ADMK Protest: திமுக அரசை கண்டித்து அக்டோபர் 9 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.. - Tamil News | tamilnadu opposition leader edapadi palanisamy announced fasting protest against the ruling dmk government on october 9 | TV9 Tamil

ADMK Protest: திமுக அரசை கண்டித்து அக்டோபர் 9 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..

Published: 

28 Sep 2024 12:27 PM

தமிழக இளைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் என்று 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் அரசுத் துறைகளில் 5.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்பது உள்ளிட்ட திமுக-வின் தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADMK Protest: திமுக அரசை கண்டித்து அக்டோபர் 9 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..

கோப்பு புகைப்படம்

Follow Us On

வரும் 9 ஆம் தேதி மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ தமிழக இளைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் என்று 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் அரசுத் துறைகளில் 5.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்பது உள்ளிட்ட திமுக-வின் தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும்;

இளைஞர்கள், பெண்கள் நலனை முன்னிறுத்தி கழக ஆட்சிகளில் செயல்படுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம், மாணவர்களுக்கு மடிக் கணினி உள்ளிட்ட அம்மா அரசில் செயல்படுத்தப்பட்ட பல முத்தான திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நிறுத்தியதைக் கண்டித்தும்; உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி முல்லைபெரியாறு அணையை 152 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும்;

தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்தும்; அதிகரித்து வரும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தையும், அதனால் ஏற்படும் சமூக விரோத குற்றங்களை கட்டுப்படுத்தத் தவறிய ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்தும், கழக புரட்சித் தலைவி பேரவை சார்பில், மதுரை மாவட்டத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.

Also Read: 1,497 காலிப் பணியிடங்கள்.. டிகிரி முடித்திருந்தால் போதும்.. உடனே செக் பண்ணுங்க!

பதவியேற்று இந்த 40 மாத காலத்தில், மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து செயல்படாமல், மக்கள் மத்தியில் மாயத் தோற்றத்தை உருவாக்கி தனது குடும்பத்தினை மட்டுமே கருத்தில்கொண்டு செயல்பட்டு வருவது, தமிழக மக்களுக்கு செய்து வரும் மாபெரும் துரோகமாகும். ஸ்டாலினின் திமுக அரசின் இத்தகைய அலட்சியப் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  • திமுக-வின் தேர்தல் வாக்குறுதி எண். 185-ன்படி, இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு 2021 முதல் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் என்ற அளவில், 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும்;
  • திமுக-வின் தேர்தல் வாக்குறுதி எண்கள். 187, 188, 189, 190, 191-ன்படி தமிழ் நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களுக்கும்; அனைத்து நீர்வளங்கள், வனம் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், கண்காணிக்கவும்; அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு சொந்தமான சொத்துக்களை கண்காணித்து பாதுகாக்கவும் என அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5.50 லட்சம் பணி இடங்களில் இளைஞர்களும், பெண்களும் பணியமர்த்தப்படுவார்கள் என்று அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும்;
  • திமுக-வின் தேர்தல் வாக்குறுதி எண். 159-ன்படி, தமிழ் நாட்டில் உள்ள பள்ளிகளில் பயின்று தமிழகக் கல்லூரிகளில் பட்டப் படிப்பை மேற்கொள்ள வங்கிக் கடன் பெற்ற தமிழக மாணவர்களின் கல்விக் கடனை, அரசே ஏற்று திருப்பிச் செலுத்தும் என்று அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும்;
  • திமுக-வின் தேர்தல் வாக்குறுதி எண். 42-ன்படி, 100 நாள் ஊரக வேலை நாட்கள் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்று அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும்;
  • மடிக் கணினி வழங்கும் திட்டம் 2011-ஆம் ஆண்டு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, அம்மா அவர்களின் நல்லாசியோடு நடைபெற்ற எனது தலைமையிலான கழக ஆட்சிக் காலம்வரை 52 லட்சம் மாணவ, மாணவியர்களுக்கு மடிக் கணினி வழங்கும் திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திரு. ஸ்டாலினின் திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளதை மீண்டும் நடைமுறைப்படுத்திட வலியுறுத்தியும்;
  • பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக, மாண்புமிகு அம்மா அவர்களால் 2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்’ மற்றும் ‘வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம்’ முதலானவை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ரத்து செய்ததை மீண்டும் நடைமுறைப்படுத்திட வலியுறுத்தியும்
  • திமுக அரசு, ஆட்சிக்கு வந்த 40 மாத காலத்தில், பள்ளி, கல்லூரிகளில் பயில்கின்ற மாணவ சமுதாயம் மற்றும் இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை சீரழிக்கின்ற வகையில், போதைப் பொருட்களின் பெருக்கத்தையும், அதனால் ஏற்படும் சமூக விரோத குற்றங்களையும் தடுக்கத் தவறி; தமிழ் நாட்டை போதைப் பொருட்களின் கேந்திரமாக மாற்றியுள்ள அவல நிலையை நாட்டு மக்களிடத்தில் தோலுரித்துக் காட்டிடவும்;
  • தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தத் தவறிய திரு. ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்தும்;
  • ஐந்து தென் மாவட்டங்களில் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற ஆணையின்படி அம்மாவின் ஆட்சியில் 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. எங்களது ஆட்சிக் காலத்தில் பேபி அணையினை பலப்படுத்தி, அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் பணிகள் தொடர்ந்த நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஸ்டாலினின் திமுக அரசு பேபி அணையை பலப்படுத்தி, உச்சநீதிமன்ற ஆணைப்படி 152 அடிவரை தண்ணீர் தேக்கி வைக்க முறையான நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும்,
  • வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் வெளிநாட்டுத் தொழில் முதலீடுகள் குறித்தும்; அது தொடர்பான முழு விவரங்கள் குறித்தும், வேலை வாய்ப்புகள் குறித்தும்; வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக புரட்சித் தலைவி பேரவை சார்பில், 9.10.2024-புதன் கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை, “மதுரை பழங்காநத்தம், ஜெயம் தியேட்டர், MGR திடலில்” கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு. R.B. உதயகுமார், M.L.A., அவர்கள் தலைமையில், கழக புரட்சித் தலைவி பேரவை மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் முன்னிலையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஆலிவ் ஆயிலின் நன்மைகள்..!
சருமத்திற்கு பல நன்மைகளை தரும் கற்றாழை..!
புதினாவை தினமும் மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்
Exit mobile version