Namakkal: சாதி பெயரில் இயங்கி வந்த பள்ளி.. மை பூசி அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!

Anbil Mahesh: பள்ளியின் இந்த பெயரை எப்படியாவது மாற்ற வேண்டும் என பள்ளியில் படிக்கும் மாணவர்கள், வேலை செய்யும் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், அப்பகுதி ஊர் மக்கள் என அனைவரும் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று திடீரென பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வந்தார்.

Namakkal: சாதி பெயரில் இயங்கி வந்த பள்ளி.. மை பூசி அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!

பள்ளி பெயர் பலகையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம்

Published: 

26 Nov 2024 06:15 AM

நாமக்கல் அருகே அரிசன் காலனி என்ற பெயரில் இயங்கி வந்த பள்ளிக்கூடத்தின் பெயரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் சென்று மாற்றியுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் மிகுந்த பாராட்டைப் பெற்று வருகிறது. சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப தமிழ்நாட்டில் சாதி பாகுபாடுகள் வெகுவாக கைவிடப்பட்டு வருகிறது. குறிப்பாக பெயருக்கு பின்னால் சாதியை சேர்த்துக் கொள்ளும் வழக்கம் தலைமுறைக்கு தலைமுறை குறைந்து வருகிறது என சொல்லலாம். ஒருவேளை மூத்த வயதினர் தங்களுடைய பெயரில் சாதி இருந்தாலும் அதனை வெளியில் சொல்லவே தவிர்த்து வருகின்றனர்.

மேலும் சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் சாதிகள் பெயர் கொண்ட ஊர்கள், தெருக்கள், கட்டட பெயர்கள் என அனைத்தும் உள்ள நிலையில் அவையெல்லாம் சமீபகாலமாக மாற்றப்பட்டு வருகிறது. சாதிகள் என்ற வார்த்தையை மக்கள் தங்கள் பேச்சில் இருந்து மறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இப்படியான நிலையில்  நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுள்ள சம்பவம் தமிழக மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

Also Read: “ராமதாஸ் பற்றி அப்படி பேசுவதா?”.. முதல்வர் ஸ்டாலினுக்கு வலுக்கும் கண்டனங்கள்..

நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் மல்லசமுத்திரம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் அரிசன் காலனி என்ற ஏரியா உள்ளது. பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்தப் பள்ளியானது அரிசன்  காலனி பள்ளியென நீண்ட காலமாக ஜாதி பெயரை அடையாளமாகக் கொண்டு அழைக்கப்பட்டு வந்தது. இப்படியான நிலையில் இந்த பெயரை எப்படியாவது மாற்ற வேண்டும் என பள்ளியில் படிக்கும் மாணவர்கள், வேலை செய்யும் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், அப்பகுதி ஊர் மக்கள் என அனைவரும் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று திடீரென பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்றார்.

அங்கு பள்ளியின் பெயர் பலகையில் இருந்த அரிசன் காலனி என்ற பெயரை கருப்பு மை பூசி உடனடியாக அழித்தார். அதுமட்டுமல்லாமல் மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் என இருந்ததை மல்லசமுத்திரம் கிழக்கு என்று பள்ளியின் முகவரியையும் மாற்றியுள்ளார். மேலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் ஆணைக்கிணங்க பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கி சிறப்பித்தார்.

தொடர்ந்து அரிசன் காலனி என்ற ஊரின் பெயரை மாற்ற போராடி வந்த அப்பகுதியைச் சேர்ந்த பெரியவர் கணேசன் என்பவருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் கல்வி மட்டுமே சமத்துவம் மலர செய்யும் மிகப்பெரிய ஆயுதம் என்று முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் வார்த்தைகளை மேற்கோள்காட்டி அமைச்சர் அன்பில் மகேஸ் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

Also Read: Temple Jobs: தமிழில் எழுத, படிக்க தெரியுமா? மாதம் ரூ.40,000 சம்பளம்.. அறநிலையத்துறையில் வேலை!

அதில், “நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்கப் பள்ளியில் இடம் பெற்றிருந்த அரிசன் காலனி’ எனும் பெயரினை ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு’ எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது அவ்வூர் மக்களின் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு’ எனப் பெயர் மாற்றம் செய்வதற்கான அரசாணையை வெளியிட்டோம். தொடர்ந்து இன்று மல்லசமுத்திரம் கிராமத்திற்கு நேரடியாக சென்று ‘அரிசன் காலனி’ எனும் பெயரினை அழித்து, அரசாணையை பள்ளியின் தலைமையாசிரியரிடம் வழங்கினோம்” என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் இத்தகைய முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

காலிஃபிளவரை இப்படி சுத்தம் செய்யுங்கள்
உருளைக்கிழங்கு இப்படி இருந்தால் சாப்பிட வேண்டாம்..!
பால் காஃபி அல்லது பிளாக் காஃபி... எது நல்லது?
நடிகை கயல் ஆனந்தியைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்..!