Crime: பள்ளி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.. வார்டன், பள்ளி தாளாளர் கைது!

Tirupur: பத்தாம் வகுப்பு படிக்கும் சில மாணவர்கள் தங்களிடம் பல மாதங்களாக விடுதி வார்டன் சரண் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி நிர்வாகத்தை அணுகி இதுதொடர்பாக கேள்வியெழுப்பியுள்ளனர். ஆனால் நிர்வாகத்தின் சரியாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.

Crime: பள்ளி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.. வார்டன், பள்ளி தாளாளர் கைது!

கைது செய்யப்பட்ட நபர்கள்

Published: 

14 Nov 2024 08:40 AM

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கு விடுதியில் பாலியல் தொல்லை அளித்ததாக வார்டன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக பள்ளி தாளாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாவட்டத்தையே அதிர வைத்துள்ள இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது பற்றி காணலாம். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. விடுதியுடன் செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த  மாணவர்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள மாணவர்களும் தங்கி படித்து வருகின்றனர். பள்ளியின் உட்புறத்தில் அமைந்துள்ள விடுதியில் தலைமை கண்காணிப்பாளராக ராம்பாபு என்பவர் பணியாற்றி வருகிறார்.

அதே சமயம் வார்டனாக சரண் என்பவர் வேலை பார்த்து வருகிறார். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வரும் நிலையில் அங்கு தங்கியிருந்த 17 மாணவர்களிடம் விடுதி வார்டனான சரண் பல மாதங்களாக பாலியல் ரீதியாக அத்துமீறி வந்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் பல மாணவர்களை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

Also Read: மருத்துவருக்கு கத்திக்குத்து.. அரசு மருத்துவமனைகளில் வருகிறது புதிய கட்டுப்பாடு!

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் சில மாணவர்கள் தங்களிடம் பல மாதங்களாக விடுதி வார்டன் சரண் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி நிர்வாகத்தை அணுகி இதுதொடர்பாக கேள்வியெழுப்பியுள்ளனர். ஆனால் நிர்வாகத்தின் சரியாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி முன்பு திரண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக திருப்பூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் அனைத்து மாணவர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஏற்கனவே சரண் அளித்த பாலியல் தொல்லை குறித்து விடுதி தலைமை கண்காணிப்பாளரான ராம்பாபு மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோரிடம் பலமுறை புகார் அளித்து விட்டோம்.

ஆனால் இதனை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என தங்களை மிரட்டியதோடு அடித்ததாகவும் அதிர்ச்சி தரும் தகவல்களை மாணவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் விடுதி கண்காணிப்பாளரான ராம்பாபு, பள்ளியின் தாளாளர் சுரேஷ், வார்டன் சரண் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

Also Read: ”யாருக்கும் பாதுகாப்பு இல்லை” .. கொதித்தெழுந்த விஜய்!

பள்ளியில் தொடரும் குற்றச்சம்பவங்கள்

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கல்வி நிலையங்களில் மாணவ,மாணவியர்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு வரும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குருவாக போற்றப்படும் ஆசிரியர்களும், கோவிலாக போற்றப்படும் பள்ளியில் பணியாற்றும் ஊழியர்களும் இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாமுக்கு பள்ளி மாணவிகளை அளித்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தது, திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப கழக பெண்கள் விடுதியில் இணையதள இணைப்பை பழுது பார்க்க வந்த நபர் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, வால்பாறை அரசு கல்லூரியில் தற்காலிக பேராசிரியர்கள் ஆய்வு கூட உதவியாளர் போன்றோர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் புகார் தெரிவித்தது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சம்பவங்கள் மறைவதற்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருச்செந்தூர் அருகே செயல்படும் தனியார் பள்ளியில் மாணவிகளை விளையாட்டுப் போட்டிக்கு அழைத்துச் சென்ற உடற்கல்வி ஆசிரியர் அவர்களை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பள்ளியின் முதல்வரும், செயலாளரும் கைது செய்யப்பட்டனர். கல்வி நிலையங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறையும்,  தமிழ்நாடு அரசும் எச்சரிக்கை விடுத்தும் குற்றங்கள் நடைபெறுவது மிகவும் கவலையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது எப்படி?
... இதுதான் அதுக்கு காரணம் - ஐஸ்வர்ய லட்சுமி
இணையத்தை கலக்கும் நடிகை மாளவிகா நியூ ஆல்பம்
சர்க்கரை நோயாளிகள் பேரிச்சம்‌‌ பழம் சாப்பிடலாமா?