Rain Alert: சென்னையில் கொட்ட தொடங்கிய மழை.. மக்கள் என்ன செய்ய வேண்டும்?
அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு முழுவீச்சில் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. மீட்பு படையினர் தொடங்கி தன்னார்வலர்கள் வரை அனைவரும் களத்தில் இருப்பதாகவும், பொதுமக்கள் அச்சமின்றி இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு உதவ வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு தலைமைக்கழகம் கடிதம் எழுதியுள்ளது. மாவட்டம், ஒன்றியம், வட்டம், பகுதி கழக செயலாளர்கள் அனைவரும் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனமழை: சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசும் முழு வீச்சில் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து உருவான 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த நான்கு தினங்களில் விலகுகிறது.
இப்படியான நிலையில் அக்டோபர் 15 அல்லது 16 ஆம் தேதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். வழக்கமாக அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்கும் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குகிறது.இதனிடையே காற்றழுத்த தாழ்வு பகுதியாகும் பட்சத்தில் விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராணிப்பேட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 17 ஆம் தேதி வரை மழை தொடரும் நிலையில் அதன் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும் எனவும், அக்டோபர் 16 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 மாவட்ட மக்களும் சற்று பீதியடைந்துள்ளனர்.
Also Read: Chennai Rains: சென்னைக்கு ரெட் அலர்ட்.. ஒரே நாளில் 25 செ.மீ வரை மழை கொட்டப்போகுது… உஷார் மக்களே!
தயார் நிலையில் தமிழ்நாடு அரசு
அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு முழுவீச்சில் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. மீட்பு படையினர் தொடங்கி தன்னார்வலர்கள் வரை அனைவரும் களத்தில் இருப்பதாகவும், பொதுமக்கள் அச்சமின்றி இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு உதவ வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு தலைமைக்கழகம் கடிதம் எழுதியுள்ளது. மாவட்டம், ஒன்றியம், வட்டம், பகுதி கழக செயலாளர்கள் அனைவரும் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இதனிடையே அக்டோபர் 14 மற்றும் 15 ஆம் தேதி மீனவர்கள் அதிகம் காற்று வீசும் பகுதிக்கு சென்று மீன்பிடிக்க தடை வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் புதுச்சேரி மற்றும் வடதமிழகம் பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் அக்டோபர் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் இப்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Also Read: மழைக்காலத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா..?
பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?
- பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் அவசிய தேவையின்றி வெளியே வராதீர்கள்.
- மழை நேரத்தில் தோண்டப்பட்டுள்ள குழிகள் தெரியாத அளவுக்கு வெள்ள நீர் சூழலாம். அதனை அடையாளப்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் கவனமாக செல்லுங்கள்.
- அதேபோல மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை TN Alert என்ற செயலி மூலம் அறிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
- அதேசமயம் மழைக்கால புகார்கள் பற்றி சென்னை மக்கள் தெரிவிக்க “1913” என்ற எண்ணானது செயல்பாட்டில் இருக்கும்.
- கனமழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ளது. எனவே செல்போன்களுக்கு சார்ஜ் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
- மேலும் மின்சாரம் துண்டிக்கப்படும் நிலை ஏற்படும் என்பதால் மெழுகுவர்த்தி, பேட்டரி விளக்குகளை தயாராக வைத்திருங்கள்.
- மின்கம்பி அறுந்து விழுந்தால், மின் கசிவு உள்ளிட்ட புகார்களை உடனடியாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளையோ அல்லது புகார் தெரிவிக்க அறிவிக்கப்பட்ட எண்களையோ தொடர்பு கொள்ளுங்கள்.
- அத்தியாவசியமான உணவுப்பொருட்கள், பால் உள்ளிட்டவற்றை வாங்கி சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக குடிக்கவும், பிற உபயோகத்திற்கான தண்ணீரையும் சேகரித்து வைக்கவும்.
தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும் போதிய நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், 13,000 தன்னார்வலர்கள் மற்றும் அரசு தரப்பு என பலரும் தயாராக இருப்பதால் யாரும் அச்சப்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.