5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

திருச்சி அரங்கநாதர் கோயிலுக்கு வைர கிரீடம்‌ வழங்கிய இஸ்லாமியர்!

வைர கிரீடம் காணிக்கை: பரத நாட்டிய கலைஞரான ஜாகிர் உசேன் திருச்சியில் உள்ள அரங்கநாதர் கோவிலுக்கு பல லட்ச ரூபாய் மதிப்பிலான வைர கிரீடத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார். பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும் வைணவத்தின் மேல் கொண்ட பற்றால் இதை செய்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

திருச்சி அரங்கநாதர் கோயிலுக்கு வைர கிரீடம்‌ வழங்கிய இஸ்லாமியர்!
தலைமை அர்ச்சகரிடம் வைர கீரிடத்தை வழங்கும் ஜாகிர் உசேன்
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 12 Dec 2024 10:07 AM

திருச்சியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடத்தை, பரதநாட்டிய கலைஞரான ஜாகிர் உசேன் வழங்கியுள்ளார். காணிக்கையாக வழங்கப்பட்ட வைர கிரீடத்தை கோயிலின் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் பிறந்த ஜாகிர் உசேன் கடந்த 30 ஆண்டுகளாக பரதநாட்டிய கலைஞராக இருந்து வருகிறார். மேலும் இவர் வைணவ சொற்பொழிவாளராகவும் இருக்கிறார். இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது, இந்திய அரசின் சமூக நல்லிணக்க விருது, நாட்டியச் செல்வன் போன்ற பல்வேறு விருதுக்கு சொந்தக்காரர்.

பரதநாட்டியத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர் முறையாக பரதம் கற்றுக் கொண்டு பல்வேறு கோயில் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு அரங்கேற்றம் செய்துள்ளார். தற்பொழுது இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.

கோயிலுக்குள் அனுமதி மறுப்பு

பிறப்பால் இஸ்லாமியரான ஜாகீர் உசேன் வைணவத்தின் மீது பேரார்வம் கொண்டவர். எனவே கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாமி தரிசனம் செய்வதற்கு திருச்சியில் உள்ள அரங்கநாதர் கோயிலுக்கு சென்ற போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கோயிலுக்கு சென்ற ஜாகிர் உசைனை நரசிம்மன் என்ற தனிநபர் மதத்தின் பெயரால் தடுத்து நிறுத்தியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இந்த சம்பவம் குறித்து தனது பேஸ்புக்கில் பதிவிட்ட ஜாகிர் ஹுசைன் நான் பிறப்பால் இஸ்லாமியனாக இருந்தாலும் வைணவ முறையை பின்பற்றி வைணவனாக வாழ்ந்து வருகிறேன். அரங்கனை காண சென்ற என்னை தடுத்து நிறுத்தி துரத்தியது என்றும் ஆறாத காயமாக இருக்கும் என்று பதிவிட்டிருந்தார்.

Also Read: Karthigai Deepam 2024: மண்சரிவு எதிரொலி! திருவண்ணாமலையில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு..!

அதனைத் தொடர்ந்து அவர் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் ஒன்றையும் கொடுத்தார். அதில் வாழ்வின் வைணவனாக வாழ்ந்து வரும்‌ நான் அமைதியான முறையில் அரங்கனை தரிசிக்க சென்றேன். ஆனால் அங்கு என் மதத்தின் பெயரை சொல்லி கொச்சைப்படுத்தியதோடு என்னை அங்கிருந்து விரட்டியும் விட்டார். நான் பல வைணவ திருத்தலங்களில் திருப்பணியும் செய்திருக்கிறேன்.

கோயிலுக்குள் என்னை மறுத்தது தனிநபராக இருந்தாலும் அதை ஆயிரக்கணக்கான பக்தர்களும் கோவில் அர்ச்சர்களும் பார்த்துக் கொண்டிருந்தனர். இதுவரைக்கும் கோயில் நிர்வாகிகளும் அர்ச்சகர்களும் எனக்கு மதத்தின் பெயரைக் கூறி அனுமதி மறுத்ததில்லை. இந்திய இறையாண்மைக்கும் மத நல்லிணத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் அந்த நபரை உடனடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

வழங்கப்பட்ட அங்கீகாரம்:

இதனை அடுத்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்‌ பாபு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் கலைப் பண்பாட்டு துறை சார்பாக மொத்தம் 17 மாவட்ட அரசு இசைப் பள்ளி இயங்கி வருகிறது. ஜாகிர் உசேன் பெருமாள் கோயிலுக்குள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 17 மாவட்ட அரசு இசைப் பள்ளிகளுக்கான கலையியல் அறிவுரைஞராக ஜாகீர் உசேனை கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நியமனம் செய்தார்.

மறுக்கப்பட்ட கோயிலுக்கு வைர கிரீடம் காணிக்கை:

எந்த கோயிலில் ஜாகிர் உசேன் உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டதோ அதே அரங்கநாத கோயிலுக்கு பல லட்ச ரூபாய் மதிப்பிலான வைர கிரீடத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார்.

Also Read: 50 ஆண்டுகளுக்கு முன் திருடிய ரூ.37.. 3 லட்சமாக திருப்பி கொடுத்த கோவை தொழிலதிபர்!

இதுகுறித்து பேசிய ஜாகிர் ஹுசைன், இந்த கிரீடம் 3 ஆயிரத்து 160 கேரட் மாணிக்க கல், 600 வைர கற்கள் மற்றும் மரகதக் கல்லை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தான் பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும் அரங்கநாதர் மேல் உள்ள பற்றால் இதனை செய்ததாகவும் அவர் தெரிவித்தார். உலகில் முதல் முறையாக மாணிக்க கற்களால் செய்யப்பட்ட வைர கிரீடம் இது எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த கிரீடத்தை செய்வதற்கு கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் ஆனது என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் அவருக்கு மாலை அணிந்து மரியாதை செய்தது.

Latest News