5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamil Nadu Weather: மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – பாலச்சந்திரன் தகவல்!

Weather alert: தென் மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் கடலோர பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், சென்னை, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழையும் பெய்து வருகிறது.

Tamil Nadu Weather: மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – பாலச்சந்திரன் தகவல்!
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 12 Dec 2024 17:13 PM

வருகின்ற 15ம் தேதி அந்தமான் கடல் பகுதியில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுகுறைந்த பின் படிப்படியாக மழை குறையும் வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். நாளை தென் தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் கடலோர பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், சென்னை, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழையும் பெய்து வருகிறது.

ALSO READ: Rain: இன்று வடக்கு.. நாளை தெற்கு .. தமிழகத்தில் வெளுக்கப்போகும் மழை!

பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பு:

தொடர் கனமழை குறித்து இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, டிசம்பர் 12ம் தேதியான இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதையடுத்து, அடுத்த 12 மணிநேரத்தில், மேற்கு – வடமேற்கு திசைகளில் நகர்ந்து, படிப்படியாக வலுகுறைந்து தென் தமிழக் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவும்.

இதன் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. கடலோர பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்கரை பகுதியில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இது தவிர, 4 இடங்களில் கனமழையும், 72 இடங்களில் அதி கனமழையும் பதிவாகியுள்ளது. அடுத்து வரும் 2 நாட்கள் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழை எச்சரிக்கையை பொறுத்தவரை, அடுத்து வரும் 24 மணிநேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. மேலும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “ நாளை தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில், தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரி கடல், லட்ச தீவு பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், இந்த பகுதியில் இருக்கும் மீனவர்கள் இன்றும், நாளையும் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

இனிவரும் நாட்களில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?

டிசம்பர் 13:

தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். அதேபோல் திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர்,  தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழையும். பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 14, 15:

வருகின்ற டிசம்பர் 14, 15ம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 16:

தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், உள்தமிழகத்தி ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து செங்கல்பட்டு, மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.

ALSO READ: Rain: இன்று வடக்கு.. நாளை தெற்கு .. தமிழகத்தில் வெளுக்கப்போகும் மழை!

டிசம்பர் 17:

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Latest News