Evening Digest 08 November 2024: ஊட்டி செல்ல இ-பாஸ்.. எலான் மஸ்க் சொத்து மதிப்பு உயர்வு..இன்றைய டாப் 10 செய்திகள்!
இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய முக்கிய நிகழ்வுகள்: நவம்பர் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று காலை முதல் தற்போது வரை பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளது. அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ், பாஜகவில் இருந்து எஸ்.வி.சேகர் விலகல், தமிழ்நாடு திரும்பும் அண்ணாமலை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஓய்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இடம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு
- தமிழகத்தின் பிரபல சுற்றுலா தளங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மே மாதம் முதல் நடைமுறையில் இருக்கும் நிலையில் அது ரத்து செய்யப்படும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விரிவாக படிக்க
- தமிழக பாஜகவில் இருந்து விலகி விட்டதாகவும், அக்கட்சியால் எந்த ஒரு பயனும் இல்லை எனவும் நடிகரும் அரசியல் பிரமுகர்மான எஸ்.வி சேகர் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் தமிழக பாஜகவை நம்புவது வீண் என்றும், தமிழ்நாட்டில் பாஜக மலரவே மலராது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எஸ்.வி.சேகரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விரிவாக படிக்க
- லண்டனில் படிப்பை முடித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் நவம்பர் 28 ஆம் தேதி தமிழகம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தோல்விக்கு பிறகு தீவிர அரசியலில் இருந்து சற்று விலகி இருந்த அவர் மீண்டும் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை வருகையால் அவரது தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.விரிவாக படிக்க
- தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக எஸ்.இ.டி.சி பேருந்துகள் பம்பையில் இருந்து புறப்பட கேரளா அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்திலிருந்து செல்லும் பேருந்துகள் பம்பை வரை செல்லும் வழியில் தரிசனம் முடிந்து திரும்பி வரும் பக்தர்கள் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள நிலக்கல் வந்து தான் பேருந்து ஏறும் நிலை இருந்தது.
- 1934 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட மேட்டூர் அணை 90 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக தூர்வாரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் அணையின் குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் 1.40 லட்சம் யூனிட் வண்டல் மண் தூர்வாரப்பட உள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி பெற ஆலோசகர்களை நியமனம் செய்ய நீர்வளத்துறை டெண்டர் விட்டுள்ளது.
- திமுக கூட்டணியில் தான் தொடர்வோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் திட்டவட்டமாக கூறியுள்ளார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விளிம்பு நிலை மக்களை அதிகார வலு உள்ளவர்களாக மேம்படுவத் தருவதற்கான நிலைப்பாடு என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.விரிவாக படிக்க
இந்தியா
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த டி.ஒய். சந்திர சூட் இன்று பணி ஓய்வு பெற்றார். அவரது பணி காலம் நவம்பர் 10 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் இன்று அலுவலக வேலையின் கடைசி நாளாகும். அவருக்கு சக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் பிரியாவிடை அளித்தனர்.விரிவாக படிக்க
- சபரிமலை செல்லும் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒருவேளை முன்பதிவு செய்த தேதியில் தரிசனம் செய்ய வரவில்லை என்றால் அதனை ரத்து செய்து விட்டு மீண்டும் புதிய தேதியை பதிவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை பயண தேதியை ரத்து செய்யாதவர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படாது எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விரிவாக படிக்க
- இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் சுக்குவுக்கு வழங்கப்பட இருந்த சமோசா மற்றும் கேக்குகளை பாதுகாப்பு ஊழியர்கள் சாப்பிட்ட விவகாரத்தில் 5 பேருக்கு சிஐடி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மாநில நலனை விட முதலமைச்சரின் சமோசா மீது அக்கறையா என மாநில பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.விரிவாக படிக்க
- ஆந்திராவில் முதல் முறையாக நீர் வழி விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரகாசம் அணையில் இருந்து ஸ்ரீசைலம் அணை வரை இந்த நீர் வழி விமான சேவையானது நாளை தொடங்கப்பட உள்ளது. இந்த சேவையை சோதனை முறையில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு இணைந்து தொடங்கி வைக்கிறார்கள்.
- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 3வது நாளாக பாஜக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எதிராக பிடிபி உறுப்பினர்களும் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனுடைய அமளியில் ஈடுபட்ட பாஜக உறுப்பினர்களை சபாநாயகர் வெளியேற்ற உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகம்
- நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அபார வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் ட்ரம்புக்கு ஆதரவாக பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் ரூபாய் 375 கோடி நிதியும் வழங்கினார். அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விரிவாக படிக்க
- ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பார்க்க தடை விதிக்கும் புதிய சட்டத்தை அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
- அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில் வரலாற்றில் முதல் முறையாக வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சூசி வைப்ஸ் என்ற அப்பெண் ட்ரம்பின் அரசியல் ஆலோசகராவார்.விரிவாக படிக்க
விளையாட்டு
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 35 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான் 26.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
- சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
- இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்சாரி ஜோசப் மற்றும் கேப்டன் ஹோப் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மைதானத்தில் இருந்து அல்சாரி ஜோசப் உடனடியாக வெளியேறினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து 2 போட்டிகளில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அல்சாரி ஜோசப்புக்கு தடை விதித்துள்ளது.