5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கைது.. கேரளாவில் சுற்றி வளைத்த தனிப்படை..

கரூரில் 100 கோடி ரூபாய் நிலத்தை போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பதிவு செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரை சிபிசிஐடி தனிப்படை போலீசார் கேரளாவில் அதிரடியாக கைது செய்துள்ளனர். கேரளாவில் இருந்து கரூருக்கு முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரை சிபிசிஐடி அதிகாரிகள் அழைத்து வருகின்றனர். இரண்டு முறை முன் ஜாமின் தள்ளுபடி ஆன நிலையில் சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 34 நாட்கள் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கைது.. கேரளாவில் சுற்றி வளைத்த தனிப்படை..
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 16 Jul 2024 15:07 PM

 

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கைது: கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலி சான்றிதழ் கொடுத்து 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடியாக பதிவு செய்ததாக யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 9-ம் தேதி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் தானும் சேர்க்கப்படலாம் என்ற அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு கடந்த மாதம் 12 ஆம் தேதி மனு தாக்கல் செய்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே சார்பதிவாளர் அளித்த நில மோசடி புகார் வழக்கு கடந்த மாதம் 14 ஆம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

மேலும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நில உரிமையாளர் ஷோபனாவின் தந்தை பிரகாஷ் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் கடந்த மாதம் 14 ஆம் தேதி புகார் அளித்தார். இவ்வழக்கு வாங்கல் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு கடந்த மாதம் 22 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீன் உள்ளிட்ட 13 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரது சிகிச்சையின்போது தான் உடனிருக்க வேண்டும் எனக் கூறி கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமீன் கேட்டு மீண்டும் ஜூலை 1 ஆம் தேதி மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே, சார் பதிவாளர் அளித்த புகாரில் இடம்பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் கடந்த 5 ஆம் தேதி சோதனை நடத்தினர்.

இந்நிலையில் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் ஆகியோர் சிபிசிஐடி மற்றும் வாங்கல் வழக்குகளில் தாக்கல் செய்திருந்த இரு முன்ஜாமீன் மனுக்கள் கடந்த 6 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் இருந்தனர்.

Also Read:  நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

கடந்த 7 ஆம் தேதி எம் ஆர் விஜயபாஸ்கர் உறவினர்கள் தொடர்பான 5 இடங்களில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தினர்.அப்போது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனைவி விஜயலட்சுமியிடமும் விசாரணை நடத்தினர். சோதனையின் போது ஆவணங்கள், பென்டிரைவ் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனுவும் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடுத்து எம்.ஆர். விஜயபாஸ்கரை பிடிக்க சிபிசிஐடி தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்களிடம் எம் ஆர் விஜயபாஸ்கர் தொடர்பு கொண்ட போது சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கேரளாவில் தலைமுறைவாகி இருப்பது சிபிசிஐடி போலிசாருக்கு தெரிய வந்தது. அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரின் உதவியோடு தலைமறைவாக இருப்பதாகவும் தெரிய வந்தது. இந்நிலையில் கடந்த 34 நாட்களாக தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளா திருச்சூரில் வைத்து சிபிசிஐடி தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ட்ரான்ஸ்லேட் வாரண்ட் பெறப்பட்டு தமிழகத்திற்கு அழைத்து வரும் பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக கேரளாவில் இருந்து கரூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருக்கும் விசாரணை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read: போதைப்பொருள்.. பிரபல நடிகையின் சகோதரர் அதிரடியாக கைது.. என்ன நடந்தது?

Latest News