”வன்முறைக்கு இடமில்லை” பாபா சித்திக் சுட்டுக் கொலை.. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்! - Tamil News | tamilnadu cm mk stalin strongly condemns brutal muder of baba siddique maharastra tamil news | TV9 Tamil

”வன்முறைக்கு இடமில்லை” பாபா சித்திக் சுட்டுக் கொலை.. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

Baba Siddique Murder: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குடிமைச் சமூகத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்களுக்கு இடமில்லை. இவை கடும் கண்டனத்துக்குரியவை ஆகும் என்றார்.

”வன்முறைக்கு இடமில்லை பாபா சித்திக் சுட்டுக் கொலை.. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

பாபா சித்திக் (picture credit: PTI)

Updated On: 

13 Oct 2024 15:41 PM

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) தலைவர் பாபா சித்திக் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். குடிமைச் சமூகத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்களுக்கு இடமில்லை. இவை கடும் கண்டனத்துக்குரியவை ஆகும். பாபா சித்திக் அவர்களின் குடும்பத்தாருக்கும் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

குவியும் கண்டனங்கள்:

மேலும், பாபா சித்திக் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், “பாபா சித்திக் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த பயங்கரமான சம்பவம் மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதை அம்பலப்படுத்துகிறது. இதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.


நீதி வெல்ல வேண்டும்” என்றார். மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், “முன்னாள் மகாராஷ்டிர அமைச்சர் பாபா சித்திக் உயிரிழந்தது வார்த்தைகளால் சொல்ல முடியாத அதிர்ச்சி. துயரத்தின் இந்த நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், மற்றும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். குற்றவாளிகளை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்” என்றார்.

Also Read: மும்பையில் என்.சி.பி தலைவர் பாபா சித்திக் சுட்டுக்கொலை.. பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பா? தீவிர விசாரணையில் போலீசார்..

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், “மகாராஷ்டிர மூத்த தலைவர் பாபா சித்திக் கொலைச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. தொடர்ந்து நடக்கும் இதுபோன்ற குற்றச் சம்பவங்களுக்கு என்ன பெயர் வைப்பீர்கள்? மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நடக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாபா சித்திக் கொலை:

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் பாந்த்ரா கிழக்கு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாபா படுகொலை செய்யப்பட்டார்.  மகாராஷ்டிராவில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்கும் சூழலில் முக்கிய தலைவர் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாரின் கூற்றுப்படி, மூன்று பேரை அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மூவரின் இரண்டு பேரை இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஹரியானாவைச் சேர்ந்த குர்மாயில் பல்ஜித் சிங் (23), உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தரம்ராஜ் காஷ்யப் (19), சிவ குமார் கவுதம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Also Read: உத்தரகாண்ட் சிறையில் நடந்த ராமாயண நாடகம்.. தப்பி ஓடிய 2 கைதிகள்.. தேடுதல் வேட்டையில் போலீசார்..

இந்த சம்பவத்தின் பின்னணியில் பிஷ்னோய் கும்பல் இருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. குற்றப்பிரிவு ஆதாரங்களின்படி, முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிஷ்னோய் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.

குற்றவாளிகள் கடந்த ஒரு மாதமாக குர்லா பகுதியில் வாடகை வீட்டில் வசித்துள்ளதாகவும், பாபா சித்திக்கை கொன்று மூன்று பேருக்கும் ரூ.50,000 கொடுக்கப்பட்டு திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பாபா சித்திக் படுகொலையைத் தொடர்ந்து அவரது நெருங்கிய நண்பரான நடிகர் சல்மான் உள்ளிட்டோர் வீடுகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா?
ஆப்பிள் ஐபோன் 13-க்கு ரூ.7,000 தள்ளுபடி வழங்கும் அமேசான்!
பெருஞ்சீரகம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?