5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

S Ve Shekher: தமிழக பாஜகவை நம்புவது வீண்.. எஸ்.வி.சேகர் கடும் விமர்சனம்!

பாஜகவில் இருந்து முழுவதும் விலகி விட்டேன் எனக்கூறி அதிர்ச்சியளித்த அவர் பாஜகவில் இருந்து ஒரு பயனும் இல்லை என்பதால் விலகியதாகவும், தமிழக பாஜகவை நம்புவது வீண் எனவும் தெரிவித்தார்.  யாரும் பாஜகவை நம்ப வேண்டாம் எனவும் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். கடந்த 10 வருடங்கள் நான் பாஜகவில் இருந்து பட்டபாடு போதும். எனக்கு ஒரு கட்சியின் அடையாளம் தேவையில்லை. கட்சிக்குத்தான் என்னுடைய தேவை இருக்க வேண்டும் என நினைக்கிறேன் எனவும் தெரிவித்தார்.

S Ve Shekher: தமிழக பாஜகவை நம்புவது வீண்.. எஸ்.வி.சேகர் கடும் விமர்சனம்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 08 Nov 2024 19:53 PM

நடிகர் எஸ்.வி.சேகர்: தமிழக பாஜகவை நம்புவதே வீண் என நடிகரும், அரசியல் பிரமுகருமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்தவர் பல்வேறு அரசியல் விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது தமிழகத்தில் பிராமணர்களில் ஒரு சிலருக்கு மட்டும்தான் சலுகைகள் கிடைக்கவில்லை. அதனை இனப்படுகொலை நடக்கிறது எனக் கூறுவது தவறு என தெரிவித்தார். அதேசமயம் தமிழக பாஜகவிற்குள் தான் பிராமணர் மீது இனப்படுகொலை நடைபெற்று வருகிறது என குற்றம் சாட்டிய எஸ்.வி.சேகர் திமுக பிராமணர்களுக்கு நல்லது செய்யும் பட்சத்தில் அக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் எனவும் தெரிவித்தார்.

Also Read: Maharastra: தேர்தலில் ஜெயித்தால் தொகுதி இளைஞர்களுக்கு திருமணம்- வாக்குறுதி கொடுத்த வேட்பாளர்!

பாஜக மலரவே மலராது

மேலும் பாஜகவில் இருந்து முழுவதும் விலகி விட்டேன் எனக்கூறி அதிர்ச்சியளித்த அவர் பாஜகவில் இருந்து ஒரு பயனும் இல்லை என்பதால் விலகியதாகவும், தமிழக பாஜகவை நம்புவது வீண் எனவும் தெரிவித்தார்.  யாரும் பாஜகவை நம்ப வேண்டாம் எனவும் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். கடந்த 10 வருடங்கள் நான் பாஜகவில் இருந்து பட்டபாடு போதும். எனக்கு ஒரு கட்சியின் அடையாளம் தேவையில்லை. கட்சிக்குத்தான் என்னுடைய தேவை இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

மேலும் அரசியல் மற்றும் தரம் உள்ள எந்த இடத்திலும் அண்ணாமலையால் இருக்க முடியாது எனவும் எஸ்.வி.சேகர் கடுமையாக விமர்சித்தார். கடந்த 10 வருடங்களாக எனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. அதற்காக பாஜக எடுக்கும் படத்தில் எல்லாம் நடிக்க முடியுமா என கேள்வி எழுப்பிய எஸ்வி சேகர் தமிழ்நாட்டில் பாஜக மலரவே மலராது எனவும் தெரிவித்தார்.

நடிகை கஸ்தூரி குறித்து பேசிய எஸ்.வி.சேகர், “கஸ்தூரி பேசியது மிகப்பெரிய தவறு தான் என்றும், எனக்கு என்ன வேண்டும் என்று தான் கேட்க வேண்டுமே தவிர, அடுத்தவர்களைக் காட்டி பல விஷயங்களை பேசுவது ஒரு சமுதாய கூட்டத்தில் நல்லதல்ல” எனவும் தெரிவித்தார். எஸ்.வி.சேகர் பாஜக பற்றி விமர்சித்துள்ளது அக்கட்சி தொண்டர்களுக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: Thirumavalavan : “கொம்புசீவும் முயற்சி” கூட்டணி மாறுகிறாரா திருமாவளவன்.. பரபரப்பு விளக்கம்!

அண்ணாமலை பற்றி விமர்சனம்

முன்னதாக நேற்று முன்தினம் பேசிய எஸ்.வி.சேகர் தமிழக பாஜகவில் ஒரு பிராமணர் கூட இல்லாத நிலையை அண்ணாமலை கொண்டு வந்ததாக குற்றம் சாட்டினார். அதனால் தமிழ்நாட்டில் 25 ஆண்டுகள் ஆனாலும் பாஜக ஆட்சிக்கு வரவே முடியாது. அண்ணாமலை வாயை திறந்தாலே பொய் மட்டும் தான் பேசுகிறார். எப்போதும் திமுகவை திட்டிக் கொண்டிருந்தால் பாஜகவால் வளரவே முடியாது. அவர்கள் ஒழுங்காக ஆட்சி செய்யவில்லை என்றால் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்பார்கள்? பிராமணர் சமூகத்தை யாரும் பெரிய வாக்கு வங்கியாக பார்க்கவில்லை என கூறினார்.

7 சதவீதம் பிராமணர்கள் இருக்கும் நிலையில் அவர்களில் 50 சதவீதம் பேரிடம் கையில் செல்போன் கூட இல்லாத நிலைதான் உள்ளது. தினசரி கூலி வேலை, கட்டிட வேலை, புரோகிதம் போன்ற பணிகளைத்தான் அவர்கள் செய்கிறார்கள். ஜெயலலிதா இருந்தவரை 3 பேர் பிராமண சமூகத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் இருந்தனர். ஆனால் இப்போது ஒருவர் கூட இல்லை. பிராமணர் நல வாரியம் அமைப்போம் என திமுக அறிவித்தால் அவர்களுக்காக பிரச்சாரம் செய்வேன் என தெரிவித்திருந்தார்.

மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் மிக கடுமையாக இருக்கும் என கூறிய அவர், திமுக கொண்டு வந்துள்ள பெண்களுக்கான உரிமைத் தொகை திட்டம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என கணித்துள்ளார். அரசியல் களத்திற்கு விஜய் வந்திருக்கும் நிலையில் அவருக்கு மிகப்பெரிய கூட்டம் வந்துள்ளது. அதனை வாக்குகளாக மாற்ற வேண்டிய பொறுப்பு விஜய்க்கு உள்ளது. காமராஜர் மெரினாவில் கூட்டம் நடத்திய போது இது போன்று ஒரு லட்சம் பேர் அப்போது கூடினர். ஆனால் அந்த தேர்தலில் காமராஜர் ஒரு கல்லூரி மாணவரிடம் தோல்வி அடைந்தார். ஆகவே கூட்டத்திற்கும் வாக்குக்கும் சம்பந்தமில்லை என்பதை உணர வேண்டும். தமிழ்நாட்டில் தேர்தல் என்றாலே அதிமுக மற்றும் திமுக மட்டும் தான் மற்றவர்கள் யாரும் இல்லை எனவும் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.

Latest News