5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

திருமண சர்ச்சை.. சூரியனார் கோயில் மடத்தை விட்டு வெளியேறிய ஆதீனம்..!

Kumbakonam: மடத்தின் ஆதீனமாக 28 வது தலைமை மடாதிபதியாக மகாலிங்க சுவாமி என்பவர் இருந்து வருகிறார்.  இதனிடையே இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹேமா ஸ்ரீ என்ற பெண் பக்தரை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.  இவர்களது திருமணம் கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி பெங்களூருவில் பதிவு திருமணமாக நடந்துள்ளது. சூரியனார் மடத்தின் ஆதீனமான மடாதிபதி மகாலிங்கம் திருமணம் செய்து கொண்டது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

திருமண சர்ச்சை.. சூரியனார் கோயில் மடத்தை விட்டு வெளியேறிய ஆதீனம்..!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 12 Nov 2024 21:48 PM

கும்பகோணம்: தஞ்சாவூர் சூரியனார் கோயில் மடத்தின் பொறுப்பு மற்றும் நிர்வாகத்தை ஆதீன மடாதிபதியான மகாலிங்க பண்டார சந்நதி இந்து சமய அறநிலைத்துறையிடம் ஒப்படைப்பதாக கடிதம் எழுதிக் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 18 சைவ மடங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் சூரியனார் கோயிலை மையப்படுத்தி அமைந்துள்ள ஆதீன மடமாகும். இந்த மடம் 14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சார்ந்த மன்னர்கள் பலரும் இந்த சூரியனார் மடத்திற்கு ஏராளமான நிலங்களை தானமாக வழங்கியுள்ளனர். இந்த மடத்தில் பிரம்மச்சாரிகள் மட்டுமல்லாது இல்லறத்தை துறத்து துறவறம் பூண்டவர்களும் மடாதிபதியாக இருந்துள்ளனர்.

Also Read: Tirunelveli: தியேட்டராக மாறிய பள்ளி.. வேட்டையன், கோட் படம் ஒளிபரப்பால் சர்ச்சை!

திருமணம் செய்த மடாதிபதி

இப்படியான நிலையில்  இந்த மடத்தின் ஆதீனமாக 28 வது தலைமை மடாதிபதியாக மகாலிங்க சுவாமி என்பவர் இருந்து வருகிறார்.  இதனிடையே இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹேமா ஸ்ரீ என்ற பெண் பக்தரை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.  இவர்களது திருமணம் கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி பெங்களூருவில் பதிவு திருமணமாக நடந்துள்ளது. சூரியனார் மடத்தின் ஆதீனமான மடாதிபதி மகாலிங்கம் திருமணம் செய்து கொண்டது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

திருமணத்திற்கான பதிவு சான்றிதழும் இணையத்தில் வைரலானது. இப்படியான நிலையில் மடாதிபதி திருமணம் செய்து கொண்டதால் மடத்தின் மாண்பு குறைந்து விட்டதாக ஆன்மீக அன்பர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  மேலும் சூரியனார் மடத்தைச்  சுற்றியுள்ள கிராம மக்களின் ஒரு தரப்பினர் கடுமையாக ஆதீனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனிடையே திருமணம் செய்து கொண்டது தொடர்பாக  மகாலிங்க சுவாமி வீடியோ மூலம் விளக்கம் அளித்தார்.

அதில், “மடத்தின் மரபுகளை தான் மீறவில்லை என்றும், நடந்த எதையும் தான் மறைக்க விரும்பவில்லை என்றும் கூறினார். திருமணமானவர்களும் ஆதீனத்தின் மடாதிபதியாக இருந்துள்ளனர். எனவே நான் எதையும் மறைக்க விரும்பாமல் திருமணம் செய்ததைப் பற்றி தெரிவித்துக் கொள்கிறேன். 4 பேருக்கு தெரிந்து தான் பதிவுத்திருமணம் செய்துக் கொண்டேன்.  நான் திருமணம் செய்து கொண்ட ஹேமா ஸ்ரீ சூரியனார் மடத்திற்கு பக்தராக வந்து சென்றவர். இனியும் அவர் மடத்திற்கு பக்தராக மட்டுமே வந்து செல்வார்” என தெரிவித்தார்.

Also Read: TNSTC: பைக், டிவி, ஃப்ரிட்ஜ்.. அரசு பேருந்தில் பயணித்தால் பம்பர் பரிசு அறிவிப்பு!

மாண்பை மீறிய செயல் என குற்றச்சாட்டு

ஆனால் ஆதீனத்துக்கு இதுதான் முதல் திருமணமாகும். அவர் பதிவு திருமணம் செய்த ஹேமா ஸ்ரீக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சூரியனார் மடத்துக்கு சொந்தமான சொத்துக்களை அபகரிக்கவே இந்த திருமணம் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. மதுரை, தருமபுரம், திருவாடுதுறை ஆதீனங்களில் திருமணம் ஆகாதவர்கள் தான் மடாதிபதியாக வர முடியும். ஆனால் சூரியனார் மடத்தில் அப்படி கிடையாது. இல்லறத்தில் இருந்து துறவறம் மேற்கொண்டவர்களும் வரலாம். ஆனால் துறவறம் பூண்டவர்கள் மீண்டும் இல்லறம் திரும்பக்கூடாது. ஆனால் மகாலிங்க சுவாமி அதற்கு நேர்மாறாக செயல்படுகிறார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

இப்படியான நிலையில் ஆதீன மடாதிபதி திருமணம் செய்த விவகாரத்தில் மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக  இன்று ஆதீன மடத்தை விட்டு  மடாதிபதி மகாலிங்க சுவாமி வெளியேற வேண்டும் என்ற ஒரு தரப்பிலும், இன்னொரு தரப்பினர் அவர் மடத்தை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பும் சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம் எனக் கூறிவிட்டு மடத்தை விட்டு வெளியே சென்று  ஆதீன மகாலிங்க சுவாமி அமர்ந்தார்.

மேலும் ஆதீனமடத்தை இந்த அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கக்கோரி கடிதம் அளித்துள்ளார். இதனிடையே மகாலிங்க சுவாமி வெளியே சென்றதைத் தொடர்ந்து எதிர் தரப்பைச் சேர்ந்தவர்கள் மடத்தின் கேட்டை மூடி பூட்டு போட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பதற்றமான சூழலை தடுக்க இரண்டு டிஎஸ்பிக்கள் தலைமையில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். இப்படியான நிலையில் மடத்தின் சாவிகளை அறநிலையத்துறை செயல் அலுவலரிடம் ஒப்படைத்து விட்டு மகாலிங்க சுவாமி தனது உடமைகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

Latest News