TREK Tamilnadu: வேற லெவல்.. தமிழ்நாட்டில் 40 இடங்களில் ட்ரெக்கிங் போகலாம்.. முன்பதிவு செய்வது எப்படி? - Tamil News | tamilnadu goverment launches 40 trekking packages check the details | TV9 Tamil

TREK Tamilnadu: வேற லெவல்.. தமிழ்நாட்டில் 40 இடங்களில் ட்ரெக்கிங் போகலாம்.. முன்பதிவு செய்வது எப்படி?

மலையேற்றத் திட்டம் (TREK TAMIL NADU) மற்றும் இணைய வழி மலையேற்ற முன்பதிவு தளத்தை தமிழக அரசு இன்று துவங்கி வைத்து உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 40 அழகிய, மலையேற்ற வழித்தடங்களை உள்ளடக்கிய 'தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தினை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

TREK Tamilnadu: வேற லெவல்.. தமிழ்நாட்டில் 40 இடங்களில் ட்ரெக்கிங் போகலாம்..  முன்பதிவு செய்வது எப்படி?

மலையேற்றத் திட்டம்

Updated On: 

24 Oct 2024 17:54 PM

மலையேற்றத் திட்டம் (TREK TAMIL NADU) மற்றும் இணைய வழி மலையேற்ற முன்பதிவு தளத்தை தமிழக அரசு இன்று துவங்கி வைத்து உள்ளது. தமிழக அரசு சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பல்வேறு சுற்றுலா தளங்களை அமைத்து வருகிறது. மேலும், சென்னை, கோவை, மதுரை என பெரு நகரங்களிலும் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய  அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  அதாவது,  மலையேற்றத் திட்டம் (TREK TAMIL NADU) மற்றும் இணைய வழி மலையேற்ற முன்பதிவு தளத்தை தமிழக அரசு இன்று துவங்கி வைத்து உள்ளது.

தமிழக அரசின் மலையேற்ற திட்டம்:

தமிழ்நாட்டில் உள்ள 40 அழகிய, மலையேற்ற வழித்தடங்களை உள்ளடக்கிய ‘தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தினை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழ்நாடு வன அனுபவக் கழகம் (TNWEC) மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் (TNFD) கூட்டு முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் தமிழ்நாட்டின் வனம் மற்றும் வன உயிரினப் பகுதிகளில் நிலையான முறையில் மலையேற்றம் மேற்கொள்வதை ஒரு நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும், வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பிற்கு வலுசேர்க்கும் விதமாக இந்த ‘தமிழ்நாடு மலையேற்ற திட்டம்’ வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Also Read: தீபாவளி விடுமுறை.. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!

வனப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள உள்ளூர் மக்களை இத்திட்டத்தில் அதிக அளவில் ஈடுபடுத்தும் இம்முயற்சி மாநிலத்தில் சூழல் சுற்றுலாவை வலுப்படுத்துவதற்கான ஒரு முன்னெடுப்பாகும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், வாகன பயன்பாடு இல்லாத குறைந்த கார்பன் தடம், நிலைத்தன்மை கொண்ட சுற்றுலாவை ஊக்குவிப்பது, சூழல் சுற்றுலாவை மேம்படுத்துதல் மற்றும் பசுமைச் சூழல் பாதுகாப்பதில் நோக்கம் என்று அரசு தெரிவித்துள்ளது. இயற்கை ஆர்வலர்களை மகிழ்விக்கும் விதமாக, இந்திய நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு அரசு 40 தேர்ந்தெடுக்கப்பட்ட மலையேற்ற பாதைகளை பொது மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

40 மலையேற்ற பாதைகள்:

நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியகுமரி, தென்காசி, நெல்லை, தேனி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், திருவள்ளூர் ஆகிய 14 மாவட்டங்களில் உள்ள மலையேற்றப்பாதைகள், தமிழ்நாடு வனத்துறையால் தமிழ்நாடு வன மற்றும் உயிரின (மலையேற்ற ஒழுங்குமுறை) விதிகள் 2018-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மலையேற்ற வழிகாட்டிகளாக காடுகள் குறித்த பாரம்பரிய அறிவைக் கொண்ட, 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின மற்றும் வனங்களை ஒட்டியுள்ள கிராமங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு, மலையேற்ற வழிகாட்டிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

இவர்களுக்கு வன ஒழுக்கம், திறன் மேம்பாடு, முதலுதவி, விருந்தோம்பல் மற்றும் சுகாதாரம், பல்லுயிர் பாதுகாப்பு போன்றவற்றில் போதுமான தொழில்முறை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட வழிகாட்டிகளுக்கு சீருடைகள், மலையேற்றக் காலணிகள், முதுகுப்பை, தொப்பி, அடிப்படை முதலுதவிப் பெட்டி, தண்ணீர் குடுவை, வெந்நீர் குடுவை, மலையேற்றக் கோல், தகவல் தொடர்பு சாதனங்கள், விசில் மற்றும் திசைக்காட்டி ஆகியவை அடங்கிய மலையேற்ற பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

முன்பதிவு செய்வது எப்படி?

இத்திட்டத்தின் கீழ் மலையேற்றம் மேற்கொள்ளும் அனைத்து பங்கேற்பாளர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்குக்கும் காப்பீடு வழங்கப்படுகிறது. பழங்குடியின மற்றும் வனங்களை ஒட்டியுள்ள மக்கள் நிலையான வருமானம் ஈட்டவும் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் இந்த முன்னெடுப்பு உதவும் என்று தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் மலையேற www.trektamilnadu.com என்ற பிரத்யே இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு வலைதளத்தின் மூலம் மலையேற்றம் மேற்கொள்பவர்கள் தங்கள்
முன்பதிவினை எளிதாக செய்ய உதவும் வகையில் புகைப்படம், காணொளிக்காட்சிகள், 3D அனிமேஷன். மலையேற்ற பாதைகள் தொடர்பான அத்தியாவசிய விவரங்கள், விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதன் மூலம் மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இணையவழி
பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு மலையேற்றத்திற்கான நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் மழை.. 18 மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை..

கட்டுப்பாடுகள்:

18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மலையேற்றத்திற்கான முன்பதிவு மேற்கொள்ளலாம். 18 வயதிற்குட்பட்டவர்கள் பெற்றோர் / பாதுகாவலரின் ஒப்புதல் கடிதத்துடன் மலையேற்றம் மேற்கொள்ளலாம். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் (எளிதான மலையேற்ற பாதைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்) பெற்றோர் அல்லது பாதுகாவலரின் துணையோடு மட்டுமே
அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.40,000-க்கு விற்பனை செய்யப்படும் ஆப்பிள் ஐபோன் 13!
அதிகளவில் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்..?
இந்த ஹேண்ட்சம் சிறுவன் யார் தெரியுதா?
தங்க நிற உடையில் மின்னும் நடிகை பூஜா ஹெக்டே!