Salem: உங்க வீட்டுல ஆம்பளையே இல்லையா.. பாமக எம்.எல்.ஏ. அருள் பெண்களிடம் சர்ச்சை பேச்சு!
PMK MLA Arul: அங்காளம்மன் பெரியாண்டிச்சி அம்மன் கோயிலை திறக்க உதவிடுமாறு இருதரப்பு அழைப்பின் பேரில் சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் பேச்சுவார்த்தைக்கு சென்றார். அப்போது ஒரு தரப்பில் ஆண்களும், மற்றொரு தரப்பில் பெண்களும் மட்டுமே பேசினர்.
சேலம் மாவட்டத்தில் கோயில் திறப்பது தொடர்பான பேச்சுவார்த்தையின்போது பாமக எம்.எல்.ஏ. அருள் சர்ச்சைக்குரிய வகையில் பெண்களிடம் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி கடும் கண்டனங்களைப் பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டி என்ற ஊர் உள்ளது. இங்கு அங்காளம்மன் பெரியாண்டிச்சி என்ற பெயரில் அம்மன் கோயில் இயங்கி வந்தது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் பலரும் இங்கு தினசரி வந்து வழிபாடு நடத்து வழக்கம். இப்படியான நிலையில் இந்த கோயில் கடந்த வாரம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. கோயில் உரிமை தங்களுக்கே சொந்தம் என்று இருதரப்பினர் இடையே மோதல் எழுந்ததை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read: Tiruvallur: வீட்டுல விருந்து.. 19 காகங்களை கொன்ற தம்பதி.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்!
கோயிலை திறக்க முயற்சி
இப்படியான நிலையில் அங்காளம்மன் பெரியாண்டிச்சி அம்மன் கோயிலை திறக்க உதவிடுமாறு இருதரப்பு அழைப்பின் பேரில் சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் பேச்சுவார்த்தைக்கு சென்றார். அப்போது ஒரு தரப்பில் ஆண்களும், மற்றொரு தரப்பில் பெண்களும் மட்டுமே பேசினர். அதேசமயம் இந்த பேச்சுவார்த்தையில், அரசு நிலத்தில் கோயில் இருப்பதால் இதனை இருதரப்பினர் மட்டுமின்றி அனைவருக்குமான கோயிலாக மாற்றும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் சூழல் உள்ளது. அதனால் இரண்டு தரப்பினரும் ஒற்றுமையாக கோயிலை திறந்து விழா நடத்துங்கள் என்று எம்.எல்.ஏ. அருள் கூறினார்.
அவர் சொன்னதை ஒரு தரப்பு ஏற்றுகொண்ட நிலையில், மற்றொரு தரப்பு கடுமையாக ஏற்க மறுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பெண்கள் எதையும் கேட்காமல் சமரசம் ஆகாமல் பேசிக்கொண்டே இருந்ததால் எம்எல்ஏ அருள் ஆவேசமடைந்தார். அங்கிருந்த பெண்களைப் பார்த்து உங்கள் வீட்டில் ஆம்பளை எவனுமே இல்லையா என வாய்க்கு வந்தபடி வசை பாடினார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read: வெறுப்பை பரப்பாதீங்க… அட்லியை உருவ கேலி செய்ததாக எழுந்த சர்ச்சை – கபில் சர்மா விளக்கம்
இதற்கிடையில், எம்எல்ஏ அருளின் அருவருப்பான பேச்சைக் கேட்ட அங்கு வந்திருந்த பெண்கள் அவரிடம் கையெடுத்து கும்பிட்டு இப்படியெல்லாம் பேச வேண்டாம் என வேண்டுகோள் வைத்து கதறி அழுதனர். இதனால் அனைவர் மத்தியிலும் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நிலைமையை சமாளித்து பேசிய எம்.எல்.ஏ. அருள் தற்போது கோயிலை திறக்க இரு தரப்பு சார்பிலும் உள்ள முக்கிய நபர்கள் பேசினால் மட்டுமே தீர்வு காண முடியும். இல்லா விட்டால் கோயில் பொது கோயிலாகி விடும் என தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் நீங்களே முடிவு செய்து பதில் சொல்லுங்கள் என்றார்.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்த பெண்கள் எதுவும் கூறாமல் கோயில் பகுதிக்கு புறப்பட்டுச் சென்றனர். அதனால், பேச்சுவார்த்தை எந்தவித முடிவுக்கும் வராமல் தோல்வியில் முடிந்தது. எம்.எல்.ஏ அருள் பெண்களிடம் சர்ச்சைக்குரிய வகையில்பேசிய விவாகரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.