Tamil Nadu Year Ender 2024: தமிழகத்தை உலுக்கிய அரசியல் கொலைகள்.. 2024-ல் என்ன நடந்தது?
Tamil Nadu Political Murder : 2024ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பல அரசியல் கொலைகள் அரங்கேறியுள்ளன. அதிமுக, நாதக, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அடுத்தடுத்து அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், ஆளும் திமுகவுக்கு நெருக்கடியை கொடுத்தது.
2024ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பல அரசியல் கொலைகள் அரங்கேறியுள்ளன. அதிமுக, நாதக, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக ஒரு மாதத்தில் மட்டும் 3க்கும் மேற்பட்ட அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், ஆளும் திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதோடு, சட்டம் ஒழுங்கு பிரச்னையாகவும் உருவெடுத்தது. இதனால் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர். மேலும், அரசியல் கொலைகள் நடப்பதை தவிர்க்க திமுக அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்தாண்டு அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்ட விவரங்களை பார்ப்போம்.
ஆம்ஸ்ட்ராங் கொலை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூரில் வீடு கட்டி வந்தார். அங்கு தினமும் மாலை நேரத்தில் கட்டிட வேலைகளை பார்வையிடுவது வழக்கம். அதேபோல, கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு வீட்டிற்கு வெளியே நடக்கும் கட்டிட பணிகளை பார்வையிட்டு அங்கிருப்பவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது உணவு டெலிவரி ஊழியர்கள் போல் இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் வீட்டிற்கு வெளியே நின்றுக் கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏறபடுத்தியதோடு மட்டுமில்லாமல் சட்ட ஒழுங்கு பிரச்னையாக மாறியது. இந்த சம்பவம் தொடர்பாக செம்பியன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த சில மணி நேரத்திலேயே பிரபல கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் உள்ளிட்டோர் கைதாகினார்.
Also Read : தமிழக அரசியலில் தவிர்க்க முடியாதவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.. ஏன் தெரியுமா?
இவர்கள் அளித்த தகவலின்படி கைது நடவடிக்கை தொடர்ந்தது. இதுவரை 27 பேர் கைதாகி உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். சமீபத்தில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், முன்விரோதம் காரணமாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாக வளர்ந்ததால் அதனை தடுக்கவே கொலை நடந்ததாக கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் நிர்வாகி கொலை
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர் திசையன்விலை அருகே கரைசுத்துப் புதுரைச் சேர்ந்தவர். இவர் கடந்த மே 4ஆம் தேதி வீட்டில் பின்புறமுள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மே 2ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜெயக்குமார் தனிசிங், மீண்டும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது மகன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்த நிலையில், அவரது தோட்டத்தின் அருகில் எரிந்த நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் இவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் பிரமுகர்கள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்ந்த மர்மம் இருந்து வருகிறது.
நாதக நிர்வாகி கொலை
மதுரை மாவட்டத்தில் தல்லாகுளம் காவல்நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டார். இவர் நாம் தமிழர் கட்சி வடக்கு தொகுதியின் துணை செயலாளராக இருந்தார். இந்த நிலையில், இவர் கடந்த ஜூலை 16ஆம் தேதி காலையில் நடைபயிற்சி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் விரட்டி உள்ளனர். அப்போது கூச்சலிடப்படி ஓடிய பாலசுப்பிரமணியனை, மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.
Also Read : நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழை அலர்ட்.. வானிலை மையம் தகவல்!
இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பாலசுப்பிரமணியை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில், அவர் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 4 பேரை கைது செய்தது. சொத்து பிரச்னை, உறவினரால் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பாலசுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதிமுக நிர்வாகி கொலை
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (64). இவர் அதிமுக செயலாளராக இருந்தார். இந்த நிலையில், கடந்த ஜூலை 4ஆம் தேதி அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த இவரை, மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 9 பேரை கைது செய்தனர்.
திமுக கவுன்சிலர் கணவர் உட்பட 9 பேரை கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக சண்முகம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், ஜூலை 29ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் அதிமுக பிரமுகர் பத்மநாதன் காரில் வந்த மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இவர் கடலூர் 25வது வார்டு அதிமுக அவைத் தலைராக இருந்தார்.
சிவகங்கை அருகே ஆகஸ்ட் மாதத்தில் பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராக இருந்த செல்வகுமார் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவராக இருந்த ஜாக்சன் என்பவர் ஆறு பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் நவம்பர் 4ஆம் தேதி மாத்தூர் ஊராட்சி அதிமுக நாட்டாக்குடி கிளைச் செயலாளர் ஆர்.கணேசன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இப்படி தமிழகத்தில் அடுத்தடுத்து அரசியல் கொலைகள் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.