர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் உடனிருந்தனர்.
உலகம்
- பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு இருதரப்பு பேச்சுவார்த்தையில் சந்திக்கிறோம் என்றும், இந்திய – சீனா இடையேயான உறவு என்பது மக்களுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே மிக முக்கியமானது எனவும் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனிருந்தார்.
- இலங்கையில் பொது இடங்களில் இஸ்ரேல் மக்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் ஒன்று கூட வேண்டாம் என இஸ்ரேல் தேசிய கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
விளையாட்டு
- ஆப்கானிஸ்தான் – வங்கதேசம் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நவம்பர் 6ஆம் தேதி முதல் போட்டி தொடங்க உள்ள நிலையில் இந்த தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கான காரணத்தை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் விளக்கியுள்ளார். அதன்படி டிரா செய்யும் நோக்கத்தில் இந்தியா விளையாடாமல் வெற்றிக்கு விளையாடியதால் தோல்வி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.