“வெள்ளி, திங்களில் தேர்தல் வைக்காதீங்க” காரணத்தை விளக்கிய தமிழிசை!
வெள்ளி, திங்கள் கிழமைகளில் தேர்தல் நடத்த கூடாது என்று பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழிசை பரபரப்பு புகார்:
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், ஒட்டுமொத்தமாக 69.46 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி உள்ளது. இந்த நிலையில் தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு நடத்தினார்.
தொடர்ந்து தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்திருக்கிறார்.இதனை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், “தென்சென்னை தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளோம். தென் சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியின் 13வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று புகார் மனு அளித்துளோம்.
இங்கு பூத் ஏஜென்டுகளை தாக்கிவிட்டு திமுகவினர் கள்ள ஓட்டு போட்டுள்ளனர். தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும். திமுகவுக்கு தோல்வி பயம் வந்ததால் மாற்றுப்பாதையை கடைபிடிப்பார்கள். சென்னையில் பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
உயிரோடு இருக்கும்போது அவர்களது பெயரை எப்படி நீக்குகிறார்கள். பாஜக வாக்காளர்கள் என்று தெரிந்துதான் பலரை நீக்கி உள்ளனர். கணவன் மனைவி பெயர் வேறு வேறு வாக்குச்சாவடிகளில் இடம் பெற்றுள்ளன.
மயிலாப்பூர் தொகுதியில் 13 வது வாக்குச் சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும். வெள்ளி, திங்கள் கிழமைகளில் தேர்தல் நடத்த கூடாது. அப்படி நடந்தால் சனி, ஞாயிறுடன் சேர்த்து விடுமுறையாக நினைத்து விடுகின்றனர். தேர்தலை வாரத்தின் நடுவில் புதன் கிழமை, வியாழன்கிழமை நடத்த வேண்டும்.
”வெள்ளி, திங்கள் கிழமைகளில் தேர்தல் நடத்த கூடாது”
வாக்காளர்கள் அனைவரது பெயரும் பட்டியலில் இருக்கிறதா என்பதை ஆணையம் கண்காணிக்க வேண்டும். 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற விளம்பரங்களால் எந்த பயனும் இல்லை.
டெண்டர் வாக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்கு போன்ற நடைமுறைகள் குறித்து வாக்காளர்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை. வாக்கு சதவீதம் குறைந்தாலும் எங்கள் வாக்குகள் அனைத்தும் எங்களுக்கு பதிவாகி இருக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
வாக்கு சதவீதம் குறைந்தது கவலை அளிக்க கூடியதுதான். வாக்காளர்கள் தங்களுக்கு வாக்குரிமை இருக்கிறதா என்பதை தாங்களே சரிபார்த்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறை உரிய பலன் தரவில்லை.
எனவே அலுவலகம் , ரயில் நிலையம், இணையதளம் மூலம் மாதிரி வாக்காளர் பட்டியல்களை மக்கள் சரிபார்த்து கொள்ளும் வகையில் கொண்டு வர வேண்டும்” என்றார்.