Kasthuri: விளக்கம் கொடுத்த கஸ்தூரி.. வெளியான புதிய வீடியோ! – இணையத்தில் வைரல்!
Arjun Sampath: கடந்த நவம்பர் 3 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் பிராமணர்களுக்கு எதிராக அவதூறு பரப்புவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதனால் அவர் மீது சென்னை, மதுரை காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நடிகை கஸ்தூரி: தெலுங்கு மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை புழல் சிறையில் அவர் உள்ள நிலையில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கஸ்தூரி சம்பந்தப்பட்ட 3 வீடியோக்களை தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பேசும் கஸ்தூரி, “நான் ஹைதரபாத்தில் தான் உள்ளேன். தினமும் ஷூட்டிங் சென்று வருகிறேன். நேற்றும் ஷூட்டிங் முடிந்து வந்த என்னை காவல்துறையினர் கைது செய்தனர். நான் சினிமா விஷயமாக ஹைதராபாத்தில் இருந்து தான் பணியாற்றுகிறேன் என்பதை பலமுறை சொல்லியிருக்கிறேன். நான் தலைமறைவு என சொல்கிறார்கள். என்னுடைய ஃபோன் என்னிடம் இல்லை. வழக்கறிஞர் வாங்கி வைத்துக் கொண்டார். மன உளைச்சல் அதிகமாக இருந்தது. ஊடகத்தினரிடம் இருந்து அதிகமான அழைப்புகள் வந்து கொண்டே இருந்ததால் வழக்கறிஞர் ஃபோனை வாங்கி வைத்துக் கொண்டார். நான் எங்கேயும் ஓடவில்லை.
Also Read: TVK Party: 2026ல் விஜய் களமிறங்கும் சட்டமன்ற தொகுதி.. வெளியான அறிவிப்பால் மகிழ்ச்சி!
காவல்துறைக்கு நான் ஒத்துழைப்பு வழங்கியபின் தான் அழைத்து வருகிறார்கள். எனக்கு கொஞ்சம் அமைதி தேவைப்பட்டதால் போனை வழக்கறிஞரிடம் கொடுத்து விட்டேன். ஊடகத்தில் வெளியாவது போல கஸ்தூரி பயந்து ஓடினார், தலைமறைவானார் என எதிலும் உண்மை கிடையாது. பயமெல்லாம் எனக்கு கிடையாது. நான் எழும்பூர் போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத்தான் போகிறேன்” என தெரிவித்துள்ளார். போலீசார் நேற்று ஹைதராபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டப் பிறகு இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகை கஸ்தூரி தலைமறைவு என்றன திராவிட ஊடகங்கள்! ஹைதராபாத்தில் தனது இல்லத்தில் அவர் எப்போதும் போல படப்பிடிப்புக்கு சென்று திரும்பிய பிறகு தமிழகத்தில் இருந்து சென்ற போலீசார் கைது செய்தனர்! கஸ்தூரியின் பேச்சை திரித்து தெலுங்கு மக்களுக்கு எதிராக பேசினார் என்று பொய் பிரச்சாரம்!… pic.twitter.com/IvvMwEvbEc
— Arjun Sampath (@imkarjunsampath) November 17, 2024
இந்த வீடியோவை பதிவிட்டுள்ள அர்ஜூன் சம்பத், “நடிகை கஸ்தூரி தலைமறைவு என்றன திராவிட ஊடகங்கள்! ஹைதராபாத்தில் தனது இல்லத்தில் அவர் எப்போதும் போல படப்பிடிப்புக்கு சென்று திரும்பிய பிறகு தமிழகத்தில் இருந்து சென்ற போலீசார் கைது செய்தனர்! கஸ்தூரியின் பேச்சை திரித்து தெலுங்கு மக்களுக்கு எதிராக பேசினார் என்று பொய் பிரச்சாரம்! சட்டப்படி வழக்கை சந்திப்பார்!” என பதிவிட்டுள்ளார்.
கஸ்தூரி கைதுக்கு முன் நடந்தது என்ன?
கடந்த நவம்பர் 2 ஆம்தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தமிழ்நாடு பிராமண சமூகத்தினருக்கு எதிராக தொடர்ந்து பரப்பப்பட்டு வரும் அவதூறு பிரச்சாரங்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி, பாஜக மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன், மதுவந்தி உள்ளிட்ட ஏகப்பட்ட அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
Also Read: ஸ்டெர்லைட் ஆலை நிரந்தர மூடல்.. மறுஆய்வு மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன?
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை கஸ்தூரி திமுகவை தாறுமாறாக விமர்சித்தார். அப்போது தெலுங்கு மக்களை குறிப்பிட்டு அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள் என சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கஸ்தூரிக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனம் எழுந்தது. இதன் பின்னர் செய்தியர்களை அழைத்து தான் பேசியது குறித்து விளக்கம் அளித்தார் கஸ்தூரி. ஆனால் அவர் மன்னிப்பு எதுவும் கேட்காததால் மீண்டும் பிரச்சனை பெரிதானது.
இதன் பின்னர் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு மன்னிப்பும் கேட்டார். அதே சமயம் கஸ்தூரி சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்தது தொடர்பாக சென்னை எழும்பூர் மற்றும் மதுரை காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் கோரி மனுதாக்கல் செய்திருந்த நிலையில் திடீரென தலைமறைவானார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் கஸ்தூரியின் பேச்சை வன்மையாக கண்டித்ததோடு அவருக்கு முன்ஜாமின் வழங்க மறுத்துவிட்டார். கஸ்தூரி தொடர்ந்து தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று திடீரென ஹைதராபாத்தில் வைத்து சென்னை போலீசாரல் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.