TVK Vijay Political Entry: நடிகர் முதல் அரசியல் கட்சி தலைவர் வரை.. விஜய் கடந்து வந்த பாதை ஓர் அலசல்..
பொதுவாக திரையில் தனது நடிப்பால் மிரள வைக்கும் விஜய் நிஜத்தில் அப்படி இல்லை. பெரிதும் பேசாமல் இருப்பவர். எந்த விஷயத்திலும் தலையிட மாட்டார். அப்படி இருக்கும் நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேச தொடங்கினார். இது 2010 ஆண்டுக்கு பிறகே நடக்கத் தொடங்கியது. அதாவது அவரது படங்கள் வெளியாவதில் தொடர் சர்ச்சைகள் இருந்து வந்தது.
இன்று தமிழ் சினிமாவின் டாப் நடிகரான விஜய் ஆரம்ப கட்டத்தில் சினிமா பயணத்தில் மிகவும் தத்தளித்து வந்தார். தந்தை எஸ்.ஏ சந்திரெசேகர் மூலம் திரையுலகிற்கு வந்திருந்தாலும், ஆரம்ப கட்டம் இவருக்கு பல அடிகள் விழுந்தது. ஒரு கட்டத்தில் மார்க்கெட் அவுட் என நினைத்த நேரத்தில் தான் பூவே உனக்காக என்ற திரைப்படம் விஜய்க்கு கைக்கொடுத்தது. குடும்ப படமான பூவே உனக்காக மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் மெல்ல மெல்ல முன்னேற்றம் கண்டார். அதனை தொடர்ந்து குடும்ப படங்களில் நடித்து வந்தார். 2000 ஆவது ஆண்டின் பிறகு அவர் ரூட்டை மாற்றி திருமலை, திருப்பாச்சி, கில்லி, சிவகாசி, குருவி, போக்கிரி போன்ற படங்களில் நடித்து ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்தார். இந்த படங்கள் மூலம் நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் டாப் நடிகராக மாறினார்.
அரசியல் பயணத்திற்கு வந்தது எப்படி?
பொதுவாக திரையில் தனது நடிப்பால் மிரள வைக்கும் விஜய் நிஜத்தில் அப்படி இல்லை. பெரிதும் பேசாமல் இருப்பவர். எந்த விஷயத்திலும் தலையிட மாட்டார். அப்படி இருக்கும் நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேச தொடங்கினார். இது 2010 ஆண்டுக்கு பிறகே நடக்கத் தொடங்கியது. அதாவது அவரது படங்கள் வெளியாவதில் தொடர் சர்ச்சைகள் இருந்து வந்தது. குறிப்பாக 2011 ஆம் ஆண்டு காவலன் திரைப்படம், 2013 ஆண்டு வெளியான தலைவா போன்ற படங்கள் வெளியாவதில் சர்ச்சைகள் ஏற்பட்டது. இதோடு நிற்காமல் அடுத்தடுத்தும் இவர் படங்களுக்கு சோதனை காலமாகவே இருந்தது. கத்தி படம் வெளியான போது அதில் காற்றை வைத்து ஊழல் செய்யும் நாடு இது என்ற வசனம் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
2017 ஆம் ஆண்டு மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற சம்பவங்கள் விமர்ச்சிக்கப்பட்டதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அப்போதைய மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன், எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் படம் வெளியாக ஒரு நாள் முன்வரை சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் இருந்தது. பின்னர் அந்த படம் வெளியான நிலையில், ராகுல் காந்தி, தற்போதைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தனர்.
இசை வெளியீட்டு விழாவில் அரசியல்:
அப்படி தொடர் சர்ச்சைகளுக்கு மத்தியில் அவரது படங்கள் வெளியானது. மெர்சல் மட்டுமல்ல அதனை தொடர்ந்து வந்த சர்கார், பிகில், போன்ற எல்லா திரைப்படங்களிலும் எதாவது ஒரு அரசியல் ட்விஸ்ட் இருக்கும். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மெல்ல மெல்ல தனது படங்களுக்கான இசை வெளியீட்டு விழாவில் அரசியல் ரீதியான கருத்துக்களை பதிவு செய்யத் தொடங்கினார். நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறி பின் வாங்கிய நிலையில் நடிகர் விஜய் அரசியல் குறித்து பேசுவது ரஜினியை அட்டாக் செய்வதாக பலரும் நினைத்தனர். இதனால் இருவருக்கும் இடையே ஒரு மறைமுக கோல்ட் வார் நடந்து வருகிறது.
மேலும் படிக்க: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு.. காலை முதல் குவியும் தொண்டர்கள்..
அரசியல் பயணத்தின் தொடக்க புள்ளி:
இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசி வந்த நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற கருத்து பல வருடமாக இருந்து வந்தது. ஆனால் அதற்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் தான் உண்டு தனது வேலை உண்டு என சத்தமே இல்லாமல் விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்தி வந்தார். இதன் விளைவாக கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ மற்றும் பரிசு வழங்கினார். இது வருங்கால வாக்களர்களை கவரும் ஒரு யுக்தியாக கூறப்பட்டது. இப்படி மெல்ல மெல்ல நடிகர் விஜய் அரசியல் களத்தில் கால் தடம் பதிக்க தொடங்கினார்.
இப்படியான சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவிப்பு வெளியிட்டார். முதலில் எல்லோரும் இதுவும் ஒரு நாடகம் தான், தாக்கு பிடிக்க மாட்டார், அரசியலாம் செய்ய வராது என பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. இதனை தவிடுபொடியாக்கும் வகையில் விஜய் தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து அங்கீகாரம் பெற்றார். இது முதல் வெற்றி. 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு எனவும் குறிப்பிட்டிருந்தார்.
கட்சி கொடி முதல் மாநாடு வரை:
கட்சி அறிவித்த பிறகு மக்கள் பிரச்சனைக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவத்தில் அவர் நேரில் சென்று உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். சமீபத்தில் சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியின் போது நடந்த உயிரிழப்பு வரை அனைத்திற்கு அறிக்கை மூலம் குரல் கொடுத்து வரும் விஜய் ஆகஸ்ட் 22 ஆம் தேதி தனது கட்சிக்கொடியை அறிமுகம் செய்தார். அதனை தொடர்ந்து கட்சியில் முதல் மாநாடு அறிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டிற்கான அனுமதி வெறுவதில் சில சிக்கல்கள் இருந்தாலும், அனுமதி கிடைத்ததும் பக்கா பிளானுடன் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வி.சாலையில் நடைபெறுகிறது. பிரம்மாண்டமான செட் அப்பில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.