Namakkal: ஜோதிடர் பேச்சை கேட்டு குவிந்த மக்கள்.. நாமக்கல் கோயிலில் திடீர் பரபரப்பு!
Narasimhaswamy Temple: ஜோதிடர் ஒருவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் மீன ராசியில் ராகு பகவானும், கன்னி ராசியில் கேது பகவானும் சஞ்சாரம் செய்வதால் நாமக்கல் நரசிம்மர் கோயிலில் உள்ள லட்சுமி நரசிம்மர் மற்றும் நாமகிரி தாயாருக்கு சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் ஜோதிடர் ஒருவர் பேச்சைக் கேட்டு அங்குள்ள புகழ்பெற்ற நரசிம்மர் கோயிலில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே நேரத்தில் கூடி தியானத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜோதிடர் ஒருவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் மீன ராசியில் ராகு பகவானும், கன்னி ராசியில் கேது பகவானும் சஞ்சாரம் செய்வதால் நாமக்கல் நரசிம்மர் கோயிலில் உள்ள லட்சுமி நரசிம்மர் மற்றும் நாமகிரி தாயாருக்கு சிறப்பு பூஜை செய்வதோடு மட்டுமல்லாமல் சுமார் ஒரு மணி நேரம் சன்னதியில் அமர்ந்து தியானம் செய்தால் சகல விதமான செல்வங்கள் கிடைக்கும் என கூறியிருந்தாராம். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் பலரும் ஒரே நேரத்தில் நரசிம்மர் கோயிலுக்கு படையெடுத்தனர். இதனால் கோயில் வளாகம் முழுக்க பரபரப்பு ஏற்பட்டது.
ஷாக்கான கோயில் நிர்வாகம்
கோயில் நிர்வாகமும் பக்தர்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் கூடியதால் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் குழப்பமடைந்தனர். அதன் பிறகு இந்த வீடியோ விஷயம் அவர்களுக்கு தெரிய வந்தது. சாமி தரிசனம் முடித்துவிட்டு கோயிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி நான்கு புறமும் மக்கள் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த கோயிலுக்கு வழக்கமாக வந்து செல்லும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். கோயிலில் அதிக அளவு மக்கள் கூடியதை தொடர்ந்து நிர்வாகம் சார்பில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டனர். இதனிடையே இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read:கோப்பையுடன் சென்னை திரும்பிய செஸ் சாம்பியன் குகேஷ்… உற்சாக வரவேற்பு!
நரசிம்மர் கோயில் சிறப்பு
நரசிம்மர் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நாமக்கல்லில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயில் ஆகும். இந்த கோயிலானது குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 260 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோயிலில் முன்பக்கமாக 18 அடி உயரத்தில் அனுமன் சிலை வைக்கப்பட்டுள்ளது. உள்ளே கருவறையில் நாமகிரி தாயாருடன் இருக்கும் நரசிம்மர் வலது காலை தரையில் ஊன்றியபடியும், இடது காலை மடிமீது வைத்தும் பக்தர்களுக்கு காட்சியை அளிக்கிறார். நாமகிரி தாயார் மேற்கு திசையில் இருந்து கிழக்கு நோக்கி நரசிம்மரை தரிசித்தவாறு தவம் செய்வது போல் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதைப்போல் அனுமனின் கண்கள் நரசிம்மரின் பாதங்களை பார்ப்பது போல அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். இந்தக் கோயிலில் இருக்கும் நரசிம்ம தீர்த்தத்தில் புனித நீராடி நாமகிரி தாயாரை வழிபாடு செய்தால் பில்லி மற்றும் சூனியம் போன்ற நம்மை பிடித்திருக்கும் கெட்ட விஷயங்கள் அனைத்தும் ஒரு மண்டலத்திற்குள் விலகும் என்பது நம்பிக்கையாகும்.
அதேபோல் ராகு, கேது, செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் நரசிம்மருக்கு அருகில் உள்ள புற்றுக்கு பால் ஊற்றுவதோடு, அபிஷேகமும் செய்தால் தடைகள் அனைத்தும் நீங்கி தொழில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கையாகும். இத்தகைய புகழ்வாய்ந்த நாமக்கல் நரசிம்மர் கோயிலுக்கு சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி வெளியூரிலும் இருந்து மக்கள் ஏராளமானோர் தினம்தோறும் வந்து செல்கின்றனர். ஆனால் திருவிழா கூட்டம் போல் ஒரே நேரத்தில் மக்கள் கூடியது தான் இப்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.
Also Read: முன்னாள் காதலியை தாக்கிய இளைஞர்.. பிரேக் அப் சொன்னதால் ஆத்திரம்.. சென்னையில் அதிர்ச்சி!
கடும் விமர்சனம்
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ள நிலையில் இணையவாசிகள் சரமாரியாக விமர்சித்துள்ளனர். “கிரகப்பெயர்ச்சி எல்லாம் சரிதான், ஆனால் கோயிலில் சென்று அமர வேண்டும் என எந்த அடிப்படையில் அந்த ஜோசியர் சொன்னார்?, “குழந்தைகளுடன் இத்தகைய கூட்ட நெரிசலில் போய் சிக்கும்போது ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்து விட்டால் என்ன செய்வது?” என கேள்வி எழுப்பினர்.
ஏற்கனவே முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவில் கடற்கரையில் தங்கி மறுநாள் காலையில் வழிபாடு நடத்தும் வைபவம் கடந்த சில மாதங்களாகவே நடந்து வருகிறது. யாரோ ஒரு ஜோதிடர் சொன்னதை கேட்டு அது உண்மையா அல்லது பொய்யா என ஆராயாமல் கைக்குழந்தைகளை கூட தூக்கிக்கொண்டு பௌர்ணமி இரவு தங்கி வழிபாடு செய்து வருகிறார்கள். அந்த வகையில் நாமக்கல் நரசிம்மர் கோயிலும் இணைந்துள்ளது.