TVK Vijay: “ஏதோ பேருக்கு வந்த கட்சி அல்ல” – தொண்டர்களுக்கு விஜய் எழுதிய முதல் கடிதம்.. மாநாடு குறித்து விளக்கம்! - Tamil News | Tamilaga vetri kazhagam leader Vijay writes letter to cadres for the first time | TV9 Tamil

TVK Vijay: “ஏதோ பேருக்கு வந்த கட்சி அல்ல” – தொண்டர்களுக்கு விஜய் எழுதிய முதல் கடிதம்.. மாநாடு குறித்து விளக்கம்!

Updated On: 

04 Oct 2024 10:26 AM

விஜய் கடிதம்: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு முதன் முதலாக கடிதம் எழுதியுள்ளார். வரும் அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் நிலையில், தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

TVK Vijay: “ஏதோ பேருக்கு  வந்த கட்சி அல்ல” - தொண்டர்களுக்கு விஜய் எழுதிய முதல் கடிதம்.. மாநாடு குறித்து விளக்கம்!

விஜய்

Follow Us On

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு முதன் முதலாக கடிதம் எழுதியுள்ளார். வரும் அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் நிலையில், தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “உங்களை நானும், என்னை நீங்களும் நினைக்காத நாளில்லை. அவ்வளவு ஏன்? நினைக்காத நிமிடம்கூட இல்லை. ஏனெனில், நம்முடைய இந்த உறவானது தூய்மையான குடும்ப உறவு. அந்த உணர்வின் அடிப்படையில்தான் இந்தக் கடிதம். அதுவும் முதல் கடிதம். தமிழ்நாட்டு மக்களுக்காக நாம் உழைக்க வேண்டும். இன்னமும் முழுமை பெறாத அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிரந்தரமாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.

தொண்டர்களுக்கு விஜய் கடிதம்:

அதை, அரசியல் ரீதியாக சட்டப்பூர்வமாக, உறுதியாக நிறைவேற்றிக் காட்ட வேண்டும். இதுதான், என் நெஞ்சில் நீண்ட காலமாக அணையாமல், கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே இருக்கும் ஒரு லட்சியக் கனல். இன்று, நமது முதல் மாநில மாநாட்டுக்கான கால்கோள் விழா இனிதே நடந்தேறி இருக்கிறது. இது மாநாட்டுத் திடல் பணிகளுக்கான தொடக்கம்.

ஆனால், நம் அரசியல் களப் பணிகளுக்கான கால்கோள் விழா என்பதும் இதில் உள்ளர்த்தமாக உறைந்து கிடக்கிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.  நம் மாநாடு எதற்காக என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே? நம் கழகத்தின் முதல் மாநில மாநாடு என்பது நம்முடைய அரசியல் கொள்கைப் பிரகடன மாநாடு.

Also Read: “இபிஎஸ் அண்ணன் OK சொன்னா போதும்” களத்தில் குதிக்கும் விஜய பிரபாகரன்

இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமெனில், இது நம்முடைய கொள்கைத் திருவிழா. அதுவும் வெற்றிக் கொள்கைத் திருவிழா. இப்படிச் சொல்லும்போதே, ஓர் எழுச்சி உணர்வு, நம் நெஞ்சில் தொற்றிக்கொள்கிறது. இது, தன் தாய்மண்ணை நிஜமாக நேசிக்கும் அனைவருக்கும் இயல்பாக நிகழ்வதுதான். இந்த வேளையில், ஒன்றே ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என விரும்புகிறேன். அதை நாம் எப்போதும் ஆழமாக மனத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

பொறுப்பான மனிதனைத்தான் குடும்பம் மதிக்கும். பொறுப்பான குடிமகனைத்தான் (Citizen) நாடு மதிக்கும். அதிலும் முன்னுதாரணமாகத் (Role model) திகழும் மனிதனைத்தான் மக்கள் போற்றுவர். ஆகவே, நம் கழகத்தினர் இம்மூன்றாகவும் இருக்க வேண்டும் என்பதே என் பெருவிருப்பம்.

மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி, மாநாட்டில் பங்கேற்பது வரை நம் கழகத்தினர் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்குவர் என்பதை இந்த நாடும் நாட்டு மக்களும் உணர வேண்டும். நாம் உணர வைக்க வேண்டும். நம் கழகம், மற்ற அரசியல் கட்சிகள் போல் சாதாரண இயக்கமன்று. இது ஆற்றல் மிக்கப் பெரும்படை. இளஞ்சிங்கப் படை. சிங்கப் பெண்கள் படை. குடும்பங்கள் இணைந்த கூட்டுப் பெரும்படை.

“ஏதோ பேருக்கு  வந்த கட்சி அல்ல”

ஆகவே, நம்மிடம் உற்சாகம் இருக்கலாம். கொண்டாட்டம் இருக்கலாம். குதூகலம் இருக்கலாம். ஆனால், படையணியினர் ஓரிடத்தில் கூடினால், அந்த இடம் கட்டுப்பாடு மிக்கதாக மட்டுமில்லாமல் பக்குவம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதையும் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா? களத்தில் தொடர்ச்சியாக நின்று வென்று காட்ட இயலுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளை நம் மீது வீசுவதில் அதீத விருப்பம் கொண்டவர்களாகச் சிலர் இருக்கின்றனர்.

இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டும்போதுதான் அவர்களுக்குப் புரியும். தமிழக வெற்றிக் கழகம் ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அன்று. வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றி காணப் போகின்ற கட்சி என்பதை நம்மை எடைபோடுவோரும் இனிமேல் புரிந்துகொள்வர்.

மக்கள் இயக்கமாக இருந்த நாம், மக்களோடு மக்களாக நின்று களமாடி, அரசியல் உரிமைகளை வென்றெடுக்கப் போகும் இயக்கமாக மாறிவிட்டோம். அரசியல் களப் பணிகள் வேறு. அதற்கான நடைமுறைகள் வேறு. ஆம். அரசியல் களத்தில் வேகமாக இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் விவேகமாக இருப்பது. மேலும், யதார்த்தமாக இருப்பதைவிட எச்சரிக்கையுடன் களமாடுவது இன்னும் அவசியம்.

இவை அனைத்தையும் உள்வாங்கி, உறுதியோடும் உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும் மாநாட்டுப் பணிகளைத் தொடங்கித் தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களின் பொறுப்பாளர்களும் அதுசார்ந்த சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றனர் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். நமது ஒற்றுமையே நமது வலிமை என்பதை நாட்டுக்கு உணர்த்தும் வகையில் மாநாட்டுப் பணிகளைத் தொடர வாழ்த்துகிறேன்.

Also Read: “சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவீர்கள்” உதயநிதி மீது பவன் கல்யாண் மறைமுக விமர்சனம்!

இந்நிலையில், மாநாட்டுக்கான நாட்களை மனம் எண்ணத் தொடங்கிவிட்டது. உங்களை வெகு அருகில் சந்திக்கப் போகும் சந்தோசத் தருணங்களை இப்போதே மனம் அளவிடத் தொடங்கிவிட்டது. வி.சாலை எனும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம். வெற்றி நிச்சயம்” என இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version