Tamilisai Soundararajan: கட்சியில் பிரச்னையா? – நேராக தமிழிசை செல்லும் இடம் எது தெரியுமா?
எங்களை மாதிரி உயரம் குறைவாக, நிறம் குறைவாக இருப்பவர்களை தேர்வு செய்பவர்களை விட, நல்ல அழகாக இருப்பவர்களை தான் தேர்வு செய்வார்கள். அதனால் சிறிய வயதில் இருந்தே கொஞ்சம் புறக்கணிக்கப்பட்டவர்களாக தான் நாங்கள் இருக்கிறோம். ஆனால் கொஞ்சம் விவரம் தெரிந்த நாளில் இருந்தே சில விஷயங்களை மாற்ற முடிவு செய்தேன். அதன்படி நம்மால் நிறத்தை மாற்ற முடியாது. ஆனால் உடையின் நிறத்தை மாற்ற முடியும் என எண்ணி நன்றாக ஆடை அணிய வேண்டும் என சபதம் எடுத்துக்கொண்டேன்.
தமிழிசை சௌந்தரராஜன்: எந்த ஒரு களமாக இருந்தாலும் அதில் பெண்கள் சாதிப்பது என்பது தனி அழகு தான். அதிலும் அரசியல் என்றால் பெண்களெல்லாம் இதிலிருந்து என்ன செய்யப்போகிறார்கள் என கேலிப்பேச்சு எழும். இதனையெல்லாம் உடைத்து சாதிக்கும் மகளிர் படையினர் தொடர்ச்சியாக வருகை தந்து கொண்டிருக்கின்றனர். அப்படியாக தமிழ்நாட்டில் சமகால அரசியலில் தன் மீதான விமர்சனங்களை எல்லாம் தவிடுபொடியாக்கும் திறமை படைத்தவர் என்றால் அது தமிழிசை சௌந்தரராஜன் தான். குடும்பமே காங்கிரஸ் கட்சியின் விசுவாசியாக இருந்தாலும் இவர் மட்டும் பாஜகவின் முகமாக உள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர், தெலங்கானா மற்றும் பாண்டிச்சேரி ஆளுநர் பதவிகளை வகித்தவர். இப்போது பெரிய அளவில் பதவியில் இல்லை என்றாலும் முழு வீச்சில் அரசியல் களத்தில் விளையாடிக் கொண்டிருப்பவர். பொதுவாக பாஜகவை பிடிக்காதவர்களுக்கும் தமிழிசையை பிடிக்கும். சபை நாகரிகம், வார்த்தைகளில் கவனம், நையாண்டி கலந்த பதிலடி என அவரின் பேட்டிகள் ஒவ்வொன்றும் பிரபலம் தான். அப்படிப்பட்ட இரு நிகழ்வைப் பற்றி நாம் காணலாம்.
இப்படியான நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய அவர், நான் ஒரு ரகசியம் சொல்கிறேன். ரொம்ப குழப்பமாக இருந்தால், கட்சியில் பெரிய பிரச்னை இருந்தால் நான் செல்லக்கூடிய இடம் எதுவென்று கேட்டால் புடவை கடை தான். அந்த கடைக்குள் சென்று அங்கிருக்கும் வண்ண, வண்ண புடவைகளை பார்த்தால் கட்சியில் உள்ள பிரச்னைகள் எல்லாம் மறந்து போய்விடும். நானும் எனக்கு பிடித்த புடவைகளை வாங்கி விடுவேன். அதற்காக அடிக்கடி கட்சியில் பிரச்னை வர வேண்டும், புடவை கடைக்கு செல்ல வேண்டும் என நினைப்பவள் இல்லை. ஆனால் ஒரு ஆர்வம் உண்டு. அதில் ஒரு சுயநலமும் உண்டு என வைத்துக் கொள்ளலாம். நானெல்லாம் பள்ளி காலத்தில் இருந்தே நன்றாக டான்ஸ் ஆடுவேன், நடிப்பேன்.
ஆனால் எங்களை மாதிரி உயரம் குறைவாக, நிறம் குறைவாக இருப்பவர்களை தேர்வு செய்பவர்களை விட, நல்ல அழகாக இருப்பவர்களை தான் தேர்வு செய்வார்கள். அதனால் சிறிய வயதில் இருந்தே கொஞ்சம் புறக்கணிக்கப்பட்டவர்களாக தான் நாங்கள் இருக்கிறோம். ஆனால் கொஞ்சம் விவரம் தெரிந்த நாளில் இருந்தே சில விஷயங்களை மாற்ற முடிவு செய்தேன். அதன்படி நம்மால் நிறத்தை மாற்ற முடியாது. ஆனால் உடையின் நிறத்தை மாற்ற முடியும் என எண்ணி நன்றாக ஆடை அணிய வேண்டும் என சபதம் எடுத்துக்கொண்டேன். நேர்த்தியாக இருக்க வேண்டும் என விரும்பினேன். மருத்துவராக இருக்கும்போது கூட ஆடையில் நேர்த்தி வேண்டும் என நினைத்து செயல்படுவேன். அதனால் என்னிடம் சிகிச்சைப் பெறும் நோயாளிகள் கூட மருத்துவர் இன்னைக்கு என்ன ஆடையில் வருகிறார்கள் என எதிர்பார்ப்பார்கள் என தெரிவித்தார்.
நான் ஒருமுறை ஒரு புடவை அணிந்தால் அதனை மறுமுறை கட்ட கண்டிப்பாக ஓராண்டு எடுத்துக் கொள்வேன். நான் ரொம்ப நாளாக புடவைகளை சேமித்து வருகிறேன். அந்த அளவுக்கு என்னிடம் புடவைகள் உள்ளது. எத்தனை பீரோ இருக்கிறது என சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது. புடவைக்கு ஏற்ற மாதிரி அணிகலன்களும் உள்ளது. புடவை வாங்கும்போதே அதற்கான அணிகலன்களும் நியாபகம் வந்து விடும். சின்ன வயதில் இருந்தே அப்படியான பழக்கம் என்னிடம் உள்ளது. நான் கட்சியையும், கொள்கையும் மாற்றியது கிடையாது. மற்றபடி புடவை, அணிகலன்கள் எல்லாம் மாற்றுவேன். தெலங்கானாவில் ஆளுநர் ஆன பிறகு தான் கலர் கலராக வளையல் போடும் பழக்கம் இருந்தது. தமிழ்நாட்டில் அப்படி இல்லை. ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரை சுற்றி ஏராளமான வளையல் கடைகள் இருக்கும். அதில் கண்ணாடி வளையல் தொடங்கி கல் வைத்த வளையல் வரை விதவிதமாக கிடைக்கும் என தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்திருப்பார். இதனைப் பார்த்த பலரும் தமிழிசையின் இன்னொரு பக்கம் அறிந்து வியப்படைந்துள்ளனர்.