Pappammal Paati: பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி உடல்நலக் குறைவால் காலமானார்! - Tamil News | padma shri awardee pappammal paati passes away at the age of 109 | TV9 Tamil

Pappammal Paati: பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி உடல்நலக் குறைவால் காலமானார்!

Updated On: 

27 Sep 2024 23:16 PM

RIP Pappammal Paati: பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி இன்று காலமானார். 109 வயதான இவர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாப்பம்மாள் பாட்டிக்கு இயற்கை விவசாயத்தில் அவரின் பங்களிப்பை பாராட்டி கடந்த 2021ஆம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. 

Pappammal Paati: பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி உடல்நலக் குறைவால் காலமானார்!

பாப்பம்மாள் பாட்டி

Follow Us On

பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி இன்று காலமானார். 109 வயதான இவர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாப்பம்மாள் பாட்டிக்கு இயற்கை விவசாயத்தில் அவரின் பங்களிப்பை பாராட்டி கடந்த 2021ஆம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.  இந்த நிலையில், இன்று இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாப்பம்மாள் பாட்டி. சிறு வயதிலேயே இவரது பெற்றோர் உயிரிழந்ததால், இவரும், இவரது அக்காவும் பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

யார் இந்த பாப்பம்மாள் பாட்டி?

சிறு வயதிலேயே மளிகை கடை நடத்தி தனது வாழ்க்கையை தொடங்கியுள்ளார் பாப்பம்மாள் பாட்டி. தனது 20 வயதில் திருமணம் செய்து கொண்ட பாப்பம்மாள் பாட்டி தனது கணவருடன் சேர்ந்து ஹோட்டல் கடை ஒன்றை தொடங்கினார்.

ஒரு பக்கம் ஹோட்டல், ஒரு பக்கம் மளிகை கடை என நடத்தி அதில் வரும் காசை வைத்து இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர். இதில் வந்த வருமானத்தை வைத்தே ஆரம்பத்தில் 4 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளனர். இதற்கிடையில் இவரின் கணவர் உயிரிழந்தார். கணவரின் இறப்பை தொடர்ந்து விவசாயத்தில் கால் பதித்த பாப்பம்மாள், இறுதி மூச்சு வரை விவசாயம் செய்து வந்தார்.

விவசாயத்தில் இவரது மகத்தான பங்களிப்பை பாராட்டி மத்திய அரசு கடந்த 2021ஆம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கியது. கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த சர்வதேச சிறுதாணிய மாநாட்டில் பிரதமர் மோடி பாப்பம்மாள் பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். இந்த நிகழ்வு இந்திய முழுவதும் பேசும் பொருளானது.

அரசியல் மீது ஆர்வம்:

1959-ஆம் ஆண்டு தேக்கம்பட்டி ஊராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாப்பம்மாள் பாட்டி, 1964-இல் காரமடை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினராகவும், பின்னர் தேக்கம்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்று பணியாற்றினார். 1970-ஆம் ஆண்டு தொடங்கி 45 ஆண்டுகாலம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக உழவர் விவாதக்குழு உறுப்பினராகச் செயல்பட்டார்.

1965-ஆம் ஆண்டிலேயே மாதர் சங்கத் தலைவராகச் செயல்பட்டு, கிராமப் பெண்களின் முன்னேற்றத்துக்கான சமூகப் பணிகளை மேற்கொண்டார். தனது இறுதிமூச்சு வரையில், சுறுசுறுப்பாக வயலில் இறங்கி வேளாண் பணிகள் செய்து வந்தவர். மேலும், 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டம் தொடங்கி, தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காக்க நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வரை அத்தனை போராட்டக்களங்களையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர் பாப்பம்மாள் பாட்டி.

இந்த நிலையில், இன்று இவர் உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பாப்பம்மாள் பாட்டி மறைவிற்கு  இரங்கல் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “கழக முன்னோடியும்கடந்த 17-ஆம் நாள் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்றவருமான திருமிகு. பாப்பம்மாள் அவர்கள் 108 அகவையில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியறிந்து கலங்கினேன்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்:

பேரறிஞர் அண்ணா அவர்கள் மீதும்முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீதும் பற்றுக் கொண்டு, கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல் தன்னை இயக்கத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றியவர்.  திருமிகு. பாப்பம்மாள் அவர்களின் வாழ்வையும் தொண்டையும் போற்றும் வகையில் ஒன்றிய அரசு சார்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது.

அப்போது, “உற்சாகத்துடனும், கொள்கை உணர்வோடும் எப்பொழுதும் புன்னகை மாறாத பாப்பம்மாள் பாட்டி நமக்கெல்லாம் உந்துசக்தி!” என்று அவரை வாழ்த்தினேன். கழக முப்பெரும் விழாவில், “ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் அடையாளம்என அவரை மனம் நெகிழப் பாராட்டி மகிழ்ந்திருந்தேன். ஆனால் இன்று சொல்லொணாத் துயரத்தில் நம்மையெல்லாம் ஆழ்த்தி விட்டு அவர் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்.

அண்ணா அறிவாலயத்திலும், எனது இல்லத்திலும் திருமிகு. பாப்பம்மாள் அவர்களைச் சந்தித்து உரையாடிய ஒவ்வொரு தருணமும் என் நெஞ்சில் எப்போதும் நீங்காமல் பசுமையாக இருக்கும். என் குடும்பத்தில் ஒருவரைப் பிரிந்த வலியுடன் தவிக்கிறேன். திருமிகு. பாப்பம்மாள் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், கழக உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். 

 

Related Stories
Tamilnadu Weather Alert: திருச்சியில் 11 செ.மீ மழை பதிவு.. இன்றும் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
கடந்த 10 மாதத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் – விழிப்புணர்வு மாரத்தானில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..
TN Cabinet Reshuffle: செந்தில் பாலாஜி உட்பட நான்கு அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யாருக்கு எந்த துறை?
Tamilnadu Cabinet Reshuffle: இளைஞரணி செயலாளர் டூ துணை முதலமைச்சர்.. அமைச்சர் உதயநிதியின் அரசியல் பயணம்..
TN Ministers: 3 அமைச்சர்கள் நீக்கம்.. 2 பேருக்கு வாய்ப்பு.. முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!
CM Stalin: திமுக கூட்டணியில் பிளவா? பவள விழா பொதுக் கூட்டத்தில் போட்டு உடைத்த முதல்வர் ஸ்டாலின்!
ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஆலிவ் ஆயிலின் நன்மைகள்..!
சருமத்திற்கு பல நன்மைகளை தரும் கற்றாழை..!
புதினாவை தினமும் மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்
Exit mobile version