Crime: தென்காசியில் 3 பேர் கொலை.. 4 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்!
நிகழ்ச்சி முடிந்து இவர்கள் இருவரும் ஊருக்கு செல்ல அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். அப்போது அவர்களை சங்கரன்கோவிலுக்கு பைக்கில் அழைத்துச் சென்று வழியனுப்ப உடப்பன்குளத்தை சேர்ந்த காளிராஜ் என்பவர் சென்றுள்ளார். வழியில் வடமன்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் இவர்கள் சென்ற பைக்கை வழிமறித்தது. மேலும் கண்ணிமைக்கும் நேரத்தில் காளிராஜ், வேணுகோபால், முருகன் ஆகிய மூன்று பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.
கொலை வழக்கு: தென்காசி மாவட்டத்தில் முன்பகை காரணமாக மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை விதித்து நெல்லை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்துள்ள திருவேங்கடம் பகுதியில் அமைந்துள்ள உடப்பன்குளம் என்ற இடத்தில் ஆங்கில புத்தாண்டு தினமான அன்று குறிப்பிட்ட சமூகத்தினர் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். இதன் காரணமாக மற்றொரு சமூகத்தினருடன் தகராறு ஏற்பட்டு முன்பகை இருந்து வந்துள்ளது. இப்படியான நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கோயம்புத்தூரை மாவட்டம் துடியலூரை சேர்ந்த வேணுகோபால், முருகன் ஆகிய இரண்டு பேர் அந்த ஆண்டு மே மாதம் உடப்பன்குளம் வந்துள்ளனர்.
Also Read: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? – பதறிய மக்கள்.. மின்வாரியம் கொடுத்த விளக்கம்!
நிகழ்ச்சி முடிந்து இவர்கள் இருவரும் ஊருக்கு செல்ல அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். அப்போது அவர்களை சங்கரன்கோவிலுக்கு பைக்கில் அழைத்துச் சென்று வழியனுப்ப உடப்பன்குளத்தை சேர்ந்த காளிராஜ் என்பவர் சென்றுள்ளார். வழியில் வடமன்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் இவர்கள் சென்ற பைக்கை வழிமறித்தது. மேலும் கண்ணிமைக்கும் நேரத்தில் காளிராஜ், வேணுகோபால், முருகன் ஆகிய மூன்று பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இந்த வழக்கு தென்மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து அப்போதைய சங்கரன்கோவில் டிஎஸ்பி மேற்கொண்ட விசாரணையில் பொன்னுமணி, குட்டி ராஜ், குருசாமி உள்ளிட்ட 25 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கு திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் மாவட்ட வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையின் போது ஜெயராம், பொன்ராஜ், சரவணன் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 22 பேர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கை சிறப்பு நீதிபதி சுரேஷ்குமார் விசாரணை செய்தார். இதனிடையே மூவர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உடப்பன்குளம், ராமநாதபுரம், நாராயணபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொன்னுமணி, குட்டி ராஜ், குருசாமி, கண்ணன், காளிராஜ், கண்ணன், முருகன், முத்துக்கிருஷ்ணன், சுரேஷ், உலக்கன் ஆகிய 11 பேரை குற்றவாளிகள் என கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி நீதிபதி சுரேஷ் குமார் தெரிவித்தார்.
மேலும் அவர்களுக்கான தண்டனை விவரம் செப்டம்பர் 26 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார். அதே சமயம் 22 பேரில் 11 பேர் குற்றவாளிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 11 பேர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனிடையே நேற்று குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 11 பேருக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னதாக இந்த 11 பேரில் பொன்னுமணி, சுரேஷ், உலக்கன் ஆகிய மூன்று பேர் உடல் நலக்குறைவு காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் குற்றவாளிகள் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிபதி கண்டிப்பாக கூறியதன் பேரில் மருத்துவமனையில் இருந்த மூன்று பேர் உட்பட 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
மாலை 4 மணிக்கு தொடங்கிய வழக்கு விசாரணை முதலில் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் மீண்டும் இரவு 8.30 மணியளவில் சிறப்பு நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பு விவரங்களை வெளியிட்டார். அதன்படி 3 பேரை கொலை செய்த வழக்கில் பொன்னுமணி, குருசாமி, முத்துகிருஷ்ணன், காளிராஜ் ஆகிய நான்கு பேர் மீது வன்கொடுமை தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக தீர்ப்பளித்தார்.
மீதமுள்ள ஏழு பேரில் 5 பேருக்கு தலா ஐந்து ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு தலா 2 ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுவதாகவும் தனது தீர்ப்பில் நீதிபதி சுரேஷ்குமார் குறிப்பிட்டார். இந்த தீர்ப்பை கேட்டு குற்றவாளிகள் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் அனைவரும் கதறி அழுதனர். இரு சமூகத்தினர் இடையே இருந்த முன்பகை காரணமாக 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.