சென்னையில் நாட்டின் முதல் நீரிழிவு உயிரி வங்கி.. இதன் சிறப்புகள் என்ன?
Indias first diabetes biobank in Chennai:இந்திய நாட்டிலே முதன் முறையாக சென்னையில் நீரிழிவு உயிரி வங்கி அமைக்கப்படுகிறது. இதன் நோக்கம் என்ன? எப்படி முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியாவின் முதல் நீரிழிவு உயிரி வங்கி: இந்தியாவின் முதல் நீரிழிவு உயிரி வங்கி சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. இது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நிறுவப்பட்டுள்ளது. இதன் நோக்கம், இந்திய நாட்டில் நீரிழிவு நோய்க்கான அறிவியல் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையை மேம்படுத்துதே ஆகும். இது தொடர்பான ஓர் ஆய்வின்படி, இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் மற்றும் 13.6 கோடி ப்ரீடியாபயாட்டீஸ் நோயாளிகள் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இது, உலகிலேயே மிக அதிகமாகும்.
நீரிழிவு மருத்துவ ஆராய்ச்சி
நீரிழிவு பாதிப்பின் மாறுபாடுகள் மற்றும் பிற தொடர்புடைய கோளாறுகள் பற்றிய மேம்பட்ட ஆராய்ச்சியை எளிதாக்கும் நோக்கில் அடுத்தக் கட்ட முயற்சியை இந்தியா முன்னெடுத்துள்ளது.
அந்த வகையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் இணைந்து நாட்டின் முதல் நீரிழிவு உயிரி வங்கியை அமைத்துள்ளது.
கர்ப்பகால நீரிழிவு மாதிரிகள்
இது, அறிவியல் ஆய்வுகளுக்கு உதவும் வகையில் உயிர் மாதிரிகளைச் சேகரித்து, ஆராய்ச்சிக்கு பயன்படுத்தும். இது குறித்து, மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் மருத்துவர் மோகன், “பயோபேங்க் அமைப்பதற்கான செயல்முறை சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது” என்றார்.
தொடர்ந்து, “டயாபிடிக் வகை 1, 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு போன்ற இளம் வயதினரின் பல்வேறு வகையான நீரிழிவு நோய்களின் ஏராளமான இரத்த மாதிரிகள் இங்குள்ளன.
இது, எதிர்கால ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிக்காக சேமிக்கப்பட்டுள்ளன” என்றார். மேலும், இந்தப் பயோபேங்க் பற்றிய விவரங்கள் மற்றும் அதை அமைப்பதன் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்தும் கூறினார்.
இது குறித்து ஏற்கனவே சமீபத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், சேகரித்தல், சேமித்தல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி ஆகியவை மிக முக்கியமாக உள்ளன.
மாநிலம் முழுக்க மாதிரிகள் சேகரிப்பு
மேலும் அந்தக் கட்டுரையில், “நீரிழிவு பயோபேங்க் ஆரம்பகால நோயறிதலை அடையாளம் காணவும் தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை உத்திகளை உருவாக்கவும் உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இது நீரிழிவு நோயின் முன்னேற்றம் மற்றும் காலப்போக்கில் அதன் சிக்கல்களைக் கண்காணிப்பதற்கான நீளமான ஆய்வுகளை ஆதரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தையும் உள்ளடக்கியது ஆகும். அதாவது, பொது மக்களிடையே நீரிழிவு நோய் அதிகரிப்பதைக் குறிக்கிறது.
மேலும் இது குறித்து 2008 முதல் 2020 வரை பல கட்டங்களாக நீரிழிவு குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதாவது, 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 33,537 நகர்ப்புற மற்றும் 79,506 கிராமப்புற குடியிருப்பாளர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 400 ஆண்டுகள் பழமை.. 46 ஆண்டுகளாக பூஜை இல்லை.. முருகர், பார்வதி, சிவன் சிலை மீட்பு!