ஹெச். ராஜா மீது 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு.. அமரன் பட பிரச்னை காரணமா?
H Raja booked under 4 sections of BNS: தமிழ்நாடு பா.ஜ.க ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கருத்துக்கு தன் எதிர்ப்பை பதிவு செய்திருந்தார் ஹெச். ராஜா.
பாபநாசம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ-வும், மனிதநேய மக்கள் கட்சித் தலைவருமான ஜவாஹிருல்லா அமரன் படம் குறித்து காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக்கூறுகளைக் கொண்ட இப்படத்தை பல தலைவர்களும் அதன் நுண்ணரசியல் அறியாமல் இப்படத்தை பாராட்டி இருப்பதும் வேதனைக்குரியது. இதை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும். திரைப்படத் துறையில் இருக்கும் திறமைமிக்க கலைஞர்கள் எடுத்த படங்களான மாநாடு, மாமனிதன், அயோத்தி, மேற்கு தொடர்ச்சி மலை, ஜெய் பீம் போன்ற படங்களின் இயக்குநர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாநாட்டு மேடையில் விருதளித்து கண்ணியப்படுத்தியுள்ளோம்
அமரன் படத்துக்கு எதிர்ப்பு
வெறுப்பை விதைக்கின்ற வரலாற்றைத் திரிக்கின்ற திரைப்படங்களின் மூலம் சமூக நல்லிணக்கத்தை பாழ்படுத்தும் வேலை திரைப்படத்துறையினர் இனியும் தொடரக்கூடாது என வலியுறுத்தி வேண்டுகிறோம்.
அண்மையில் வெளிவந்துள்ள அமரன் என்ற திரைப்படம் மண்ணுரிமைப் போராளிகளை தீவிரவாதிகளாக சித்திரம் தீட்டி அந்த வெறுப்பின் வீச்சை ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் மீதும் பரப்பும் நுண்ணிய கருத்தியல் பயங்கரவாதத்தை கைக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க : அமரன் படக்குழுவிற்கு சிக்கல்… ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மாணவர் நோட்டீஸ்
இஸ்லாமியர்களின் உயிர் தியாகம்
அடிமை இந்தியாவின் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடியதிலும் சுதந்திர இந்தியா சந்தித்த பல போர்க்களங்களிலும் தங்கள் இன்னுயிரை ஈந்து இம்மண்ணிற்காக களமாடிய பல்லாயிரம் முஸ்லிம்களின் வரலாறுகளைப் படித்து வெள்ளைகாரனுக்கு வால் பிடித்தும் கால் பிடித்தும் வாழ்ந்த கூட்டம் தேசப்பற்றை கற்றுக் கொள்ள வேண்டும்.
1965ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் திருமணமான சில நாள்களிலேயே பங்கேற்ற நமது ராணுவ வீரர் ஹவில்தார் அப்துல் ஹமீது பாகிஸ்தானில் 8 ராணுவ டாங்கிகளை சிதறடித்து விட்டு தனது இன்னுயிரை நீத்தார்.
அவருக்கு இந்திய அரசின் உயர் ராணுவ விருதான பரம்வீர் சக்கரா விருதும் வழங்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டின் அரசு ‘கெஜட்’டிலும் அவருக்கு புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
கார்கில் போரிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த குன்னூர் அப்துல் சத்தார் உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம்கள், நம் தமிழர்கள் நம் நாட்டிற்காக உயிர் துறந்துள்ளனர்” எனத் தெரிவித்து இருந்தார்.
ஹெச். ராஜா எதிர்வினை
ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.வின் இந்த அறிக்கைக்கு எதிர்வினையாற்றிய ஹெச். ராஜா, ஜவாஹிருல்லா மற்றும் வி.சி.க தலைவர் தொல். திருமாவளவனை தேச துரோகி எனக் கூறியதாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக மனித நேய மக்கள் கட்சி ஹெச். ராஜா மீது புகார் அளித்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
4 பிரிவுகளில் கீழ் வழக்கு
இதையடுத்து, சென்னை விமான நிலைய போலீசார் ஹெச். ராஜா மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 192, கலவரத்தை உண்டாக்கும் பேச்சு, பி.என்.எஸ் 196 (மதம், மொழி அடிப்படையில் பகைமையை உருவாக்குதல்) பி.என்.எஸ் 353 (அவதூறு பரப்புதல்) மற்றும் பி.என்.எஸ் (2) (தவறான தகவல், வதந்தி பரப்புதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க : நீங்க சங்கியா? ரஜினியுடன் என்ன பேசீனிங்க? சீமான் பதில்!