5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Vijay: திராவிடத்தை கையில் எடுத்த விஜய்.. பெரியார் திடலில் த.வெ.க தலைவர்!

பெரியார் பிறந்தநாள்: தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் உள்ள அவரது நினைவு இடத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் உடன் இருந்தார்.

TVK Vijay: திராவிடத்தை கையில் எடுத்த விஜய்.. பெரியார் திடலில் த.வெ.க தலைவர்!
த.வெ.க தலைவர் விஜய்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 17 Sep 2024 18:43 PM

தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் உள்ள அவரது நினைவு இடத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். பெரியார் திடலில் பூ மாலை வைத்து, பூக்களை தூவி விஜய் மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் உடன் இருந்தார். முன்னதாக, இன்று தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர்.

மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர்; சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்” என குறிப்பிட்டிருந்தார். கட்சியை தொடங்கிய உள்ள விஜய், பொது இடத்தில் ஒரு தலைவர் சிலைக்கு மரியாதை செலுத்துவது இதுவே முதல்முறையாகும்.

Also Read: புரட்டாசி தொடங்கிடுச்சு.. மழை எப்போது தெரியுமா? வானிலை மையம் சொன்ன தகவல்!

திராவிட இயக்க வழியில் விஜய்:

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை குறித்து வைத்து தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கி இருக்கிறார். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு சமூக பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மேலும், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தனது ஒவ்வொரு நகர்வையும் எடுத்து வருகிறார். அந்த வகையில் விஜய் சமீபத்தில் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார்.

நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவு தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்ப்டுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இவரது கொள்கை என்னவென்றும் எந்த பாதையில் பயணிப்பார் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கட்சி தொடங்கியதில் இருந்தே பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்ற கோட்பாட்டை அனைத்து மேடையிலும் விஜய் சொல்லி வருகிறார். மேலும், தமிழர், தமிழர் பெருமிதம், தமிழர்களின் கலாச்சாரம், தமிழ் மொழி என தமிழை முன்னிறுத்தியும் சொல்லி இருக்கிறார்.

கட்சியின் பெயரும் தமிழகம் என்று இருப்பதால், திராவிடம் என்ற சொல்லை விஜய் தவிர்க்கிறார் என்றும் திராவிட கொள்கையில் விலகி செல்ல நினைக்கிறாரா என்றும் அரசியல் விமர்சகர்கள் பலரும் கேள்வி எழுப்பினர். இப்படியான நிலையில் விஜய்யின் இன்றைய பதிவும், பெரியார் திடலுக்கு நேரடியாக வந்து விஜய் மரியாதை செல்லுத்தியதும் திராவிட சித்தாந்தத்தை கையில் எடுப்பதை உறுதிப்படுத்தி உள்ளார். முன்பாக அண்ணாவின் பிறந்தநாளுக்கு விஜய் வாழ்த்து கூறினார். இதன் மூலம், விஜய் என்ன மாதிரியான அரசியலை நோக்கி பயணிக்கப்போகிறார் என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார்.

த.வெ.க மாநாடு எப்போது?

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் அரசியல் மாநாடு வரும் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலை என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி காவல்துறையிடம் அனுமதி கோரி மனுவும் கொடுக்கப்பட்டிருந்தது.

Also Read: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. டைமிங் நோட் பண்ணிக்கோங்க பயணிகளே!

இதையடுத்து, காவல்துறையினரும் த.வெ.க மாநாடு நடத்துவது தொடர்பாக மொத்தம் 21 கேள்விகள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கும் காவல்துறை அனுமதி வழங்கியதாக தெரிகிறது. ஆனால், மாநாடு தேதி குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

அதேசமயம் மாநாட்டுக்கான பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், அக்டோபர் 15ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறும் என்று சுவர் விளம்பரங்களில் எழுதப்பட்டுள்ளது. இருப்பினும், மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ தேதியை கட்சி தலைவர் விஜய் இதுவரை அறிவிக்கவில்லை. அனைவரும் எதிர்பார்க்கப்படும் இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் குறித்தும் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அதை விஜய் வாசிப்பார் என்று கூறப்படுகிறது.

 

 

Latest News