பொது போக்குவரத்து நிறுத்தம்.. ஐடி ஊழியர்களுக்கு WFH.. ஃபெங்கல் புயலால் ஸ்தம்பிக்கும் சென்னை!
Cyclone Fengal: புயல் கரையை கடக்கும் நேரத்தில் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும், நாளை ஐடி நிறுவன பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
வங்கக் கடலில் ஃபெங்கல் உருவாகி உள்ளது. இந்த புயல் நாளை பிற்பகல் காரைக்கால் – மாமல்லபுரத்துக்கு அருகே கரையை கடக்கக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை அருகே புயல் கரையை கடக்க இருப்பதால், சென்னையில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக நாளை சென்னைக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மக்களுக்கு முக்கிய உத்தரவு
மேலும், புயல் கரையை கடக்கும் நேரத்தில் சூறாவளிக் காற்றும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முதலே சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, புயல் கரையை கடக்கும் நேரத்தில் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும், நாளை ஐடி நிறுவன பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதை தவிர்த்து, பாதுகாப்பாக வீடுகளில் இருக்கமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
Also Read : ஃபெங்கல் புயல்… 9 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்
மேலும், சென்னை ஓம்.எம்.ஆர் மற்றும் ஈசிஆர் சாலைகளில் நாளை பொது போக்குவரத்து நிறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கையை அடுத்து, சென்னையில் பூங்காக்கள், கடற்கரை மூடப்படுகிறது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதாவது, மெரினா, திருவான்மியூர், காசிமேடு பகுதிகளில் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதோடு, கட்டுமான நிறுவனங்களுக்கு தமிழக அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதாவது, “அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமானத் தளங்களில் உள்ள கிரேன்கள் மற்றும் உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்கள் காற்றின் காரணமாக ஆடுவதலோ அல்லது விழுவதாலோ, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கிரேன்களை கீழே இறக்கி வைக்க வேண்டும். மேலும், விளம்பர போர்டுகளையும் இறக்க வைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.
ஃபெங்கல் புயல் தற்போது எங்கே?
Latest update: Cyclone FENGAL lay centred at 1730 IST of today, the 29th Nov 2024 near 11.5°N / 81.9°E, about 240 km E-NE of Nagapattinam, 230 km E-SE of Puducherry & 250 km SE of Chennai. Likely to move W-NW wards and cross coast close to Puducherry as CS.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 29, 2024
வங்கக் கடலில் பிற்பகலில் உருவான ஃபெங்கல் புயல், தற்போது வேகமாக நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது, ஃபெங்கல் புயல் தற்போது 15 கி.மீ வேகத்தல் நகர்ந்து வருகிறது. முன்னதாக மணிக்கு 13 கி.மீ நகர்ந்த நிலையில், தற்போது புயலின் வேகம் சற்று அதிகரித்துள்ளது.
Also Read : வங்கக் கடலில் ஃபெங்கல் புயல்.. எப்போது கரையை கடக்கும்? சென்னைக்கு ஆபத்தா?
தற்போது, நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 240 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 230 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 250 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகரும் இந்த புயல், நாளை பிற்பகல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நாளை மதியம் வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக – புதுவை கடற்கரையை, காரைக்காலிற்கும் – மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே புயலாக கடக்கக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.