“நொறுங்கிவிட்டேன்” முரசொலி செல்வம் காலமானார்.. முதல்வர் ஸ்டாலின் வேதனை.. அரைக் கம்பத்தில் பறக்கும் திமுக கொடி! - Tamil News | former editor of dmk party organ murasoli Selvam passes away at 84 mk stalin condolences chennai | TV9 Tamil

“நொறுங்கிவிட்டேன்” முரசொலி செல்வம் காலமானார்.. முதல்வர் ஸ்டாலின் வேதனை.. அரைக் கம்பத்தில் பறக்கும் திமுக கொடி!

Murasoli Selvam: உடல்நலக் குறைவால் முரசொலி செல்வம் இன்று காலமானார். திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் மகள் செல்வி. இவரது கணவர் தான் முரசொலி செல்வம். 84 வயதான முரசொலி செல்வத்திற்கு வயது முதிர்வு தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நொறுங்கிவிட்டேன் முரசொலி செல்வம் காலமானார்.. முதல்வர் ஸ்டாலின் வேதனை.. அரைக் கம்பத்தில் பறக்கும் திமுக கொடி!

முரசொலி செல்வம்

Updated On: 

10 Oct 2024 14:07 PM

உடல்நலக் குறைவால் முரசொலி செல்வம் இன்று காலமானார். திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் மகள் செல்வி. இவரது கணவர் தான் முரசொலி செல்வம். 84 வயதான முரசொலி செல்வத்திற்கு வயது முதிர்வு தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டார். இவருக்கு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவு திமுக தொண்டர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முரசொலி செல்வம் காலமானார்

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் அன்பு மருமகனும், அவரது மனசாட்சியான முரசொலி மாறனின் இளவலும், தங்கை செல்வியின் கணவருமான என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கி, வேதனைக் குருதியை வடியச் செய்கிறது.

தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலியின் பணிகளைத் தன் தோளில் சுமந்துகொண்டு இளமைப் பருவம் முதலே திறம்படச் செயலாற்றியவர் அண்ணன் முரசொலி செல்வம். தலைவர் கலைஞரும் அவரது மனசாட்சியான முரசொலி மாறனும் மனதில் நினைப்பதை எழுத்தில் – செயலில் நிறைவேற்றியவர் பாசத்திற்குரிய முரசொலி செல்வம். கழகத்தின் போர்வாளான முரசொலி நாளேட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்று தன் எழுத்துகளால் ஜனநாயகக் குரலாக ஒலித்தவர்.

அடக்குமுறைக்கு அஞ்சாமல் சட்டமன்றத்தில் கூண்டிலேறி கருத்துரைத்தவர். “முரசொலி சில நினைவுகள்” என்ற அவரது புத்தகத் தொகுப்பு முரசொலி எதிர்கொண்ட நெருக்கடிகளையும் முரசொலியோடு செல்வத்துக்கு இருக்கும் பின்னிப் பிணைந்த உறவையும் எடுத்துரைப்பது ஆகும். தேர்தல் களம் முதல் திரைப்படப் பணிகள் வரை அனைத்துத் துறைகளிலும் முத்திரையைப் பதித்தவர். எந்த நிலையிலும் கழகமே மூச்சு என வாழ்ந்த கொள்கைச் செல்வம் அவர்.

அரசியல் தலைவர்கள் இரங்கல்:

அதிர்ந்து பேசாதவர். ஆனால், ஆழமான கொள்கைவாதி. சிலந்தி என்ற பெயரில் முரசொலியில் அவர் எழுதிய நையாண்டியும் நகைச்சுவையும் ததும்பும் கட்டுரைகள் கழகத்தின் இளைய தலைமுறையினருக்குக் கொள்கை இரத்தம் பாய்ச்சும் வலிமை கொண்டவை. நேற்று முன்தினம்கூட முரசொலியில் கட்டுரை எழுதிய அவர், இன்று காலையில் அடுத்த கட்டுரைக்கான குறிப்புகளை எடுத்துவைத்துவிட்டு, சற்று கண்ணயர்ந்த நேரத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார் என்பதைக் கேட்டதும் இதயம் அதிர்ந்து, நொறுங்கிவிட்டேன்.

Also Read: குஷியில் அரசு ஊழியர்கள்..! தீபாவளி போனஸ் அறிவித்த தமிழ்நாடு அரசு.. யாருக்கு எவ்வளவு? முழு விவரம்..

சிறுவயது முதலே எனக்கு அண்ணனாக – வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து, கழகத்துடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர் என் பேரன்பிற்குரிய அண்ணன் முரசொலி செல்வம். தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன்.

என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கழகத்திலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்! செல்வமே.. முரசொலி செல்வமே.. பண்பின் திருவுருவமே… திராவிட இயக்கத்தின் படைக்கலனே… கழகத்தின் கொள்கைச் செல்வமே.. நெஞ்சிலும் நினைவிலும் என்றும் நிலைத்திருப்பீர்” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியதாவது, ”முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மருமகனும் அரசியல் மேதை முரசொலி மாறன் அவர்களின் சகோதரரும் தலைசிறந்த எழுத்தாளர், பத்திரிகையாளருமான திரு.முரசொலி செல்வம் அவர்கள் இன்று (10.10.2024) காலை மறைவெய்தினார்.

கழகம் தொடங்கப்பட்ட காலம் தொட்டு கழகத்தின் கொள்கை பரப்பியவரும் – இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவருமான திரு.முரசொலி செல்வம் அவர்களின் மறைவினையொட்டி தமிழகம் முழுவதும் இன்று (10.10.2024) முதல் மூன்று நாட்களுக்கு கழக அமைப்புகள் அனைத்தும் கழகக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்தார்.

தயாநிதி மாறன் எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “‘முரசொலி’ நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மருமகனும், முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் சகோதரருமான திரு. முரசொலி செல்வம் அவர்கள் இன்று காலை எங்களை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற அதிர்ச்சியான செய்தியை வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

Also Read: சென்னை கத்திப்பாரா பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. எப்படி செல்ல வேண்டும் ? நோட் பண்ணுங்க மக்களே..!

1942 ஆம் ஆண்டு கருணாநிதியால் இளமைப் பருவத்தில் தொடங்கப்பட்ட முரசொலி பத்திரிகை. முரசொலி பத்திரிகையின் ஆசிரியராக செல்வம் நீண்ட காலம் இருந்தார். உடல்நலக் குறைவு காரணமாக பதவி விலகினார். தற்போது இந்த நாளிதழை கருணாநிதியின் பேரனும் தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட் இதோ!
ஹேப்பி பர்த்டே அக்‌ஷரா ஹாசன்...
பிறந்த நாள் வாழ்த்துகள் ஸ்னேகா...!
மன அழுத்தம் குறைய இதை செய்யுங்கள்!
Exit mobile version