TVK Vijay: கருணாநிதி, ஜெயலலிதாவை விட பெரிய ஆளா? – விஜய்யை கிழித்தெடுத்த சீமான்!
Seeman vs Vijay: என்னை தலைவனாக தேர்வு செய்கிற கூட்டம், வாக்களிக்கும் மக்கள் யார் என கேட்டால் பொழுதுபோக்கு தளங்களில் தலைவனை தேடுபவன் அல்ல. போராட்ட களத்தில் தேடுகிறவர்கள். நான் பயந்து விட்டேன் என சொல்கிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும்போது கட்சி ஆரம்பித்தவன் நான். அவர்கள் இருவரை விட விஜய் பெரிய தலைவரா? என கேள்வியெழுப்பினார்.
விஜய்யை விமர்சித்த சீமான்: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவை விட பெரிய ஆளா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். விஜயின் அரசியல் வருகைக்கு முதலில் ஆதரவு தெரிவித்தது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தான். ஆனால் விஜய் ஆகஸ்ட் 22ஆம் தேதி தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை அறிமுகம் செய்ததிலிருந்து சீமானின் பேச்சில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது.
பாராட்டு முதல் விமர்சனம் வரை
இதனைத் தொடர்ந்து அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியது. விஜய் கட்சி கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெரும் என பலரும் கணித்துள்ளனர். அந்த மாநாட்டில் பேசிய விஜய் திராவிடமும் தமிழ் தேசியமும் தனது கட்சியின் கொள்கை என அறிவித்தார். இதனையடுத்து சீமான் விஜயை சரமாரியாக விமர்சிக்க தொடங்கினார்.
குறிப்பாக நவம்பர் 2 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர் எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பன் வந்தாலும் அவர் எதிரிதான். இதில் தம்பியும் கிடையாது அண்ணனும் கிடையாது. முட்டு சந்தில் நின்று கத்துவிட்டு போகிறவன் நான் என நினைத்து விடாதே தம்பி. 2026 ஆம் ஆண்டு தேர்தலில் என்னுடைய ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது என சீமான் தெரிவித்தார்.
Also Read: YouTube : யூடியூப் மூலம் வந்த சிக்கல்.. ரூ.76.5 லட்சம் பணத்தை இழந்த நபர்.. மோசடி நடந்தது எப்படி?
விஜய்யை விமர்சித்த சீமான்
இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் சிதறி தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்லும் என்பதால் சீமான் விஜய்யை கடுமையாக விமர்சிக்கிறார்? என பேச்சு எழுவதைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அதெல்லாம் சில பைத்தியங்களின் புலம்பல். ஒன்றை மட்டும் இந்த கேள்வி வாயிலாக உலக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். என்னை தலைவனாக தேர்வு செய்கிற கூட்டம், வாக்களிக்கும் மக்கள் யார் என கேட்டால் பொழுதுபோக்கு தளங்களில் தலைவனை தேடுபவன் அல்ல. போராட்ட களத்தில் தேடுகிறவர்கள். நான் பயந்து விட்டேன் என சொல்கிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும்போது கட்சி ஆரம்பித்தவன் நான். அவர்கள் இருவரை விட விஜய் பெரிய தலைவரா? அல்லது அவர்களுக்கு வந்த கூட்டத்தை விட விஜய்க்கு அதிக கூட்டம் வந்ததா? என தெரிவித்தார்.
Also Read: பள்ளி மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டப்பட்ட விவகாரம்.. பள்ளிக்கல்வித்துறை விசாரணை..
தொடர்ந்து பேசிய அவர், 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு தான் உள்ளது. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணும்போது நான் எவ்வளவு தூரம் ஏறி வந்திருக்கிறேன் என்பது தெரியும். நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்தார்கள் என சொல்கிறார்கள். யாராவது ஒருவராவது நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் அட்டையை காட்டுங்கள் பார்க்கலாம். எடுத்தவுடன் பிராடு தனம் செய்கிறார்கள். கட்சியில் உள்ள 4 பேரை வைத்துக் கொண்டு மற்ற கட்சியில் இருந்து வந்ததாக சொல்லிக் கொள்கிறார்கள். திராவிடம் என்பது தமிழர் அல்லாதவர் வசதியாக வாழ்வதற்கும், ஆள்வதற்கும் கொண்டு வரப்பட்டது.
எல்லாரும் ஒன்று தான் என விஜய் சொல்கிறார். அப்படி என்றால் உங்கள் கட்சிக்கு உலக வெற்றிக் கழகம் என பெயர் வைத்திருக்க வேண்டியது தானே?.கேரளாவில் கூட ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் ரசிகர்கள் அதிகம் உள்ளார்கள். ஏன் அங்கெல்லாம் கட்சி ஆரம்பிக்கவில்லை?. 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கான வேலைகள் தொடங்கி விட்டது. இந்தியாவிலேயே 8 கோடி மக்களுடன் இணைந்து கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான்” என சீமான் தெரிவித்துள்ளார்.
சீமானின் இந்த பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.