‘இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் தான்’ ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் காரசாரவாதம்..
இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் தான். இதை வீம்புக்காக சொல்வதாக நினைக்க வேண்டாம் என்று ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் வாதம் செய்தார்.
பாடல் பிரச்சினை
இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள 4 ஆயிரத்து 500 திரைப்பட பாடல்களை பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக இளையராஜாவுக்கும், எக்கோ மற்றும் அகி இசை நிறுவனங்களும் இடையே பிரச்சினை உள்ளது. இதுதொடர்பான மேல்மறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இசை நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜய் நாராயண் தன் வாதத்தில் கூறியதாவது:-
இசைஞானி
இசையமைப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட திரைப்படத்துக்காக தயாரிப்பாளரிடம் இருந்து ஊதியம் பெற்றவுடன், ராயல்டி பெறும் உரிமையைத் தவிர அனைத்து உரிமைகளையும் இழந்து விடுகின்றனர். காப்புரிமை சட்டத்தின் கீழ் இந்தப் பாடல்களின் உரிமையாளராக இளையராஜா வருவாரா? என்பதை வழக்கின் இறுதி விசாரணையில்தான் முடிவு செய்ய முடியும். இளையராஜா ஒரு இசைஞானி என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் 1970, 1980, 1990-ம் ஆண்டுகளில் அவரது பாடல்களுக்கு இருந்த ஈர்ப்பு தற்போது இல்லை.
வருமானக் கணக்கு
‘ஸ்பாட்டிபை’ என்ற ‘ஆப்’ மூலமாக இளையராஜா பெற்ற வருமானத்தை தனி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். அல்லது குறைந்தபட்சம் இந்த வருமானத்துக்கான கணக்குகளை இந்த ஐகோர்ட்டில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சதீஷ் பராசரன், ‘கணக்கை தாக்கல் செய்ய ஒரு இசையமைப்பாளருக்கு இவ்வாறு உத்தரவிட முடியாது’ என்றார்.
மேலானவர்
அதற்கு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், இளையராஜா எல்லோரையும்விட தான் மட்டுமே மேலானவர் என நினைக்கிறார் என்றார். அதற்கு மூத்த வக்கீல் சதீஷ் பராசரன், ‘‘ஆமாம், இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் தான். இதை வீம்புக்காக சொல்வதாக நினைக்க வேண்டாம் என காரசாரமாக வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.