திருமா, சீமானுக்கு வாழ்த்து சொன்ன விஜய்.. பரபரப்பாகும் தமிழக அரசியல்!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கும், நாம் தமிழர்  கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ”நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

திருமா, சீமானுக்கு வாழ்த்து சொன்ன விஜய்.. பரபரப்பாகும் தமிழக அரசியல்!

த.வெ.க விஜய்

Updated On: 

07 Jun 2024 13:45 PM

திருமா, சீமானுக்கு வாழ்த்து சொன்ன விஜய்: 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றி வெற்றி பெற்றது.  அதிமுக, பாஜக கூட்டணிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. நாம் தமிழர் கட்சியும் தோல்வியை சந்தித்தது. ஆனால், கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு கணிசமாக உயர்ந்துள்ளது. அதாவது, நாம் தமிழர் கட்சி மொத்தம் 8.19 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெற 8 சதவீத வாக்குகள் தேவை என்ற நிலையில், 8.19 சதவீத வாக்குகளை பெற்று நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது. அதேபோல, திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தேர்தல் ஆணைய ஆங்கீகாரம்  பெற்றுள்ளது.

அதாவது,  சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில் தனி சின்னத்தில் (பானை ) விசிக போட்டியிட்டது. அதில், சிதம்பரத்தில் தொல். திருமாவளவன் ஒரு லட்சத்துக்கும் மேலான வாக்கு வித்தியாசத்திலும், விழுப்புரத்தில் ரவிக்குமார் 69 ஆயிரத்தும் மேலான வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.  எனவே, மொத்தமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி  8 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளனர். மேலும், தொடர்ந்து 2019, 2021, 2024 தேர்தல்களில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றதை அடுத்து, தேர்தல் அங்கீகாரம் பெற்றது விடுதலை சிறுத்தைகள் கட்சி.   இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கும், நாம் தமிழர்  கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

”மக்களின் நம்பிக்கையைப் பெற்ற திருமா, சீமான்”

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ”நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்” என்றார். திமுக கூட்டணியில் உள்ள விசிகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள விஜய், இமாலய வெற்றி பெற்றுள்ள திமுக மற்றும் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு எல்லாம் எந்தவித வாழ்த்தும் தெரிவிக்கவில்லை.

பரபரப்பாகும் அரசியல் களம்:

மக்களவைத் தேர்தல் முடிந்ததை அடுத்து, 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றனர். ஏற்கனவே தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, நாதக  என நான்கு முனைப்போட்டி இருக்கும் நிலையில்,  சட்டப்பேரவை தேர்தலில் த.வெ.க கட்சியும் இணைகிறது. இதற்கிடையில், நாம் தமிழர் மற்றும் விசிகவை குறிப்பிட்டு  விஜய் வாழ்த்து சொன்னது அரசியலில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால், 2026 சட்டப்பேரவை  தேர்தலை மனதில் வைத்து தான் விசிக, நாம் தமிழர் கட்சிகளை குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்ததாக அரசியில் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

2026 தேர்தலில் விஜய், விசிக, நாதக ஆகியோருடன் இணைந்து தேர்தலை சந்திப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால், தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், இவை அனைத்து உறுதிப்படுத்தபடாத தகவல்களாகவே உள்ளன. ஜூன், ஜூலையில் விஜய் பொதுக்கூட்டம் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் தனது கட்சியின் கொள்கைகள், சித்தாந்தங்கள்,  சின்னம் ஆகியவற்றை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டம் தென்மாவட்டங்களில் நடத்தப்படலாம் என்று தமிழக வெற்றிக் கழக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. 2026 தேர்தலில் விஜய் போட்டியிடும் பட்சத்தில், களம் நான்கு முனையாகவோ, ஐந்து முனையாகவோ மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!