திமுகவில் அதிகார போட்டியா? உதயநிதி கூட்டத்தை புறக்கணித்த கனிமொழி.. துணை முதல்வர் விளக்கம்!
தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் எம்.பி கனிமொழி புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியது. ஏற்கனவே, திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும் அதிகார போட்டி நிலவி வருவதாக பேசப்படும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கனிமொழி கலந்து கொள்ளாதது பேசும் பொருளாக மாறியது.
தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நேற்று இரவு தூத்துக்குடி சென்ற அவர், இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன்படி தூத்துக்கு மாவட்டத்தில் அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படும் நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதனை அடுத்து, தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
உதயநிதி கூட்டத்தை புறக்கணித்த கனிமொழி
அப்போது, வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேஷன் கார்டு, வருவாய்த்துறை சான்றிதழ் உள்ளிட்டவை வழங்குவது போன்ற சேவைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தில் எம்.எல்.ஏக்கள், எம்.பி ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆனால், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டங்களில் அத்தொகுதி திமுக எம்.பி. கனிமொழி கலந்து கொள்ளவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியது.
Also Read : தமிழகத்தில் பிச்சு உதறபோகுது மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் அலர்ட்!
விளக்கிய உதயநிதி ஸ்டாலின்
ஏற்கனவே, திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும் அதிகார போட்டி நிலவி வருவதாக பேசப்படும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கனிமொழி கலந்து கொள்ளாதது பேசும் பொருளாக மாறியது.
நிகழ்ச்சியில் கனிமொழி பங்கேற்காதது குறித்தும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் இங்கு வரும்பொழுது கனிமொழி எம்பியிடம் பேசிவிட்டு தான் வந்தேன்.
அவர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார் அதனால் அவர் கலந்து கொள்ள இயலவில்லை. மற்றொரு நாள் இன்னொரு நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து கலந்து கொள்கிறோம்” என்றார். திமுக கூட்டத்தில் கனிமொழி கலந்து கொள்ளாதது பேசும் பொருளமாக மாறியதை அடுத்து, உதயநிதி விளக்கம் அளித்தார்.
திமுகவில் அதிகார போட்டியா?
திமுகவில் உதயநிதிக்கும், கனிமொழிக்கும் அதிகார போட்டி நிலவுவதாக பேசப்படுகிறது. ஸ்டாலினுக்கு பிறகு கனிமொழிக்கு தான் இருக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். ஆனால், அதை மீறி உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தது கனிமொழி ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்ததாக தகவல்கள் வெளியானது.
கருணாநிதியின் அரசியல் வாரிசாக ஸ்டாலினும், கனிமொழியும் தான் கருதப்படுகிறார்கள். இதனால், ஸ்டாலினுக்கு பிறகு கனிமொழிக்கு தான் தலைமை அதிகாரம் வர வேண்டும் என திமுகவில் ஒரு சிலர் கூறி வந்ததாக தெரிகிறது.
ஆனால், அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அதே சமயத்தில், அமைச்சரவையில் கனிமொழியின் ஆதரவாளராக கருதப்படும் மனோ தங்கராஜும் நீக்கப்பட்டார். இது எல்லாம் திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
Also Read : “நலமாக இருக்கிறேன்”.. கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜி பேட்டி!
மாநிலத்தில் உதயநிதி, மத்தியில் கனிமொழி என ஸ்டாலினின் திட்டமாக இருந்தது. ஆனால், மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அமையாததால் அதிகாரம் இல்லாமல் கனிமொழி இருந்து வருகிறார். கட்சியில் துணை பொதுச்செயலாளர்களில் ஒருவராகவும், எம்.பியாகவும் கனிமொழி தொடர்ந்து வருகிறார். 2026 தேர்தலுக்கு பிறகு திமுக எதாவது ஒரு தேர்தலில் தோற்றால் உதயநிதிக்கு எதிராக கனிமொழி அரசியல் காய்களை நகர்த்த தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.