Seeman: நா.த.க., நிர்வாகிகள் விலகல்.. எந்த பிரச்னையும் இல்லை என கூலாக சொன்ன சீமான்!
நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படியான நிலையில் இது தொடர்பாக பதில் அளித்துள்ள சீமான், “மாவட்ட நிர்வாகிகள் விலகுவதை நான் பார்த்துக் கொள்கிறேன். கட்சிக்குள் திடீரென்று அதிருப்தி வரத்தான் செய்யும். அதனால் பெரிய சிக்கல் ஒன்றும் இல்லை. திருப்தி கிடைக்கும் இடங்களுக்கு போய் சேர வேண்டியது தான் என தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவதால் யாருக்கும் எந்தவித பிரச்னையும் இல்லை என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் அக்கட்சியின் கிருஷ்ணகிரி மண்டல ஒருங்கிணைப்பாளர் கரு. பிரபாகரன் தலைமையிலான குழுவினர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய கரு.பிரபாகரன், “நாம் தமிழர் கட்சியில் யாரும் வளரக்கூடாது என சீமான் நினைப்பதாகவும், கட்சி ஆரம்பித்தபோது இருந்த பல மாநில பொறுப்பாளர்கள் இப்போது இல்லை” என்றும் தெரிவித்தார். மேலும், “தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்த பிறகு நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகள் தற்போது சரியாக இல்லை. கட்சிக்காக உழைப்பவர்கள் அனைவரும் ஓரம் கட்டப்படுகிறார்கள்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “கட்சியின் வளர்ச்சி குறித்து ஒருநாளும் சீமான் யாரையும் அழைத்து ஆலோசனை நடத்தவில்லை. எந்த ஜென்மத்தில் நாங்கள் செய்த பாவமோ தெரியவில்லை. நாம் தமிழர் கட்சியில் இருந்து 14 வருடங்கள் வாழ்க்கையை இழந்துவிட்டோம்” என கரு.பிரபாகரன் தெரிவித்தார். சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை மறைவதற்குள் அடுத்ததாக நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த சுகுமார் இன்று திடீரென கட்சியிலிருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
Also Read: Cinema Rewind: இந்த இயக்குநர்களுத்தான் நான் அதிகம் நன்றி சொல்லனும்… நடிகர் சத்யராஜ் சொன்ன விஷயம்
அதில், “கடந்த 9 ஆண்டுகளாக என்னால் முடிந்த வரை கட்சிக்கான அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்தேன். 2015 ஆம் ஆண்டு செஞ்சி நகர செயலாளராக முதன் முதலில் நியமிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு தொகுதி செயலாளராக தேர்வு செய்யப்பட்டேன். பின்னர் 2020 ஆம் ஆண்டு விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் ஆகவும், 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகவும் கட்சி சார்பில் நிலை நிறுத்தப்பட்டேன். இரண்டு நாடாளுமன்ற தேர்தல், இரண்டு சட்டமன்றத் தேர்தல், ஒரு உள்ளாட்சி தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் நாம் சிறப்பாக வேலை செய்தோம்.
குறிப்பாக உள்ளாட்சி தேர்தலில் கட்சி சின்னத்தில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் 100% வேட்பாளர்களை நிரப்பினோம். மாவட்டத்தின் சிறந்த தொகுதியாக செயல்பட்டு வந்த நிலையில் இதனால் வரை செய்த செயல்கள், உடல் உழைப்பு மற்றும் பணவிரயம் என எதையும் சீமான் பொருட்படுத்தவில்லை. மேலும், இந்த தொகுதியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது எனவும், நீங்கள் என்னிடம் கேள்வியும் கேட்க கூடாது எனவும் சீமான் தெரிவித்தார்.
நான் என் இஷ்டப்படி தான் செய்வேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என்று கூறிவிட்டார். உங்களை யாரும் எனக்கு போஸ்டர் ஒட்ட சொல்லவில்லை. செலவு செய்யவும் கூறவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக ஒன்றுக்கு இருமுறை பேசியும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், இருந்தால் இருங்கள்.. இல்லாவிட்டால் கிளம்புங்கள் என்று சீமான் கூறினார். நாங்கள் சீமானிடம் கேட்பது பணமும் பொருளோ அல்ல. எங்களுக்கான மரியாதை மற்றும் உரிய அங்கீகாரம் தான். இதுவே உங்களால் தர முடியவில்லை. எனவே நான் மன வருத்தத்துடன் கட்சி பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுகிறேன் என தெரிவித்தார்.
Also Read: Chhattisgarh: போலியாக செயல்பட்ட எஸ்பிஐ வங்கி.. லட்சக்கணக்கில் பணம் அபேஸ்!
அடுத்தடுத்து நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படியான நிலையில் இது தொடர்பாக பதில் அளித்துள்ள சீமான், “மாவட்ட நிர்வாகிகள் விலகுவதை நான் பார்த்துக் கொள்கிறேன். கட்சிக்குள் திடீரென்று அதிருப்தி வரத்தான் செய்யும். அதனால் பெரிய சிக்கல் ஒன்றும் இல்லை. திருப்தி கிடைக்கும் இடங்களுக்கு போய் சேர வேண்டியது தான். இதனால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் கட்சி பெயரை சொல்லி ரூ.5 கோடி பணம் வசூலித்து இருக்கிறார்கள். என்னுடைய முகத்திற்காக பணம் கொடுத்தவர்கள் வழக்கு தொடராமல் இருக்கிறார்கள். இதனை வெளியில் சொன்னால் எனக்கு தகுதியாக இருக்குமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். வளர்ந்து வரும் கட்சிக்குள் சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் இதையெல்லாம் ஒரு பிரச்சினையாக நினைக்கக் கூடாது என சீமான் தெரிவித்துள்ளார்.