Thirumavalavan : “கொம்புசீவும் முயற்சி” கூட்டணி மாறுகிறாரா திருமாவளவன்.. பரபரப்பு விளக்கம்!
விசிக-திமுக: திமுக கூட்டணியில் தான் தொடர்வோம் என்றும் அதில் உறுதியாக இருக்கிறோம் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், திட்டமிட்டே நம்மீது அய்யத்தை எழுப்புவோர் திமுகவுக்கு மட்டுமல்ல; விசிகவுக்கும் நமது கூட்டணிக்கும் பகையானவர்களேயாகும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக கூட்டணியில் தான் தொடர்வோம் என்றும் அதில் உறுதியாக இருக்கிறோம் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதுகுறித்து திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “சந்தேகம் கிளப்பும் சதி அறிவோம். என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே, வணக்கம். அண்மைக் காலமாக அரசியலரங்கில் நம்முடைய நிலைப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பொதுவெளியில் தொடர் உரையாடல்கள் நிகழ்ந்து வருகின்றன. பல்வேறு ஊகங்களின் அடிப்படையில் அவை நிகழ்கின்றன. நம்மை ஆதரித்தோ எதிர்த்தோ ஊடகத்தளங்களில் பல்வேறு தரப்பினர் பேசி வருகின்றனர். அதாவது, அரசியலடிப்படையில் நாம் குறி வைக்கப்பட்டிருக்கிறோம்.
கூட்டணி மாறுகிறாரா திருமாவளவன்?
அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. நாம் ஆளுங்கட்சி திமுக தலைமையிலான “மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில்” இடம் பெற்றிருப்பது ஒரு காரணம். அதுவே முதன்மையான காரணமாகும். இக்கூட்டணியைச் சிதறடிக்கத் திட்டமிடுவோர் நம்மை ஒரு கருவியாகப் பயன்படுத்த முனைகின்றனர்.
அவர்கள் யாவரென கேள்வி எழுவது இயல்பேயாகும். குறிப்பாக, திமுக’வைப் பிடிக்காதவர்கள்,
திமுக கூட்டணியின் கட்டுக்கோப்பைக் கண்டு எரிச்சலடையக் கூடியவர்கள், நம்மையும் அறவே வெறுப்பவர்கள் போன்ற சக்திகள் தாம். இவர்களில் கட்சி அடையாளமில்லாத ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உள்ளனர்.
2026-இல் நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும் இந்தக் கூட்டணி வெற்றிப் பெறுவதற்கு அவர்கள் எங்ஙனம் அனுமதிப்பர்? எப்படியாவது கூட்டணியைச் சிதறடித்து நமது வெற்றியைத் தடுக்க வேண்டுமென்பதுதான் அவர்களின் ஒற்றை நோக்கமாகும். அவர்கள் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு அடையாளங்களில் இயங்கினாலும் அவர்களின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். நமது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சிதறடிப்பது மட்டும் தான்.
Also Read : தமிழ்நாடு திரும்பும் அண்ணாமலை.. பாஜகவின் அடுத்த கட்ட திட்டம் என்ன?
“கொம்புசீவும் முயற்சி”
அவர்களின் இந்த நோக்கத்தை நிறைவேற்ற அவர்கள் கையாளும் உத்திகளுள் ஒன்றுதான், திமுகவுக்கும் திமுக கூட்டணியிலுள்ள பிற கட்சிகளுக்கும் இடையில் கொம்புசீவும் முயற்சியாகும். அத்தகைய முயற்சிகளில் அவ்வப்போது ஈடுபட்டுவருகின்றனர்
குறிப்பாக, திமுக – விசிக இடையே உரசலை உருவாக்குவதில் தீவிரம் காட்டுகின்றனர்.
மக்கள் பிரச்சினைகளின் அடிப்படையில் நாம் குரலெழுப்புகிறபோதெல்லாம் ஆளுங்கட்சி மற்றும் அதிகாரிகளோடு இயல்பாக எழும் சின்னஞ்சிறு முரண்களையும்கூட கூர்தீட்டுவதில் அதிவேகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். அத்தகைய சதிச் செயல்களுக்கு ஏராளமான சான்றுகள் உண்டு.
இவ்வாறு நம்மைப் பற்றி இழித்தும் குறைத்தும் மதிப்பீடு செய்வதற்கு அவர்கள் கையாளும் அளவுகோள் தான் என்ன? ஆதாயம் கருதி அங்குமிங்கும் அல்லாடும் அற்ப அரசியல் செய்யும் சராசரி பேர்வழிகள் என்று நம்மைக் கருதுகிறார்களா?
Also Read : கனமழை.. திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
“திமுக கூட்டணியில் தொடர்வோம்”
திட்டமிட்டே நம்மீது அய்யத்தை எழுப்புவோர் திமுகவுக்கு மட்டுமல்ல; விசிகவுக்கும் நமது கூட்டணிக்கும் பகையானவர்களேயாகும். அத்தகைய நயவஞ்சக சக்திகளின் நாசகார சீண்டலுக்கும் தூண்டலுக்கும் நாம் இரையாகிவிடக்கூடாது.
தோழமை கட்சிகளோடு இணைந்து நாம் உருவாக்கிய கூட்டணியில்தான் தொடர்கிறோம்! உறுதியாகத் தொடர்வோம். இதனை யார் புரிந்துகொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் தெளிவுற புரிந்துகொள்ள வேண்டும்.
குழப்பம் தேவையில்லை. “ஆட்சியதிகாரத்தில் பங்கு” என்பது விளிம்புநிலை மக்களை அதிகார வலுவுள்ளவர்களாக மேம்படுத்துவதற்கான ஒரு அரசியல் நிலைப்பாடு! அதனை வென்றெடுப்பதற்கு நம்மை நாமே கட்டமைப்பு மற்றும் கருத்தியல் அடிப்படையில் இன்னும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. அவற்றில் நம் கவனம் குவிப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.