மருத்துவருக்கு கத்திக்குத்து.. அரசு மருத்துவமனைகளில் வருகிறது புதிய கட்டுப்பாடு!
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் நேற்று வழக்கம் போல மருத்துவர்கள் பணியில் இருந்தனர். அப்போது காலை 10.30 மணியளவில் புற்றுநோய் பிரிவில் இருந்த மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் என்ற நபர் சந்தித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அந்த அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. பொதுமக்களும் மருத்துவமனை ஊழியர்களும் ஓடி சென்று என்னவென்று பார்த்தபோது மருத்துவர் பாலாஜி ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார்.
புதிய கட்டுப்பாடு: சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி நோயாளிகளுடன் வரும் அட்டெண்டர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அட்டெண்டர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் அனைத்து மருத்துவமனைகளிலும் தொடங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை கடந்தாண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு சென்னை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் உள்நோயாளியாகவும், வெளிநோயாளியாகவும் மருத்துவம் பார்த்து செல்வதால் எப்போதும் மருத்துவமனை வளாகம் பிஸியாகவே காணப்படும். இப்படியான நிலையில் நேற்று (நவம்பர் 13) நடந்த விரும்பத்தகாத சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நடந்தது என்ன?
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் நேற்று வழக்கம் போல மருத்துவர்கள் பணியில் இருந்தனர். அப்போது காலை 10.30 மணியளவில் புற்றுநோய் பிரிவில் இருந்த மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் என்ற நபர் சந்தித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அந்த அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. பொதுமக்களும் மருத்துவமனை ஊழியர்களும் ஓடி சென்று என்னவென்று பார்த்தபோது மருத்துவர் பாலாஜி ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார்.
அதே சமயம் விக்னேஷ் என்ற அந்த நபர் கையில் ரத்தக்கறை படிந்த கத்தியுடன் அங்கிருந்து வெளியேற முற்பட்டார். கையில் கத்தி இருந்தால் முதலில் அவரை யாரும் பிடிக்க முயற்சிக்காமல் பின்தொடர்ந்தபடி சென்றனர். ஆனால் விக்னேஷ் கத்தியை மருத்துவமனை வளாகத்தில் வீசிவிட்டு செல்ல முயற்சித்தவுடன் அவரை பிடித்து வைத்தனர். உடனடியாக நடந்த சம்பவம் தொடர்பாக கிண்டி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மருத்துவர் பாலாஜியை மீட்ட மருத்துவமனை ஊழியர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
தொடர்ந்து விக்னேஷை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், “தனது தாய்க்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை. அவரது உயிர் பறிபோகும் நிலைக்கு மருத்துவர் பாலாஜி தள்ளியதாக குற்றம் சாட்டினார். பெருங்களத்துரை சேர்ந்த காஞ்சனா என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். விக்னேஷ் தான் தாயின் சிகிச்சையின் போது உடன் இருந்துள்ளார். ஆறு முறை கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் புற்றுநோய் கடைசி கட்டத்தில் தான் சிகிச்சைக்கு வந்ததாகவும் இதனால் ஹீமோதெரபி கொடுக்கப்பட்ட பிறகும் நுரையீரல் வரை புற்றுநோய் பரவியதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் தனது தாயை வீட்டுக்கு கூட்டிச்சென்ற விக்னேஷ் அவரின் இந்த நிலைமையை பார்த்து மருத்துவர் பாலாஜி மீது கோபம் கொண்டு ஆத்திரத்தில் இந்த செயலை செய்துள்ளார்” என்பது தெரியவந்தது.
மருத்துவர்கள் போராட்டம்
இதற்கிடையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர் பாலாஜி நலம் விசாரித்தனர். அதேசமயம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் மருத்துவர் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இப்படியான நிலையில் பணியில் இருந்த அரசு மருத்துவர் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் உடனடியாக காட்டுத்தீப்போல பரவியது. இதனால் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் இறங்கினர். கிண்டின் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மற்றும் மருத்துவர்களும் போராட்டத்தில் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.
Also Read: ”யாருக்கும் பாதுகாப்பு இல்லை” .. கொதித்தெழுந்த விஜய்!
இதற்கிடையில் மருத்துவர்களின் போராட்டத்தை கைவிடும் வகையில் தலைமைச் செயலகத்தில் அமைச்ச மா.சுப்பிரமணியன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதன் முடிவில் அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டத்தினர் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். அதேசமயம் இந்திய மருத்துவர் சங்கம் இன்று மாலை 6 மணி வரை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் இன்று நண்பர்கள் 12 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியதாக கைது செய்யப்பட்ட விக்னேஷுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.