5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“கவனக்குறைவால் நடந்திச்சு.. மன்னிச்சிடுங்க” தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்.. டிடி தமிழ் விளக்கம்!

Tamil Thai Vazhthu Row: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கும் நிலையில், டிடி தமிழ் தொலைக்காட்சி மன்னிப்பு கேட்டுள்ளது.

“கவனக்குறைவால் நடந்திச்சு.. மன்னிச்சிடுங்க” தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்.. டிடி தமிழ் விளக்கம்!
ஆளுநர் ஆர்.என்.ரவி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 18 Oct 2024 20:31 PM

சென்னை தொலைக்காட்சி நிலையமான டிடி தமிழ் சார்பில் இந்தி மாத நிறைவு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி பாடப்படாததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

மன்னிப்பு கேட்ட டிடி தமிழ்

முன்னதாக இந்தி நிறைவு விழா கொண்டாடத்திற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இந்த சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற சொல் விடுபட்டதாக கூறப்படும் நிகழ்வு தற்போது தமிழகத்தில் பூதாகரமாகியுள்ளது.


இந்த நிலையில், இதற்கு  டிடி  தமிழ் மன்னிப்பு கேட்டிருக்கிறது.  இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சென்னை தூர்தர்ஷன் இன்று நடத்திய இந்தி மாத நிறைவு விழா மற்றும் பொன் விழாவின் ஒருபகுதியாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Also Read: “எனக்கு எதிராக இனவாத கருத்தா?” தமிழக முதல்வருக்கு ஆளுநர் ரவி பதிலடி!

தமிழ் தாய் வாழ்த்து பாடலின் போது கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியை தவறவிட்டு விட்டார். கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தமிழையோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை வேண்டும் என்று இதனை யாரும் செய்யவில்லை. இது தொடர்பாக, மாண்புமிகு தமிழக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்:

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி பதலளித்துள்ளார். அதன்படி, ”ஒரு பெருமைமிகு இந்தியன் என்ற முறையில், நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன்.

அதில், சமீபத்திய நடவடிக்கையாக வட கிழக்கு மாநிலத்தில் தமிழை பரப்ப அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுஹாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது.

தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதலமைச்சர் அவர்கள் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்.”  என்று கூறியுள்ளார்.

Also Read: “ஆளுநரா? ஆரியநரா?” தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு.. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

ஆளுநரும், தமிழக அரசும்..

மத்திய மாநில அரசுகளுக்கிடையே தொடர்ந்து போக்கு போக்கு நிலவுகிறது. மத்திய அரசின் பிரதிநிதிகளாக கருதப்படும் ஆளுநர்கள் மாநில அரசுடன் முட்டிட மோதி வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஆளுநருக்கு மாநில அரசுக்கும் கருத்து மோதல் நிலவி வருகிறது. நீட் விலக்கு மசோதா, சனாதனம் குறித்த பேச்சு என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆளுநருக்கு, மாநில அரசுக்கு மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

 

 

 

 

 

Latest News